Friday, November 03, 2006

சரியில்லை. ஆனாலும் வழியில்லை Flash player 9 for GNU/Linux

இதற்கு முந்தைய பதிவொன்றில் flash player மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களுக்கு இல்லாதிருந்தமையால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் மாற்று வழிமுறை பற்றி சொல்லியிருந்தேன்.

இப்போது அந்த மென்பொருளின் ஒன்பதாம் பதிப்பு சோதனைப்பதிப்பாக க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்க்கு கிடைக்கிறது.

தனியுரிமை மென்பொருளாக இருக்கிற, மூடிய ஆணைமூல flash மென்பொருட்கள் எமக்கு கிடைப்பதை இட்டு மகிழ்வதற்கு எதுவுமில்லை. உண்மையில் இது க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை தத்துவரீதியாக மாசுபடுத்தி பலவீனப்படுத்தவே உதவும்.

இருந்தாலும் flash இணைய உலகை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தொழிநுட்பம்.

மிக அண்மையில் இணையத்தில் நிகழ்ந்த புரட்சிகர மாற்றமான நிகழ்பட பகிர்வு வலையமைப்புக்கள் ( Video Sharing Networks) தமது வினைத்திறன் மிக்க தொழிநுட்ப அடிப்படையாக flash தொழிநுட்பத்தையே கைக்கொள்ளுகின்றன.

flash தவிர்க்கமுடியாததாக மாறிக்கொண்டிருப்பதால்தான் கட்டற்ற flash மென்பொருட்களை உருவாக்கும் முயற்சியை கட்டற்ற மென்பொருள் அமைப்புக்கள் வலுவாக ஆதரிக்கின்றன.

----

flash 9 இன் சோதனைப்பதிப்பை உங்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக்கொள்வது மிக இலகுவானது.

பின்வரும் படிமுறைகளை பின்பற்றினால் சரி.

1. flash 9 Mozilla plug in இனை இங்கே தரவிறக்கிக்கொள்ளுங்கள்

2. நெருக்கப்பட்ட அந்த பொதியினை tar zxvf FP9_plugin_beta_101806.tar.gz ஆணையினை பயன்படுத்தி பிரித்தெடுத்துக்கொள்ளுங்கள்

3. பிரித்தெடுக்கப்பட்டபின்னர் உங்களுக்கு libflashplayer.so என்ற கோப்பு கிடைக்கும்

4. அக்கோப்பினை உங்கள் /home அடைவில் உள்ள .mozilla எனும் மறைக்கப்பட்ட அடைவினுள் plugins என்ற உப அடைவினுள் போட்டுக்கொள்ளுங்கள். அப்படி ஒரு அடைவு இல்லாவிட்டால் அதனை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

5. Mozilla அல்லது Firefox உலாவியினை நிறுத்தி மீண்டும் தொடக்கிக்கொள்ளுங்கள்.

(மேலதிக விளக்கங்களுக்கு read me கோப்பினை படிக்கவும்.)

இப்போது நீங்கள் flash 9 இனை பயன்படுத்தி அமைப்பட்டிருக்கும் வலைத்தளங்களை நிகழ்படங்களை பார்வையிட முடியும்.

metacafe நிகழ்பட பகிர்வு வலைத்தளத்தில் flash 9 மூலம் காண்பிக்கப்படும் நிகழ்படத்தை பார்வையிடுவதை இந்த படம் காண்பிக்கிறது.



இம்முறை அடோப் நிறுவனம் standalone flash player இனையும் க்னூ/லினக்சுக்கு தருகிறது.
இந்த தனித்தியங்கும் flash இயக்கிதான் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது.

flash கொப்புக்களை (swf போன்றன) இந்த இயக்கி மூலம் நீங்கள் பார்வையிடலாம். ஆனால் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நீங்கள் பார்வையிடும் கோப்புக்களை projector பவிவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதுதான்.

இது இவ்வளவு நாளும் வின்டோஸ் இயங்குதளத்துக்கு இருந்தது.

flash கோப்புக்களை exe .கோப்புக்களாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அந்த .exe கோப்பினை இயக்குவதன்மூலம் flash player இல்லாத கணினிகளில் கூட அவற்றை நீங்கள் பார்வையிட முடியும்.


இப்போது இந்த வசதி எமக்கும் கிடைத்திருக்கிறது.

எமக்கு .exe இல்லையே/ எப்படி இது நிகழும்?

எமக்கு flash கோப்புக்களை இருமக்கோப்புக்களாக (binaries) சேமிக்கும் வசதியை தந்திருக்கிறார்கள். இயக்கக்கூடிய இருமக்கோப்புக்கள் ( executable binaries).

இவ்வாறு சேமிக்கபப்டும் இருமக்கோப்புக்களிலுள்ள flash நிகழ்படத்தை flash player இல்லாத க்னூ/லினக்ஸ் கணினிகளில் கூட ./ ஆணையை பயன்படுத்தி இயக்குவதன்மூலம் பார்வையிடலாம்.
மிக நல்ல வசதி தானே?

எனக்கு உண்மையிலேயே இது ஆர்வமூட்டுகிறது.

பின்வரும்படம், இவ்வாறான இருமக்கோப்புுக்கள் flash player இல்லாத நிலையில் இயக்கிப்பார்க்கப்படுவதையும் காண்பிக்கின்றது.

Wednesday, October 18, 2006

Bootable floppy ஒன்றை Bootable CD ஆக்குவது எப்படி?

தற்போது ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு பணி நிமித்தமாக மிகப்பழைய கணினிகளை கையாளும் பேறு கிடைத்திருக்கிறது.

வின்டோஸ் அடிமை உலகினால் தூக்கியெறியப்பட்ட "காலங்கடந்த" கணினிகளில் க்னூ/லினக்சை நிறுவி அவற்றுக்கு மறுவாழ்வு கொடுக்கும் செயன்முறை ஆய்வு.

இதில் நான் பெற்றுக்கொண்ட அறிவினை அடுத்ததடுத்து வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.

Floppy என்று ஒரு பொருள் முன்னர் பாவனையிலிருந்திருக்கிறது. (!)
அதனை நெகிழ்வட்டு என்று தமிழில் அழைத்தார்கள். அதில் தரவுகளை சேமிக்க, சேமித்து கொண்டுசெல்ல, கணினிக்கு வழங்க முடியும். இறுவட்டுக்களின் வருகைக்கு சற்றே முற்பட்ட காலப்பகுதிகளில் இது பாவனையிலிருந்திருக்கிறது.



தனது இறுதிக்காலப்பகுதியில் இந்த நெகிழ்வட்டு பழைய கணினிகளை தொடக்குவதற்கு பயன்பட்டிருக்கிறது. தொடக்கிவைக்கும் வட்டுக்களாக. அதாவது bootable disk.

பென்டியம் 1 இற்கு முன்னர் வந்த பழைய கணினிகளில் இணைய உலாவல் செய்ய, படம் பார்க்க, பாட்டுக்கேட்க இன்னும் சில சில அடிப்படை பணிகளை செய்ய க்னூ/லினக்ஸ் மிகுந்த உதவிகளை செய்கிறது.

Basic Linux என்று ஒரு வழங்கல். இதனை பயன்படுத்தி அரதப்பழைய கணினிகளில் கூட புதிய மென்பொருட்களை (opera browser உள்ளிட) நிறுவி வேகமாக பணியாற்ற முடியும். இதனை கணினி ஒன்றில் நிறுவியோ, நிறுவாமலோ பயன்ப்டுத்த bootable floppy disks தேவை.

இந்த அருமையான வழங்கல் பற்றி பிறகு உரையாடுவோம்

என்னுடைய கணினியிலோ நெகிழ்வட்டு இயக்கியே இல்லை. வீட்டில் இந்த வழங்கலை பரீட்சித்துப்பார்க்க qemu வைதான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

நெகிழ்வட்டுக்கள் அவ்வளவு நம்பகமானவை அல்ல. நாளைக்கு நான் இந்த வழங்கலை நிறுவ வேண்டிய கணினியில் இறுவட்டு இயக்கி இருக்கிறது. நெகிழ்வட்டுக்கள் விலை அதிகம்.

