பல நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டிருந்த பணி, சக லினக்ஸ் தோழர் சயந்தனால் இப்போது நிறைவேறி முடிந்திருக்கிறது.
பெரும்பாலான மொழிகளின் பெரும்பாலான விசைப்பலகை வடிவங்களைப் பயன்படுத்தக்கூடியதாக இருந்த லினக்சில் பாமினி வடிவத்தை பயன்படுத்தி ஒருங்குறித்தமிழை உள்ளிட முடியவில்லையே என்ற குறை பல நாட்களாக இருந்துவந்துள்ளது.
இதற்கு ஈழத்தமிழர்கள்தான் பெரும் காரணம். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண-வடபுலத் தமிழர்கள். இவர்களுக்கு ஏனோ தெரியவில்லை லினக்சைப்பிடிப்பதில்லை.;-) அத்தோடு இவர்கள்தான் இந்த பாமினியை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள். ஆக இவர்கள் லினக்சை பெரிதாக பயன்படுத்தாமற்போனதால் பாமினியும் லினக்சுக்கு இல்லாமற்போய்விட்டது.
சயந்தன் லினக்சில் காதல் கொள்ளவே, அவருக்கு பாமினி தேவைப்பட்டுப்போய் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அத்தோடு நான் கேட்டுக்கொண்ட பாமினியில் தட்டெழுதப்பட்ட அரிச்சுவடியினையும் உடனே எந்த தாமதமுமின்றி எனக்கு அனுப்பி வைத்தார். அவரது பேருதவியுடன் இந்த பாலினி விசைப்பலகை இயக்கியினை எழுதி முடித்தேன்.
scim-tables முறையில் வைத்திருப்பதா அல்லது m17n உள்ளீட்டுமுறையாக மாற்றி வெளியிடுவதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததும். பாலினி பொதுப்பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த தபுண்டு கட்டாயம் பாலினியைக் கொண்டிருக்கும். அதற்கு சில நாட்கள் பொறுத்திருக்கவேண்டியிருக்கும்.
அதுவரை பாலினியின் சோதனைப்பதிப்பான scim-tables script இங்கே கிடைக்கும்.
== புதிய "ஐடியா"க்கள் ==
சும்மா இருக்கும் பாமினி விசைப்பலகையை அப்படியே தருவதானால் லினகின் பேராற்றலைப் பயன்படுத்திக்கொள்ளாததாகிப்போய்விடும்.
சயந்தன் சில யோசனைகள் சொன்னார். அந்த யோசனைகளைத் தொட்டு இந்த பாலினியில் பாமினியில் இல்லாத பல புதிய வசதிகளை சேர்ப்பதாய் உத்தேசம்.
அதாவது பாமினி முறைப்படி தட்டினால் அழகாக இந்த இயக்கி ஒருங்குறி எழுத்துக்களைத் தரும்.
அதற்கும் மேலதிகமாக சில இலகுபடுத்தல்கள், மாற்றங்கள் இந்த பாலினி கொண்டிருக்கும்.
என்னென்ன புதிய வசதிகள் வேண்டும் என இங்கே பின்னூட்டமிட்டீர்களானால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, சயந்தனுக்கு ஊகார எழுத்துக்களோடு பிரச்சினை. பல ஊகார எழுத்துக்கள், (ழூ, கூ, சூ) போன்றவை பாமினியில் எங்கே இருக்கிறதென சயந்தனுக்கு ஒரே குழப்பம்.
அவர் எளிய வழிமுறை ஒன்றினைப்பரிந்துரைத்தார்.
உகர எழுத்துக்களுடன் அரவை அடித்தால் ஊகாரம் வரும்படி செய்து தரச்சொன்னார். செய்தாப்போச்சு!
இப்போது பாலினியில் இந்த வசதி உண்டு.
Ah என்று தட்டினால் அது "யூ" என்ற எழுத்தைத்தரும். இப்படியாக எல்லா எழுத்துக்களுக்கும்.
உங்களுக்கும் பாமினி விசைப்பலகையில் இப்படியான புதிய வசதிகள் வேண்டுமா?
பின்னூட்டமிடுங்கள்.
அனைவருக்கும் மிகவும் உதவக்கூடிய பாலினியை பெற்றெடுப்போம்.