என்ன செய்யலாம்?

இந்த "தொடக்கும் நெகிழ்வட்டுக்களை" "தொடக்கும் இறுவட்டுக்களாக" மாற்றிக்கொள்வதுதான் பிரச்சனைக்கு தீர்வு.

எப்படி இதனை செய்வது என்று தேடிக்கொண்டிருந்தபோது mkisofs என்ற சிறு உரைவழி மென்பொருள் கிடைத்தது.

அநேகமாக தற்போதைய க்னூ/லினக்ஸ் வழங்கல்கள் எல்லாம் இம்மென்பொருளை கொண்டிருக்கும் என்றே நம்புகிறேன். இது cdrecord மென்பொருளோடு வரும் cdrecord இல்லாத வழங்கல்களே தற்போது இல்லை. இல்லாவிட்டால் நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

பின்வரும் படிமுறைகள் மூலம் நீங்கள் தொடக்கத்தக்க இறுவட்டினை உருவாக்கலாம்.

1. முதலில் உங்கள் பணிகளுக்கென ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளுங்கள். [ mkdir convert ]

2. முனையதில் அந்த அடைவிற்குள் நுழையுங்கள் [ cd convert/]

3. இப்போது நீங்கள் மாற்றவேண்டிய bootable floppy image இனை convert என்ற அடைவினுள் போட்டுவிடுங்கள். (இக்கோப்பு .IMG என்ற பின்னொட்டுடன் இருக்கும்)

4. பின்வரும் ஆணையை இயக்குங்கள்.

mkisofs -pad -b DISK.IMG -R -o cd.iso DISK.IMG

வெளியீடாக நீங்கள் cd.iso என்ற bootable cd image இனை பெற்றுக்கொள்வீர்கள்.

அந்த இறுவட்டு பிம்பத்தினை இறுவட்டாக எழுதிக்கொள்வதன்மூலம் நீங்கள் இப்போது உங்கள் பணிக்கு தேவையான bootable disk இனை பெற்றுக்கொண்டுவிட்டீர்கள்.

iso பிம்பம் ஒன்றினை இறுவட்டாக எழுதிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.


Saturday, October 07, 2006

ஜெயா tv கண்ணாடியை வைத்து லினக்சில் ஒரு விளையாட்டு

Anaglyphs!

ஜெயா தொலைகாட்சியின் உபயத்தில் இன்று தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் இந்த தொழிநுட்பத்தோடு நெருக்கமாகிவிட்டோம்.

மிகவும் செலவு குறைவான பயனர் நிலை உபகரணங்களை கொண்டு காட்டப்படக்கூடிய முப்பரிமாண படங்கள் இத்தொழிநுட்பத்தையே கொண்டிருக்கின்றன.
பயனருக்கு தேவையானதெல்லாம் ஒரு சிவப்பு, நீல/பசும்நீல கண்ணாடிகளை பொருத்திய மூக்கு கண்ணாடி.

மிட்டாய் தாள்களையோ, நிறமூட்டிய கண்ணாடித்தாள்களையோகொண்டு இதனை நாமே இலகுவாக வீட்டில் தயாரித்துக்கொள்ளலாம்.


மாயாவி தொடரை இப்பொழுதுதான் பார்த்துவிட்டுவந்தேன்.

தொழிநுட்பரீதியான நிறைய போதாமைகளோடு ஏறத்தாழ நல்ல முப்பரிமாண ஜாலத்தை தந்தது.

இந்த தொழிநுட்பம் பற்றிய தேடல்களில் நிறைய சேகரித்து வைத்திருக்கிறேன். யாராவது anagliphs என்பதற்கு நல்ல தமிழ் கலைச்சொல்லை உருவாக்கித்தந்தால் விக்கிபீடியாவில் ஒரு கட்டுரை போடுகிறேன்.

சரி,

ஜெயா தொலைக்காட்சிக்கென வாங்கிய (ஐம்பது ரூபாய்க்கு விற்றார்கள்) கண்ணாடி வாரத்துக்கு ஆறு நாட்கள் சும்மா கிடப்பதா? பெரிய அநியாயமல்லவா?
சிலர் ஆனந்தவிகடனுக்கென்று வாங்கியதையே இன்னும் வைத்துக்கொண்டிருப்பார்கள்.

வலையை மேய்ந்ததில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தும் எண்ணற்ற வீடியோக்களும் படங்களும் கிடைத்தன. பார்த்து ரசித்து பொழுதுபோக்கிக்கொண்டிருக்கிறேன்.


சரி எல்லா பரிசோதனைகளையும் தயங்காமல் செய்துபார்க்கும் நம்ம திறந்தமூல சமூகம் இதை வைத்து என்ன செய்திருக்கிறது?


இருக்கவே இருக்கிறது ஒரு 3D காரோட்ட விளையாட்டு.

Trigger!

ஜெயா tv கண்ணாடியை அணிந்துகொண்டு இதனை விளையாடினீர்கள் என்றால் மெய்யாகவே காரோட்டுவது போன்ற ஆழ, நீள, அகல பரிமாணங்களுடன் வியப்பான அனுபவம் கிடைக்கும்.

கார் மரங்களுக்குள்ளால் போகும்போது இலைகள் உங்கள் கண்ணுக்கருகில் வந்து பயமுறுத்தும்.

விளையாடலாமா/

நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால் மிக எளிதாக இந்த விளையாட்டினை இறுவிக்கொள்ளலாம்.

(எல்லா repositiries உம் செயற்படுத்தப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்)

sudo apt-get install trigger

அவ்வளவுதான்

சில நிமிடங்களுள் உங்கள் கணினியில் இந்த விளையாட்டு தயார் நிலையில் இருக்கும்.

ஏனைய வழங்கல்களை பயன்படுத்துபவர்கள், உங்கள் வழங்கல்களுக்கான பொதிகளையோ அல்லது மூலப்பொதியையோ இவ்விளையாட்டு மென்பொருளின் வலைமனையிலிருந்து தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

நிறுவியவுடன் விளையாட்டை ஆரம்பித்தீர்களானால் சாதாரண விளையாட்டைப்போன்றே இருக்கும்.

முப்பரிமாண ஜாலத்தை பெறுவதற்கு இவ்விளையாட்டுக்குரிய அமைப்புக்கோப்பினை திருத்த வேண்டும்.
இக்கோப்பு உங்கள் home அடைவில் புள்ளியிடப்பட்ட மறைந்து அடைவொன்றுக்குள் இருக்கும்.

home அடைவினுள்

.trigger/trigger.config

என்பதே அந்த கோப்பு.
அதனை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.

பின்வரும் வரிகளை தேடுங்கள்.

stereo="none"
stereoeyeseparation="0.07"
stereoswapeyes="no"

அவற்றை பின்வருமாறு மாற்றிக்கொள்ளுங்கள்

stereo="red-cyan"
stereoeyeseparation="0.07"
stereoswapeyes="yes"

கோப்பினை சேமித்துவிட்டு

மறுபடி trigger விளையாட்டினை ஆரம்பித்தீர்களானால், சிவப்பு-நீல கலங்கலாக உருவங்கள் காணப்படும்.
எடுங்கள் உங்கள் ஜெயா tv கண்ணாடியை.

அணிந்துகொண்டு விளையாடுங்கள்.

புதிய விளையாட்டு அனுபவம் காத்திருக்கிறது!

எந்தக்கண்ணுக்கு எந்த நிறக்கண்ணாடி என்பதை திரைக்கென படங்களை தயாரிப்பவர்கள் பயன்படுத்திய முறையே தீர்மானிக்கிறது.

எனவே சரியான முப்பரிமாணம் கிடைக்கவில்லையானால், கண்ணாடிகள் இடம் மாறி வரும்படி கண்ணாடியை மாற்றி அணிந்துகொள்ள வேண்டும்.
(காகித அட்டையில் செய்யப்பட்ட கண்ணாடியை இலகுவாக மறுவலம் மடிக்கலாம்)

வெவ்வேறு வலைத்தளங்கள் தந்த முப்பரிமாணப்படங்களுக்கு வேவ்வேறு முறைமள் உண்டு சிலவேளை சிவப்பு இடக்கண்ணிற்கு வரவேண்டியிருக்கிறது, சிலவேளை வலக்கண்ணுக்கு வரவேண்டியிருக்கிறது. கவனிக்க.

இந்த பதிவில் உள்ள படங்களை ஜெயா தொலைகாட்சி கண்ணாடியை அணிந்துகொண்டு பாருங்கள். இங்குள்ள படங்களுக்கு சிவப்பு கண்ணாடி இடதுபுறம் வரவேண்டும்.

Thursday, September 28, 2006

Flash 8 or later... நாங்கள் என்ன செய்வது?

இந்த வின்டோஸ் மய உலகத்தில் இப்போது அடிக்கடி வலைத்தளங்களுக்கு போகும்போது அவை flash player 8 இனை கேட்டு உயிரை எடுக்கின்றன.

இல்லாத ஒன்றுக்கு எங்கே போவது? அடோப் நிறுவனமோ இதோ வருது இந்தா வந்திட்டு flash 9 for linux என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் இன்னமும் flash 7 மட்டும்தான் எமக்கு.

இப்போதைக்கு தற்காலிகமாக இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வைக்காணலாம்?

என்னுடைய பரிசோதனைகளின்படி wine ஐ பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

flash player ஆனது வின்டோஸ் பதிப்பான உலாவிகளுக்கு வின்டோஸ் இயங்குதளத்தில் இயக்க வழங்கப்படுகிறது.
சரி நாங்கள் அவர்கள் வழியிலேயே போவோம். firefox இன் வின்டோஸ் பதிப்பையே லினக்சில் நிறுவிக்கொள்வோம்.வின்டோஸ் பதிப்பா/ வின்டோசுக்கு எங்கே போவது?

இருக்கவே இருக்கிறது WINE எமது மெய்நிகர் திறந்த வின்டோஸ்.

WINE நிறுவிக்கொள்ளல் தொடர்பான விளக்கங்களை இந்த பதிவில் நான் உள்ளடக்கவில்லை. பின்னர் பிறிதொரு பதிவாக போடுகிறேன். அதுவரை அவர்களது வலைத்தளத்திலுள்ள உதவி ஆவணங்களை படித்து வைனை நிறுவிக்கொள்ளுங்கள். என்னால் தரக்கூடிய ஆலோசனை, wine நிறுவிக்கொண்ட பிறகு wine tools ஐயும் நிறுவி, அதன் உதவியோடு வின்டோசின் முக்கிய தளைகளை நிறுவிக்கொள்ளுங்கள்.

பின்வரும் படிமுறைகளூடாக flash பிரச்சனைக்கு நாம் தற்காலிக தீர்வினை கண்டடையலாம்.

1. உங்கள் லினக்சில் wine ஐ நிறுவிக்கொள்ளல்
2. wine tools ஐ பயன்படுத்தி முக்கிய வின்டோஸ் பாகங்களை நிறுவுதல்
3. firefox இன் அண்மைய வின்டோஸ் பதிப்பினை தரவிறக்குதல்
4. தரவிறக்கப்பட்ட .exe கோப்பினை wine கொண்டு திறந்து இயக்குதல். firefox நிறுவிக்கொள்ளப்படும்.


5. flash மென்பொருளை தரவிறக்குதல்



6. திறந்திருக்கும் எல்லா உலாவிகளையும் மூடிவிடுதல்
7.flash மென்பொருளின் .exe கோப்பினை wine கொண்டு திறந்து நிறுவுதல் (நிறுவல் முடிந்தது என்றெல்லாம் அது அறிவிக்காது. ஒரு progress bar தோன்றி மறைவதோடு நிறுவல் நின்றுவிடும். பயப்பட வேண்டாம்.


8. மேசைத்தளத்தில் உருவாகியிருக்கும் புதிய firefox windows version icon இனை சொடுக்கி வேண்டிய தளத்தை பார்வையிடலாம். தமிழ் தளங்கள் கேள்விக்குறிகளாகத்தான் தெரிகின்றன. வழியில்லை. உங்களுக்குத்தான் தரமான லினக்ஸ் firefox இருக்கின்றதே. பிரச்சனைகுரிய தளங்களை பார்க்க மட்டும்தான் windows firefox.


சிலவேளை நாளைக்கே அடோப் நிறுவனம் flash 9 இனை லினக்சுக்கு தரலாம். அப்போது இந்த பதிவு காலாவதியாகிவிடும். ஆனால் இந்த உத்தியினை பயன்படுத்தி எதிர்காலத்தில் இதுபோன்று எழும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளமுடியும்.

Wednesday, September 20, 2006

istanbul: உங்கள் கணினித்திரையை சலனத்துடன் படம்பிடித்தல்

அண்மையில் என் பதிவொன்றில் எனது கணினித்திரையை சலனப்படமாய் பிடித்து பிரசுரித்திருந்தேன்.

எப்படி அது படம்பிடிக்கப்பட்டது என்ற கேள்வி வரும் என எதிர்பார்த்திருந்தபோதும். யாரும் கேட்கவில்லை.

istanbul என்ற மென்பொருளை பயன்படுத்தியே அதை செய்தேன்.

இஸ்தான்புல் உபுண்டுவின் பொதிக்குவைகளுக்குள் ( repositories) இருக்கின்றது. உபுண்டு பயனர் அல்லாதவர்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

இதன் அண்மைய பதிப்பினை (0.2.1) நிறுவிப்பார்த்தேன். ஒலியையும் பதிவுசெய்யக்கூடியதாக அது இருந்தது. அத்தோடு ஏராளம் புதிய வசதிகள் காணப்பட்டன. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. அதனை எவரும் இப்போதைக்கு நிறுவ வேண்டாம். அது சரியாக வேலை செய்யாது. இறுதி பொதி வந்த பிறகு பயன்படுத்துங்கள்.

இப்போதைக்கு 0.1.1 பதிப்பு நன்றாக வேலை செய்கிறது. ஆனால் குரலை பதிவு செய்யும் வசதி இல்லை. குரலை தனியாக பதிவுசெய்து cinelerra போன்ற மென்பொருட்களை கொண்டு கலக்க வேண்டியிருக்கிறது.

வின்டோஸ் பயன்படுத்திய காலத்தில் இவ்வாறான திரையை படமெடுக்கும் மென்பொருட்களை பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றுள் சில உளவு மென்பொருட்கள். அத்தோடு நினைவகத்தை அடைத்துக்கொள்ளும். இதனால் படம் சரியாக பிடிக்கப்படாமல் தரம் குறைந்துபோகும்.

ஆனால் இஸ்தான்புல் மிகக்குறைந்த நினைவகத்தையே எடுத்துக்கொள்கிறது (57-58 மெகாபைட்) உயர்ந்த துல்லியத்துடன் படம் தருகிறது. (நான் கூகிள் வீடியோவில் தரவேற்றி தருவதால் துல்லியம் கணிசமாக குறைந்துபோகிறது.

பதிவுசெய்யப்பட்ட கோப்பின் அளவு அதிசயிக்கத்தக்க அளவில் மிகக்குறைவாகவே உள்ளது. வேண்டுமானால் நாங்களாகவே துல்லியத்தை குறைத்து கோப்பை சிறிதாக்கலாம்.

சலனப்பட ஊற்றாக (streaming) வழங்கிவழியாக நாம் மற்றவர்களுக்கு திரைக்காட்சி செய்யக்கூடிய வசதியும் இதில் உண்டு.

இது பல வழிகளில் எனக்கு உதவிக்கொண்டிருக்கிறது.