** மேலதிக தகவல் : என்னுடைய சுட்டி (mouse) பழுதடைந்துவிட்டது. இன்று முழுக்க சுட்டி இல்லாமற்தான் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நல்ல அனுபவம். இந்த பதிவை இடும் செயற்பாட்டில் கூட சுட்டி பங்குபற்றவில்லை. GNOME இன் mouse key function இற்கு நன்றி. வாழ்க்கை ஒரேமாதிரியாக போய்க்கொண்டிருந்தால் இப்படியான வீரதீர செயல்களை நீங்களும் செய்துபார்க்கலாம். :-)))
Monday, May 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மயூரன்!
விரைவில் திருப்பம் ஒன்று நிகழும் போல் தெரிகிறது. :))
மிகநல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
சயந்தன் க்+ துணைக்கால் = கூ என்ற மாதிரி சொன்னார். அப்படி எழுதினால் தமிழ் எழுத்துக்கள் உருவாகும் முறையைத் தவறாக மனதில் பதித்துக் கொள்ளும் பெரும் பிழையாகி விடும். க் + ஊ = கூ என்ற மாதிரி எழுதுவது தான் சரியான முறை.
சயந்தன் சொன்னது கு+அரவு= கூ என்பதாக புரிந்துகொண்டேன். அதன்படித்தான் விசைப்பலகையும் இயங்குகிறது. க்+அரவு= கூ என்பது எனக்கும் உடன்பாடில்லை.
//சயந்தன் க்+ துணைக்கால் = கூ என்ற மாதிரி சொன்னார்.//
இல்லை. ரவி அது தவறான புரிதல். நான் கு + அரவு இனைத் தான் கூ என தருமாறு கேட்டுக்கொண்டேன்.
தவிர பாமினியில் க் + அரவு தட்டச்சுவதற்கு மூன்று விசைகளை அழுத்த வேண்டியிருக்கும் அதாவது க பிறகு குற்று பிறகு துணைக்கால்.
அதாவது க் என்பதற்கு பாமினியில் தனிவிசை இல்லை. இரண்டு விசைகளை அழுத்தியே க் பெறப்படுகிறது.
பாமினி என்றே பெயர் உள்ளவாறு, பாமினி++ போன்று பெயரிடுங்களேன். இல்லையேல் புதிய பயனர்கள் குழம்பி பொய்விடுவார்கள்.
ஏன் இவ்வளவு குழப்பம்???
பாமினியில் ஏற்கனமே இந்த குழப்பத்துக்கான பதில் இருக்கே....!!!
shift + 3 = சூ
shift +4 = கூ
shift +5 = மூ
shift +6 = டூ
shift +7 = ரூ
- அல்லாவிடின் இதை விட சுலபமாக எங்களுக்கு ஏற்றவாறு.. எழுத்துக்களை அமைத்து கொள்ளலாம்.
எல்லாம் நாங்கள் கணினிக்கு கொடுக்கும் 1ம் 0 லும் தானே இருக்கு. :-)
- சாரங்கன் சொல்லியது மிக சரி.
பாவனையாளர்களுக்கு சினேகபூர்வமாக இருப்பதற்க்காக பாமினி என்னும் பெயருடன் ஏதாவது சிறிய அடையாளத்தையோ எழுத்தையோ சேர்த்தால் போதும்.
- முடிந்தால் எனக்கு நேரம் கிடைக்கும் போது ( வருகிற 2 கிழமை விடுமுறையில் பகுதிநேர வேலை இல்லாமல் வீட்டில் கொட்டாவி விடும்போது .. உங்களுக்கான இந்த கணினி நிகழ்ச்சியை செய்ய முயற்ச்சி செய்கிறேன்..
அதற்க்கு நீங்கள் எனக்கு லினக்ஸ் சொல்லி தர வேண்டும் :-)
- லினக்ஸ் பற்றிய அறிவு நிறைவாக இல்லை இருந்தாலும்.. எனது சிற்றறிவுக்கு எட்டியபடி..:-)
லினக்ஸில் ஏற்கனமே உள்ள தமிழ் தட்டெழுத்துக்கான கணினி நிகழ்ச்சியை
பாமினிக்கு மாற்றினால் சரிதானே.. இதில் என்ன சிரமம்...???
சாரங்கன். சரியான கருத்து.
பாமினி என்று பயனர்களுக்கு தெரிய வேண்டும். அடைப்புக்குறிக்குள் பாமினி என்று போட்டு விடுகிறேன்.