  • முக்கியமான வேலைகள், அமைப்புக்களை செய்யும்போது ஆவணப்படுத்தலுக்காக எல்லாவற்றையும் உடனுக்குடன் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டிவரும். இது எரிச்சலூட்டுவதோடு நேரத்தையும் எடுத்து வேலையும் குழப்பும். இப்போது பிரச்சனையில்லை. இஸ்தான்புல்லை ஓடவிட்டுவிட்டு எமது வேலைகளை செய்யவேண்டியதுதான். எல்லாவற்றையும் அழகாக வீடியோப்படமாய் பிடித்துவைத்திருக்கும். ஆறுதலாக ஆவணப்படுத்திக்கொள்ளலாம். அல்லது வீடியோ ஆணமாகவே வைத்திருக்கலாம். (வீடியோவுக்கு "சலனப்படம்" என்பதைவிட வேறு நல்ல கலைச்சொல் ஏதாவது சொல்லுங்களேன்)

  • லினக்ஸ் உலகத்தில் இதை எப்படி செய்வது அதை எப்படி செய்வது என்று நச்சரிக்கும் அன்புத்தொல்லை மின்னஞ்சல்கள் அடிக்கடி வரும். உரைவழியாக விஷ்யங்களை விளக்குவது போதும் போதுமென்றாகிவிடுகிறது. இப்போது இஸ்தான்புல் இருக்கிறது. எப்படி செய்வது என்பதை செய்துகாட்டி படமாக பிடித்து மின்னஞ்சல் வழியாக அனுப்பிவிடலாம் (இப்போது அதைத்தான் செய்கிறேன் ;-)) அலது கூகிள் வீடியோவில் ஏற்றிவைத்துவிட்டு தொடுப்பு அனுப்பலாம்.

  • மாணவர்களுக்கு நேர்த்தியான விளக்கப்படங்களை உருவாக்கி கொடுக்கலாம்.

  • இது நேரடியாகவே சலனப்படத்தை ogg theora வடிவில் சேமிப்பதால் லினக்ஸ் பயனர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அடிப்படை மென்பொருட்களை பயன்படுத்தியே கோப்பினை இயக்கிப்பார்க்கலாம். (வின்டோஸ்காரர்களைப்பற்றி என்ன கவலை?)

அருமையான இந்த மென்பொருளை இலவசமாகவும் திறந்தமூலமாகவும் தரும் இஸ்தான்புல்லின் விருத்தியாளர்களுக்கும். திறந்தமூல சமுதாயத்துக்கும் நன்றிகள் பல.


எனது webcam இயங்குக்கொண்டிருக்கும்போது இஸ்தான்புல் பிடித்தபடம்

Sunday, September 17, 2006

Firefox பிரச்சனைக்கு ஒரு தற்காலிக தீர்வு

Firefox இனை பயன்படுத்தி பழகிவிட்டால் மறுபடி IE பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. (இது புரிந்துதானோ என்னவோ மைக்ரோசொப்ட் Forefox இனை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து IE7 ஆக வெளியிடுகிறது) லினக்சில் கூட Epiphany ஓரளவு மாற்றாக இருந்தாலும் அதுவும் கூட மொசில்லா அடிக்கட்டுமானத்திலேயே இயங்குகிறது.

எழிலூட்டம் செய்யப்பட்ட (குறிப்பாக Justify) தமிழ் தளங்களை பார்வையிடும்போது Mozilla குடும்ப உலாவிகள் எழுத்துக்களை குதறிப்போட்டுவிடுகின்றன. வின்டோஸ் காரர்கள் என்றால் பரவாயில்லை அந்த பக்கங்களை மட்டும் IE இல் பார்த்துவிடலாம் அல்லது IE tab நீட்சியை நிறுவி சமாளிக்கலாம். லினக்ஸ்காரர்களுக்கு வழியில்லை. அநேகமாக லினக்ஸின் எல்லா உலாவிகளும் மொசில்லா அடிக்கட்டுமானத்தில்தான் இயங்குகின்றன். கான்கரரில் கூட இதே பிரச்சனை இருக்கிறது. என்னசெய்வது?


இன்றைக்கு காலை மின்னஞ்சல்கள் பார்க்கும்போது தமிழ்லினிக்ஸ் மடலாடற்குழுமத்திலிருந்து வந்த மடல் ஒன்று இதற்கான தீர்வை சொல்கிறது.
அநேகமாக இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் தமிழ் வலைப்பதிவாளர்களுடன் அந்த தீர்வை பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பதிவை இடுகிறேன்.

(இக்குறிப்புக்கள் யாவும் சரவணனின் ஆங்கில வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டவை)

1. firefox உலாவியை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

2. இந்த நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்

3. உலாவியை மூடி திரும்ப திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

4. இந்த பக்கத்தை திறந்துவைத்துக்கொள்ளுங்கள்

தற்போது புதிய பதிப்பில் கீழே சிறப்புறுத்திக் காட்டப்பட்டுள்ள படிமுறைகள் அனைத்தையும் தன்னியக்கமாக்கிவிட்டார்கள். இவற்றை தற்போது கவனிக்கத்தேவையில்லை - [மு.மயூரன் 27-6-2007]

5. tools -> new user script என்பதை தெரிவு செய்யுங்கள். திறந்துவைத்திருக்கும் பக்கத்திலுள்ள நிரல் நிறுவப்பட்டு வெற்றிச்செய்தி காண்பிக்கப்படும்.

6. firefox இனை மீள ஆரம்பித்து பக்கத்தை திறந்தீர்களானால் எழுத்துக்கள் அழகாக தெரியும். எந்த பிரச்சனையும் இல்லை. (உலாவியின்
கீழ்பட்டையில் உள்ள சிரிக்கும் குரங்கு உருவம் சிரித்துக்கொண்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள்)

7. இப்பொழுது புதிய பிரச்சனை எல்லா வலைத்தளங்களின் எழிலூட்டங்களும் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் உங்களுக்கு சில குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டுமே இம்மாற்றத்தை செய்யவேண்டும். என்னசெய்வது?

8. tools -> manage user scripts என்பதை தெரிவு செய்யுங்கள்

9. http* ftp* என இருக்கும் தெரிவுகளை எல்லாம் நீக்கிவிட்டு நீங்கள் பார்க்கவிரும்பும் வலைப்பக்க முகவரியை சேர்த்துக்கொள்ளுங்கள்.

10 குறித்த வலைத்தளத்தின் எல்லா பக்கங்களுக்கும் இவ்வசதி வேண்டுமானால், வலைத்தளத்தின் முதன்மை முகவரியை இட்டு அதன் முடிவில் நட்சத்திரக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக, http://www.tamilsite.com*



இந்த வார தமிழ்மணம் நட்சத்திரத்தின் வலைப்பதிவை எப்படி சரியாக்கிப்பார்த்தேன் என்பதை படங்களில் பார்த்துக்கொள்ளுங்கள்.

Wednesday, September 13, 2006

qemu: ஒரு சலனப்படப்பதிவு

qemu என்று ஒரு கட்டற்ற மென்பொருள் இருக்கிறது.

இதனை பயன்படுத்தி லினக்ஸ் இயங்குதளத்தில் இருந்தபடியே நீங்கள் இன்னொரு இயங்குதளத்தை அதே கணினியில் ஆரம்பித்து பயன்படுத்தலாம். (வேகம் உங்கள் கணினியின் வளங்களை பொறுத்தது).

பொதுவாக நாளாந்தம் வெளிவந்துகொண்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்களோடு விளையாடிப்பார்க்க அவற்றை ஒவ்வொரு முறையும் கணினியில் நிறுவிக்கொண்டிருக்க முடியாது. அந்த வேளைகளில் இம்மென்பொருளை பயன்படுத்தி மெய்நிகர் வெளியில் லினக்ஸ் இறுவட்டு ஒன்றினை boot செய்து பார்க்கலாம். நிகழ்வட்டுக்களை (live cds) இயக்கிப்பார்க்கலாம்.

அத்தோடு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் iso உருவத்தில் வைக்கப்பட்டிருக்கும் லினக்ஸ் வழங்கல்களை கூட boot செய்யலாம்.