பாமினி ++ போன்ற பெயர்தான் பாலினி என்பதும்.
சுரதா, பாமுனி, ரொம்பா என்று இரண்டு இயக்கிகள் வெளியிட்டார் வின்டோச்க்கு. அதைப்போல.
//அல்லாவிடின் இதை விட சுலபமாக எங்களுக்கு ஏற்றவாறு.. எழுத்துக்களை அமைத்து கொள்ளலாம்.//
அதை தான் மயூரனிடம் கேட்டேன். அதைதான் அவரும் செய்தார் என நினைக்கிறேன்.
//எல்லாம் நாங்கள் கணினிக்கு கொடுக்கும் 1ம் 0 லும் தானே இருக்கு. :-)//
அப்போ எதற்காக எனது கீபோட்டில் 2 3 4 5 6 7 8 9 போன்ற இலக்கங்கள் உள்ளன.. :(
//பாமினியில் ஏற்கனமே இந்த குழப்பத்துக்கான பதில் இருக்கே....!!!
shift + 3 = சூ
shift +4 = கூ
shift +5 = மூ
shift +6 = டூ
shift +7 = ரூ
//
நன்றி கீர்த்தனா.
முன்னர் ஒருபோது நான் பாமினி வடிவத்தை பயன்படுத்தி இருக்கிறேன். ஆனால் நீண்ட நாடகளாகிவிட்டன. இந்த விடயம் இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இவற்றை இப்போது விசைப்பலகையில் சேர்த்திருக்கிறேன்.
//அல்லாவிடின் இதை விட சுலபமாக எங்களுக்கு ஏற்றவாறு.. எழுத்துக்களை அமைத்து கொள்ளலாம்.
எல்லாம் நாங்கள் கணினிக்கு கொடுக்கும் 1ம் 0 லும் தானே இருக்கு. :-)//
உண்மைதான். ஆனால் எல்லா நிரல்களும் திறந்து இருப்பதில்லை. அத்தோடு மாற்றுவதற்கான சட்டரீதியான அனுமதியும் கிடைப்பதில்லை.
//லினக்ஸ் பற்றிய அறிவு நிறைவாக இல்லை இருந்தாலும்.. எனது சிற்றறிவுக்கு எட்டியபடி..:-)
லினக்ஸில் ஏற்கனமே உள்ள தமிழ் தட்டெழுத்துக்கான கணினி நிகழ்ச்சியை
பாமினிக்கு மாற்றினால் சரிதானே.. இதில் என்ன சிரமம்...???//
சிரமம் என்னவோ பெரிதில்லைதான். ஆனால் ஏனோ தெரியவில்லை பலகாலமாக இந்த பணிகள் எதுவும் செய்யப்படாமலிருந்தன.
நீங்கள் சொன்னதுபோல, லினக்சை கற்றுக்கொள்ளுதல், அதில் உள்ளீட்டமைப்பு முறைகளைக் கற்றுக்கொள்ளுதல், அதன் இயக்கங்களை நிரலாக்க வடிவங்களைக் கற்றுக்கொள்ளுதல், பின்னர் அவற்றை இயங்கக்கூடியவண்ணம் மாற்றியமைத்தல் என்று பல படிகள் தாண்ட வேண்டியிருக்கிறதல்லவா/
அதுதான் சிரமம்.
சொல்லப்போனால் எந்த துறையும் பெரிய சிரமமில்லை. ஆனால் சிரமம்.
இருப்பதை அப்படியே பாமினிக்கு மாற்றுவது சாத்தியமில்லை. ஏனெனில் பாமினி தலைக்கீழாக இயங்குகிறது.
உதாரணமாக ஒலிப்பியல் முறை விசைப்பலகைகளில் கொம்புகள், விசிறிகள் பின்னரே சேர்க்கப்படுகின்றன. பாமினியில் அது மாறி நடக்கும்.
இது சின்ன உதாரணம். இப்படியாக பல.
ஆனால் பெரிய நிரலாக்கம் இதற்கு தேவையில்லை. சும்மா மேலோட்டமான அறிவைப்பயன்படுத்தினால் போதும்.
அதற்கெல்லாம் முதலில் நீங்கள் லினக்சை கற்றுக்கொள்ளுங்கள். ;-)
scim-tables முறையில் வைத்திருப்பதா அல்லது m17n
இதை இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா?