இந்த படத்தில், என்னுடைய கணினியின் இயங்குதளத்தில் (ubuntu 6.06) இருந்தவாறு,
kubuntu live cd ஒன்றினை எப்படி boot செய்து பார்க்கிறேன் என்பதை காட்டியிருக்கிறேன்.

இங்கே காட்டப்படுவது qemu மென்பொருளின் மிக அடிப்படையான பயன்பாடுதான். இதனை பல்வேறு வழிகளில் மிக பிரயோசனமாக பயன்படுத்த முடியும்.

இம்மென்பொருள் பற்றிய விக்கிபீடியா பக்கம்


Monday, September 11, 2006

find எனும் அற்புத ஆணை.

"இந்த உலகத்தை திரும்ப கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது" என்று முன்பு நண்பர் ஒருவர் சொன்னார்.

இருக்கின்ற, கண்டுபிடிக்கப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொண்டு பயன்படுத்துவதற்கு தேவையான உழைப்பு, அவற்றை கண்டுபிடிப்பதற்கான நேரம், உழைப்பு போன்றதாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதே அதன் பொருள்.

உரைவழி ஆணைகளின் மகிமை stupid friendly இயங்குதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அனுபவிக்க கிடைத்திருக்காது. உரைவழி ஆணைகள் மூலம் கருந்திரையின் முன்னால் உட்கார்ந்து அதிவேகமாக பணியாற்றும் அனுபவம் அவர்களுக்கு வாய்த்துமிருக்காது.

உரைவழி ஆணைகள் பற்றி இன்னும் ஏராளமான பதிவுகள் எழுதவேண்டியிருக்கிறது.

இன்றைக்கு மிகப்பொதுவாக நாம் பயன்படுத்தும் find ஆணையின் ஒரு சிறு வியத்தகு இயலுகை பற்றி பார்க்கலாம்.

find என்பது கோப்புக்களை தேடுவதற்கு பயன்படுத்தும் ஆணை.


------


google video, youtube போன்ற தளங்களிலிருந்து திருடிய கணிசமானளவு சலனப்பட கோப்புக்கள் என்னிடம் உள்ளன. அவை பொதுவாக flv வகை கோப்புக்கள். flash video வகை கோப்புக்களை mplayer இல் பார்க்கமுடியும் என்றாலும், முழுமையான பயன்பாட்டினை பெறமுடியாது. உதாரணமாக படத்தை வேகமாக ஓடவிடவோ, பட்டையை உருட்டி விரும்பிய இடத்திலிருந்து படத்தை பார்க்கவோ முடியாது.

அத்தோடு திறந்த ஆணைமூல வடிவங்களிலேயே என்னுடைய கோப்புக்களை வைத்திருக்க நான் விரும்புகிறேன். லினக்சில் கையாள்வதற்கு அது இலகுவானது. அத்தோடு எதிர்ப்பு புளகாகிதம் வேறு.

பொதுவாக ஊடகக்கோப்புக்களை மாற்றுவதற்கு ffmpeg , ffmpeg2theora போன்ற உரைவழி மென்பொருட்களை பயன்படுத்துவேன்.

என்னிடமுள்ள கோப்புக்களை ஒவ்வொன்றாக மாற்றிவைத்துக்கொள்ள மிகவும் சோம்பலாக இருந்தது.

மொத்தமாக ஒரு அடைவை அப்படியே மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். பொருத்தமாக எதுவும் மாட்டுப்படவில்லை.

கடைசியில் நானாகவே ஒரு shell script இனை இதற்கென உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்தேன். script இல் ffmpeg2theora வை பயன்படுத்தி கோப்புக்களை மாற்றுவதற்கான செயற்பாட்டை எழுதுவது என்பது முடிவு. இதில் பல சிக்கல்கள் எழும். கோப்புக்கள் மீள மீள மாற்றப்படக்கூடாது. அத்தோடு ஒன்றுக்கு பின் ஒன்றாக மாற்றப்படவேண்டும். இதற்கு என்ன வழி?

இதுபற்றி நண்பர்களிடம் விசாரித்தபோதுதான், முழுமையான லினக்சை அடிப்படையாகக்கொண்ட தொலைக்காட்சியை நடத்திவரும் துறவி மெத்தவிகாரியிடமிருந்து பயனுள்ள குறிப்பொன்று கிடைத்தது.

find ஆணையில் இப்படியான வசதி ஒன்று இருக்கிறது என்பதே அது.

தேடிப்பார்த்தால். ஆம் இருக்கிறது. மிக மிக பிரயோசனமான வசதி.

கோப்புக்களை தேடுவது, தேடிப்பெறப்பட்ட கோப்புக்கள் மீது ஆணை ஒன்றினை செயற்படுத்துவது. இதற்கு -exec அல்லது -ok போன்ற ஆளிகளை (switches) பயன்படுத்தவேண்டும்.

script எதுவும் எழுதாமல் ஒரு வரியிலேயே எனக்கு தேவையான செயற்பாட்டினை பெற்றுக்கொண்டுவிட முடியும்.

இதோ ஆணை :

எடுத்துக்காட்டாக flv/ என்ற அடைவில் கோப்புக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.

find flv/ -name *.flv -exec ffmpeg2theora -v 10 {} \;

இந்த ஆணையை செயற்படுத்த ஒன்றன்பின் ஒன்றாக அழகாக நல்ல துல்லியத்துடன் கோப்புக்களை மாற்றிவைத்துவிட்டு நல்லபிள்ள்ளையாக உட்கார்ந்துவிடுகிறது.

இப்பொழுது இந்த ஆணையை பிரித்து பிரித்து விளங்கிக்கொள்ளலாம்.

find - தேடுக

flv/ - flv/ என்ற அடைவினுள்

-name - பெயராக

*.flv -.flv என்று முடியும் அத்தனை கோப்புக்களையும்

-exec - செயற்படுத்துக

ffmpeg2theora - இந்த மென்பொருளை

-v 10 - உயர் துல்லியத்துடன் (இது ffmpeg2theora மென்பொருளுக்குரிய ஆளி)

{} - கண்டுபிடிக்கப்படும் கோப்புக்களின் மீது செயற்படுத்துக

\; - எல்லா கோப்புக்களையும் செய்ற்படுத்தியவுடன் முடிக்க.



-ok என்ற ஆளியை -exec இற்கு பதிலாக பயன்படுத்தினீர்களானால் ஒவ்வொன்றாக உங்கள் அனுமதி பெற்று ஆணை கோப்புக்களின் மீது செயற்படுத்தப்படும்.

--------------


இது மிக சிறிய எடுத்துக்காட்டு மாத்திரம்தான். லினக்ஸ் உரைவழி ஆணைகளின் உலகத்தில் எத்தனையோ லட்சக்கணக்கான அதிசயங்கள் ஒளிந்திருக்கின்றன.

Wednesday, September 06, 2006

வின்டோஸ் வாசிகளுக்கு webcam காட்டுதல்

கட்ந்த ஏப்ரல் மாதம் நண்பர் ஒருவர் எனக்கு webcam ஒன்று அன்பளித்தார். வாழ்க்கையில் இதற்கு முன்னர் சொந்தமாக நான் அதனை பயண்ன்படுத்தியது கிடையாது. வலை உலாவு நிலையங்களில் ஓரிருமுறை பயன்படுத்திப்பார்த்திருக்கிறேன். (என்னை நானே பார்த்துக்கொள்ள)

இப்படி ஒரு விளையாட்டுப்பொருள் கிடைத்ததும் எனக்கு விளையாட ஆசை வந்துவிட்டது. வழக்கமான பெரிய கேள்வி முன்னால் எழுந்தது. இது லினக்சில் இயங்குமா?

எப்படி பரீட்சிப்பது? முகம்பார்த்து உரையாடுவதற்கான லினக்ஸ் செயலி என்ன? மெய்நிகர் அலுவலகக்கூட்டங்கள் போடுவதற்கு லினக்ஸ் வைத்திருக்கும் தீர்வு என்ன? இருக்கவே இருக்கிறது "ekiga" (பழைய gnomemeeting). இந்த மென்பொருள் உபுண்டுவில் இயல்பிருப்பாகவே இணைக்கப்பட்டுள்ளது.
ekiga.net சென்று எனக்கென்று ஒரு sip முகவரியை பதிவுசெய்த பிற்பாடு புகுபதிகை செய்துகொண்டேன். ஆசை ஆசையாய் முகம்பார்க்க முயன்றால் , சோகம். நீலத்திரைதான் தெரிந்து. என் முகத்தை காணவில்லை. edit -> prefereces சென்று உள்ளீட்டு கருவிகளை பரீட்சித்தால் அங்கே இரண்டு கருவிகளை எகிகா காட்டுகிறது.


அடடா மற்றையது என்னுடைய தொலைக்காட்சி அட்டை. லினக்சில் இயங்க மறுக்கும் அந்த தொலைக்காட்சி அட்டையின் நீலத்திரை தான் தெரிந்துகொண்டிருந்தது. இன்னொரு தெரிவாக என்னுடைய webcam இன் சாதனப்பெயர் இருந்தது. அதனை தெரிவு செய்ய என் முகம் அழகாய் தெரிய ஆரம்பித்தது.


ஒருவாறாக பெரிய பிரச்சனை தீர்ந்தாகிவிட்டது. இன்னொரு லினக்ஸ் பயனருடன் ekiga வை பயன்படுத்தி முகம் பார்த்து உரையாடலாம்.

ஆனால் webcam வைத்திருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் வின்டோஸ் அல்லவா பயன்படுத்துகிறார்கள்? அவர்களோடு எப்படி முகம்பார்த்து உரையாடுவது? ekiga இன்னமும் தனது வின்டோஸ் பதிப்பினை வெளியிடவில்லை. யாகூ, எம் எஸ் என் எதுவுமே லினக்சுக்கு தமது மென்பொருட்களை தருவதில்லை. ஸ்கைப் இருக்கு ஆனால் அதன் லினக்ஸ் பதிப்பில் webcam வசதி இல்லை. yahoo, msn காரர்களோடு உரைவழி அரட்டயடிக்க பயன்படும் gaim இன்னமும் குரல், ஒளி ஆதரவை வழங்கக்காணோம். என்ன செய்வது?

முன்பே கேள்விப்பட்டிருந்த openwengo தொலைபேசியை பயன்படுத்திப்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அதனை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன். நண்பர்களையும் அதன் வின்டோஸ் பதிப்பினை கட்டாயப்படுத்தி நிறுவிக்கொள்ளச்செய்தேன். ஆனால் ஒளி வழி உரையாடலுக்கு அழைப்பது எப்படி, என் வெப்காம் படத்தினை அவர்களுக்கு அனுப்புவது எப்படி என்று எனக்கு புரியவில்லை. இன்றுவரைக்கும் புரியவில்லை.

பெரிய மானப்பிரச்சனையாய் வேறு போய்விட்டது. webcam வாங்கித்தந்த நண்பர் அதனை நினைவுபடுத்தும்போதெல்லாம் பெரிய குற்றவுணர்ச்சியாகிக்கொண்டிருந்தது. அதை பயன்படுத்தி ஒரு நாளேனும் அவருக்கு நான் முகம் காட்டவில்லை. தனது அன்பளிப்பு எனக்கு பிடிக்காமல் நான் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேனோ என்று அவர் கவலைப்படுவாரோ என்ற எண்ணம் வேறு வாட்டியது.

இதென்னடா பெரிய சவாலாய் போய்விட்டது. ராணுவ நடவடிக்கையின் முனைப்போடு கூகிளை கலைத்துப்போட்டு தேடத்தொடங்கினேன். சில லினக்ஸ் குழுமங்களுக்கு எழுதி உதவி கேட்டேன். பலன் எதுவும் ஏற்படவில்லை.

சிறிய கீற்றாய் ஒரு வெளிச்சம் கிடைத்தது. microsoft netmeeting என்றொரு மென்பொருள் sip வரைமுறைக்கு ஆதரவளிக்கிறது என்று கேள்விப்பட்டேன். sip வரைமுறைக்கு ஆதரவிருந்தால் ekiga வினை பயன்படுத்தி வின்டோஸ் பயனருடன் உரையாடலாம். ஆனால் openwengo போன்ற அனுபவம்தான் இதிலும் கிடைத்தது. எப்படி பயன்படுத்துவது என்று புரியவில்லை. என்னிடமோ வின்டோஸ் இல்லை. நண்பர்களின் பொறுமைக்கும் அளவுண்டு. என்ன செய்யலாம்?

பாரிய தேடுதல் நடவடிக்கையின் பிற்பாடு kopete இல் ஒளிவழி உரையாடல் வசதி இருப்பதாக ஒரு செய்தி கிடைத்தது.

இந்த இடத்தில் kpoete பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும்.

kopete என்பது gaim போன்ற ஒரு செயலி. KDE காரர்களின் தயாரிப்பு. யாகூ, எம் எஸ் என், கூகிள் டாக், ஏ ஓ எல் , ஜாப்பர் போன்ற பல்வேறு இணைய அரட்டை சேவைகளூடாகவும் இச்செயலியை பயன்படுத்தி அரட்டையடிக்கலாம்.

முன்னர் ஒரு சில தடைவைகள் இதனை பயன்படுத்தி பார்த்திருக்கிறேன். ஆனால் gaim இன் எளிமை பிடித்துப்போகவே அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன் kopete இனை நாளடைவில் மறந்துபோய்விட்டேன்.

தகவல் கேள்விப்பட்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. kopete இல் இப்படி ஒரு வசதி இருந்ததாய் எனக்கு நினைவில்லை. synaptic வழியாக என் dapperdrake இல் அதனை நிறுவிப்பார்த்தேன். ஒளி வழி உரையாடல் வசதி எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் preferebces இல் அமைப்புக்கள் இருக்கின்றன.

அட, இது என்ன புது பிரச்சனை.

kopete இன் வலைமனைக்கு சென்று பார்த்த போதுதான் புரிந்தது ubuntu வைத்திருக்கும் kopete பொதி சற்றே பழையது. ஒளிவழி உரையாடல் வசதி தற்போது சோதனையில் இருக்கும் பதிப்பிலேயே சேர்க்கப்பட்டிருந்தது.

மிகப்பிந்தைய பதிப்பொன்றினை மூல நிரலாக இறக்கி இருமவாக்கம் செய்யத்தொடங்கினேன் (compile) ஏறத்தாழ ரைமணி நேரத்துக்கும் மேலால் இருமவாக்கம் நிகழ்ந்து கடைசியில் வழுச்செய்தியுடன் முடிந்தது.

பிறகு அவர்கள் தமது வலைத்தளத்தில் தந்திருந்த உபுண்டு பொதியினை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன்.

ஆம் உண்மையிலேயே அது வேலைசெய்தது. எம் எஸ் என் வழியாக வின்டோஸ் காரர்களுக்கு எனது முகத்தை காண்பிக்கமுடிந்தது.

ஆனால் புது பிரசனை. யக்கூ புகுபதிகையாகிறதில்லை. (login)


தேடிப்பார்த்தால் அது குறிப்பிட்ட அந்த kopete பதிப்பிலிருக்கும் (0.12 beta 1) வழு என தெரியவந்தது.

அதற்கு முந்தைய பதிப்பிற்கு தரக்குறைப்பு செய்யவேண்டியிருந்தது.

ஒருவாறாக kopete 1.12.0 பதிப்பிற்கான உபுண்டு பொதியினை தரவிறக்கி நிறுவிக்கொண்டேன். எல்லாம் சுபம்.

அழகாக வேலை செய்கிறது.

பாருங்க.... எவ்வளவு அழகா அரட்டை அடிக்கிறேன்... (தந்திரோபாயமாக முகத்தை காட்டாமல் விட்டுவிட்டேனே!)


ஆக, வின்டோஸ் காரர்களுக்கு வெப்காம் காட்ட இருக்கவே இருக்கிறது kopete!

Monday, August 28, 2006

Firefox இல் தமிழ் எழுத்துக்கள் பிய்ந்து பிய்ந்து தெரிகின்றன.

இப்பொழுதுதான் லண்டனில் இருந்து ஒரு நண்பர் தொலைபேசி வழியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று கேட்டார். நான் அன்று பட்ட பாடு நினைவுக்கு வந்தது.

இந்த பிரச்சனைக்கான அடிப்படைக்காரணம், firefox நிறுவனம், சிக்கலான ஒருங்குறி எழுத்துக்களை கையாள்வதற்கான மென்பொருளான pango வுடனான தொடர்பை இயல்பிருப்பில் துண்டித்துவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு தடவை firefox ஆரம்பிக்கும்போதும் pango வுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட மாட்டாது.

இந்த துண்டிப்பு pango இலிருக்கும் வழுவொன்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்டதாக செவிவழியாக அறிந்திருக்கிறேன். உண்மை தெரியவில்லை.

open suse போன்ற வழங்கல்களில் அவர்கள் pango உடனான தொடர்பை தாமாக இயல்பிருப்பில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் எழுத்துக்கள் இயங்குதளத்தை நிறுவிக்கொண்டவுடனேயே எந்த பிரச்சனையும் இல்லாமல் தெரிகிறது.

இப்போது உபுண்டுவில் இதனை நாம் கையால்தான் செய்யவேண்டியுள்ளது.

/etc/environment என்ற கோப்பினை திறந்து அதில் பின்வரும் ஆணையை சேர்க்கவேண்டும்

MOZ_ENABLE_PANGO=1

சேர்த்து சேமித்தபிறகு firefox இனை மூடி மறுபடி திறந்தால் தமிழ் எழுத்துக்கள் அழகாக தெரியும்.

தீ கீ போன்ற எழுத்துக்களின் விசிறி வித்தியாசமாக இருக்கும். பயப்படவேண்டாம். அது உபுண்டு இயல்பிருப்பாக வைத்திருக்கும் தமிழ் எழுத்துருவின் வடிவம். வழு எதுவுமில்லை. இந்த எழுத்துரு பிடிக்காவிட்டால் வேறு எழுத்துருக்களை firefox அமைப்புக்கள் பகுதிக்கு சென்று மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.


பிறகுதான் கேள்விப்பட்டேன் pango இனை உயிர்ப்பூட்டும் இந்த செயன்முறையை நாம் கையால் செய்ய தேவையில்லை. language-support-ta என்று ஒரு பொதி உபுண்டுவிற்கென இருக்கிறது. அந்த பொது இந்த மாற்றம் உள்ளிட்ட தமிழ் பயனர்களுக்கு தேவையான பல மாற்றங்களையும் அமைப்புக்களையும் தானே செய்துதருகிறது. இதனை நிறுவிக்கொண்டால் போதுமானது.

repositories எல்லாம் செயற்படுத்தப்பட்ட பின்னர்,

sudo apt-get install language-support-ta

என்ற ஆணையை வழங்கினால் போதும். (இணைய இணைப்பு உள்ளவர்கள்)


முன்பொருமுறை வேறொரு நண்பர் இந்த பொதி நிறுவப்பட்ட பின்னரும் தனக்கு தமிழ் தெரியவில்லை என ரொம்ப கவலைப்பட்டார்.

பிறகுதான் கண்டுபிடித்தோம் அவர் பயன்படுத்தியது மெய்யான firefox இல்லை. அதன் மூல நிரலிலிருந்து வேறு ஒரு நிறுவனத்தால் இருமவாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படும் swiftfox என்று.

ஆக, swiftfox இல் தமிழ் தெரியாது.

சூரியன் டொட் கொம் இற்கு நன்றி.

பொதுவாக க்னூ லினக்ஸ் பயனர்களுக்கு ஏற்படும் பிரச்சனை ஒப்பன் ஆபீஸ் மென்பொருளில் தமிழ் எழுத்துக்கள் உடைந்தும் பிரிந்தும் தெரிவது. குறிப்பாக அச்சிடும்போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.


இந்த பிரச்சனை என்னை முதலில் தாக்கிய காலங்களில் தனிக்குறியீட்டு சேவையை அளிக்கும் மென்பொருட்களோடு ஓபன் ஆபீஸ் சரியாக தொடர்புற்று இயங்கவில்லையோ என்ற சந்தேகத்தில் நிறைய குடைந்தேன். பயன் எதுவும் இல்லை.

பிறகுதான் எழுத்துருக்களை மாற்றும்போது உடைவுறுவதும் வெவ்வேறு அளவுகளில் மாறுவதை அவதானித்தேன். இவ்வாறகா மாற்றி மாற்றி பார்த்தபோதே தற்செயலாக கண்டுபிடித்தேன், சூரியன் டொட் கொம் எழுத்துருவில் அழகாகவும் நேர்த்தியாகவும் தமிழ் தெரிகிறது.

இன்றுவரைக்கும் இதற்கான காரணம் என்ன என்று எனக்கு சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் இங்கே எனக்கு சொல்லித்தாருங்கள்.

மொத்தத்தில் ஓபன் ஆபீஸ் பயன்படுத்துபவர்கள் எழுத்துருக்கள் தெரிவதில் பிரச்சனை ஏற்பட்டால் சூரியன் டொட் கொம் எழுத்துருவை பரிந்துரைக்கிறேன்.

குறிப்பு - இந்த எழுத்துரு இன்னமும் திறந்த மூலம் இல்லை. ஆனால் இதனை திறந்த மூலமாக்கும் அனுமதியை இவ்வெழுத்துருவின் உரிமையாளர் உ. ஜெயதீபன் அவர்களிடம் பெற்றுக்கொண்டிருக்கிறேன். க்னூ பொதுமக்கள் உரிமத்தை சரியான முறையில் இவ்வெழுத்துருவுக்கு வழங்கும் முறைவழிகள் எனக்கு தெரியாதிருக்கிறது. ஆலோசனை வழங்கவும்.

Sunday, August 27, 2006

jEdit தந்த தொல்லை.

விக்கிபீடியா கட்டுரைகளை இலகுவாக தொகுப்பதற்கு ஏதாவது நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டதுதான் jEdit.

வழமைபோல இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ள டெபியன் பொதி ஒன்றினை தேடிப்பெற்றேன். (மூலத்திலிருந்து இருமவாக்கம் (compile) செய்துகொண்டிருப்பதற்கு சோம்பலில் டெபியன் பொதியின் தயவை நாடினேன்)

மேற்கண்ட பொதியினை நிறுவிக்கொண்டிருக்கும்போது, dpkg வழுச்செய்தியை தந்தது. பொதியை நிறுவ முடியாதாம்.

பிரச்சனை இப்படித்தான் ஆரம்பமாகியது.

வழமையாக இப்படி ஏதாவது பொதி நிறுவிக்கொள்ளும்போது வழுவுற்றால் இலகுவாக synaptic சென்று உடைந்த பொதியாகவிருக்கும் அதனை அகற்றிவிட்டால் போதுமானது. ஆனால் இந்தமுறை அது சரிவரவில்லை.
synaptic மறுபடி மறுபடி உடைந்த பொதி ஒன்று மீள் நிறுவலுக்காக காத்திருக்கிறது என்ற வழுச்செய்தியை தந்துகொண்டிருந்ததே அல்லாமல், அகற்றுவதற்கான வழி எதனையும் விட்டுவைக்கவில்லை. பொதியை அகற்றுவதற்கு தேவையான தகவல் பொதியில் இல்லை. அதுதான் பிரச்சனை.

jEdit பயன் படுத்தும் ஆசை விட்டுப்போய்விட்டது. ஆகக்குறைந்தது என்னுடைய apt அல்லது synaptic ஆவது ஒழுங்காய் வேலைசெய்தால் போதும் என்றாகிவிட்டது

எப்பாடுபட்டும் உடைந்துபோன jedit பொதியினை நீக்க முடியவில்லை.

இறுதி ஆயுதமாக ஒவ்வொரு கோப்பாக தேடிச்சென்று அகற்றும் நிலைக்கு போனாலும் கூட apt இனை சரிப்படுத்த முடியாதே?

synaptic பொதிகளை பட்டியலிட்டு கூட காட்டவில்லை. ஏறத்தாழ apt செத்துவிட்டது என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிற்று.

apt இயங்கமறுத்தால் என்னுடைய கணினிப்பயன்பாட்டின் அர்த்தமே இல்லாதுபோய்விடும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பொதிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டிவரும்.

ஆசை ஆசையாய் எல்லாவகையான வசதிகளையும் ஒவ்வொன்றாய் பொருத்தி கட்டமைத்து வைத்திருக்கும் என்னுடைய dapper drake இயங்குதளத்தை மீள நிறுவ வேண்டி வந்துவிடுமோ என்கிற பயம் வேறு தொற்றிக்கொண்டது.

கடைசியாக google இன் உதவியை நாடினேன்.

பலன் கிடைத்தது.

இதே பிரச்சனை, இதே பொதியை நிறுவ முற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் தனது வலைப்பதிவில் இதற்கான தீர்வினை வெளியிட்டிருக்கிறார்.

அடிப்படை இதுதான்.

apt, பொதிகளின் நிறுவல் விபரத்தை சேமித்துவைத்திருக்கும் ஒரு கோப்பில் jEdit உடைந்துபோய்விட்டது என்ற தகவலை வைத்திருக்கிறது. இந்த தகவலையே வழுச்செய்தியாக காட்டிக்கொண்டு இயங்க மறுக்கிறது. அந்த தகவலை கைமுறையாக மாற்றிவிட்டால் வழுச்செய்தி வராதுதானே?

அந்த கோப்பு எங்கே இருக்கிறது?

இதுதான் அந்த கோப்பு

/var/lib/dpkg/status

இந்த கோப்பை உரைச்செயலி ஒன்றில் திறந்துவைத்துகொண்டு jedit என்பதை தேடினேன்.
jedit இற்கன தகவலில் status வரியில் reinstall needed என்பதாக இருந்த தகவை மாற்றி Status: install ok installed
என்று அமைத்துக்கொண்டேன்.

ஆசைக்கு ஒருமுறை sudo apt-get update இனை ஓடவிட்டுவிட்ட பின் எல்லாம் சரி.
பிரச்சனை தீர்ந்தது.

உடைந்த jEdit என் கணினியில் குற்றுயிராயும் ஆவியாயும் உலாவுவதாக தகவல்கள் உண்டு.
கணக்கெடுப்பதில்லை.

ஆக, இனி இப்போதைக்கு jEdit பயன்படுத்துவதாய் இல்லை.

Saturday, August 26, 2006

வணக்கம்

"ம்..." இருக்கு. அதிலேயே தொடர்ச்சியாக எழுதக்காணோம். அதற்கிடையில் இது இன்னொரு வலைப்பதிவு.

வெவ்வேறு விடயங்களுக்கென இரண்டு மூன்று வலைப்பதிவுகளை வைத்திருக்க எனக்கு அவ்வளவாய் விருப்பமில்லை. கவனச்சிதறல், ஒழுங்கீனம் ஏற்படலாம்.

இதனால்தான் தொழிநுட்பம், அரசியல், விமர்சனம் என்று எல்லாவற்றையும் "ம்..." இலேயே எழுதிவந்தேன்.

தற்போது "ம்..." பெற்றுக்கொண்டிருக்கும் தோழர்களை இப்படி ஒரு குறிப்பேட்டினை அங்கே திணிப்பதன்மூலம் தொந்தரவு செய்ய விருப்பமில்லாதிருக்கிறது.

அத்தோடு இப்படி ஒரு குறிப்பேட்டினை பேணிவரவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக மனதுள் இருந்தே வந்தது.

இதற்காகவே கணினியில் டொக்குவிக்கியினை நிறுவி பயன்படுத்த தொடங்கினேன். மாதத்துக்கு இரண்டுதரம் இயங்குதளத்தை மாற்றும் எனக்கு அது அவ்வளவாய் சரிப்பட்டுவரவில்லை.
ஆகக்குறைந்தது ஒரு தனிக்கோப்பினையாவது இவ்வாறான குறிப்புக்களுக்கு பயன்படுத்துவோம் என்ற எண்ணமும் வெற்றிபெறவில்லை.

கடைசியாக இப்படியான குறிப்பேட்டினை வலைப்பதிவாக வைத்திருந்து வாசகர் முன்னால் திறந்துவிடும்போது, ஒழுங்காகவும், தொடர்ச்சியாகவும் இவ்வாறான ஆவணப்படுத்தலை செய்ய உற்சாகம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இப்பதிவினை ஆரம்பிக்கிறேன்.

இப்படியான வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் ஏராளமாக இருக்கின்றன. சில வேளைகளில் அவசரத்துக்கு இவ்வாறான வலைப்பதிவுகளே பெரும் உதவிகள் செய்கின்றன. இச்செல்நெறியை தமிழுக்கும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கமும் இப்பதிவின் தொடக்கத்தில் அடக்கம்.

வின்டோஸ் போன்ற தனியுரிமை மென்பொருட்களுக்கு பெரும் பணம் செலவழித்து பெரு நிறுவனங்கள் ஆவணப்படுத்தல்களை செய்கின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் உதவிகள் வழங்குகின்றன.

ஆனால் க்னூ போன்ற சமுதாய மென்பொருட்களுக்கும் சமுதாய தொழிநுட்பங்களுக்கும் அச்சமுதாயமே எல்லாவற்றையும் செய்யவேண்டியிருக்கிறது.

நாம் கற்றுக்கொண்டதை, நாம் அனுபவப்பட்டதை மற்றவர்களோடு பகிர்ந்து மகிழும் பேரனுபவத்தை இந்த சமுதாய உணர்வின் மூலம் பெறலாம்.

க்னூ/லினக்ஸ் எனும் சமுதாய உற்பத்திப்பொருள் ஒன்றினை பயன்படுத்திவரும் நான் அன்றாடம் சந்திக்கும் தொழிநுட்பச்சிக்கல்களை, அவற்றை எப்படி தீர்த்துக்கொண்டேன் என்பதை, புதிதாக இது சார்ந்து என்ன அறிந்துகொண்டேன் என்பதை மற்றவரோடு பகிர்தல் என்பது கட்டற்ற மென்பொருள் உலகில் மட்டுமே காணப்படும் சுகம்.

அதனை தமிழிலும் காண ஆசைப்படுகிறேன்.

இப்படியான சிறுசிறு பயன்பாட்டு குறிப்புக்களை பகிர்தல் மூலம் ஆவணப்படுத்திக்கொண்டால், இக்குறிப்பு தேவைப்படும் இன்னொருவர் தனது தேடலை முதலில் இருந்து தொடங்காமல், இந்த ஆவணங்கள் வழியாக இலகுவாகப்பெற்று, அறிவினை மேலும் விருத்தி செய்வதற்கான அடிப்படையையும் அவகாசத்தையும் பெற்றுக்கொள்வார்.

இந்த பகிர்தல் தமிழ் தளயறு மென்பொருள் பயன்பாட்டாளர்களிடையேயான ஊடாட்டத்தையும் நட்புறவினையும் வளர்க்கும்.


இந்த வலைப்பதிவில், நான் எனது கட்டற்ற மென்பொருள் பயன்பாட்டு அனுபவங்களை, அன்றாடம் சந்திக்கும் சிறு சிறு சவால்களை, அதனை எப்படி தீர்த்துக்கொண்டேன் என்பதை, கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பாக பெற்றுக்கொண்ட செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.

இவ்வாறான பகிர்தலை வளர்த்தெடுக்க னைவரையும் அழைக்கிறேன்.


அறிவு திறந்தே இருக்கட்டும்.