பாமினி நான் அவ்வளவாக உபயோகப்படுத்துவதில்லை,அதனால் நோ கமென்ட்ஸ்.
பாமினி, பாலினி என்ற பெயர்களை வைப்பது அவ்வளவு நல்லதாகப்படவில்லை. கவர்ச்சியில்லாமல் இருக்கிறது. தற்போதைய நிலையில் முன்னணியிலிருக்கும் நடிகர், நடிகை யாராவது ஒருவரின் பெயரை வைக்கலாம்.
என் தெரிவு நமீதா அல்லது விஜய ராஜேந்தர்.
(அப்பாடா, பெண்ணியவாதிகளிட்டயிருந்தும் ஒருமாதிரித் தப்பியாச்சு)
//தோழர் சயந்தனால் இப்போது நிறைவேறி முடிந்திருக்கிறது.
//
'தோழர்' சயந்தனின் இந்தப் 'பேருதவி' தமிழ் இணைய வரலாறுள்ளவரை தமிழர்களால் நினைவுகூரப்பட வேண்டும். கட்டாயம் நினைவுகூரப்படும். தோழருக்கு எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளவும்.
//scim-tables முறையில் வைத்திருப்பதா அல்லது m17n
இதை இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா?//
வடுவூர்,
இவை இரண்டும் scim உடன் ஒத்தியங்கும் இரண்டு உள்ளீட்டமைப்பு முறைகள்.
வெவ்வேறு வடிவான நிரலாக்க சட்டகங்களை கொண்டிருகின்றன.
மேலதிக விபரங்களுக்கு பார்க்க,
www.m17n.org
www.scim-im.org
அன்புள்ள மயூரன்
இவ் வலைப்பதிவை இன்றுதான் (13 ஜூன் ) பார்த்தேன். பாமிலி எழுதப்பட்டுள்ளதற்கு தங்களுக்கும் சயந்தனுக்கும் வாழ்த்துக்கள்.
m17n இல் நண்பர் ஃபேலிக்ஸ் (of Red Hat Indic Team) ஆக்கிய ta-typewriter விசைப்பலகையில் உள்ள பல வழுக்களை கண்டு அவற்றின் வழுக்களை எடுத்துகாட்டிய அனுபவங்களின் பின் எந்த தட்டச்சு முறை விசைப்பலகைகளையும் நான் சோதனை செய்யகையில் முக்கியமாக 3 வழு ஏற்படக்கூடிய விடயங்களை முதலில் பார்ப்பேன். அவைகள் பின்வருமாறு:
1. முறைமையினால் வெளித்தரப்படும் ஒகர, ஓகார உயிர்மெய்களுக்கு சரியான குறியீடுகளுடன் செய்யப்பட்டுள்ளதா?
பாமிலியில் இதுவரை செய்த random சோதனைகளில் அவைகள் சரியே எனத் தெரிகிறது.
2. ஔகார உயிர் மற்றும் ஔகார உயிர்மெய்களில் (உள்ளிட தட்டச்சு முறைமைகள் "ள" கரத்தைப் பாவிப்பதால்) அவைகள் ஒருங்குறியில் சரியான ஔகாரத்துடன் வெளிவருகின்றனவா?
இதிலும் பாமிலியில் random சோதனைகளில் அவைகள் சரியே எனத் தெரிகிறது.
3. பழைய தட்டச்சுக்கள் போலல்லாது புதிய தட்டச்சு எனக் கூறப்படும் வகைகளில் மெய்க்கும் (உ-ம் : க்) அதன் ஆகார (கா), இகர (கி) மற்றும் ஈகார (கீ) உயிர்மெய்களுக்கும் உள்ளிடுவது மெய்யின் பின்னே உயிரொலி (glyph). ( வேறு சில தட்டச்சு விசைப்பலகைகளில் அத்துடன் சில உகர உயிர்மெய்களும் அவ்வாறு)
அதனால் (ஒ வின் பின் ள-கரம் உள்ளிடல் வெளியீட்டுக்கு ஔகரமாக்குவதால்) ஒள், ஒளா, ஒளி, ஒளீ என்பன சரியாக வெளிவருகின்றனவா என்பதும் அதேபோல (ஒரு எகர உயிர்மெய்யின் பின் ள-கரத்தை உள்ளிடல் வெளியீட்டுக்கு அம்மெய்யின் ஔகார மெய்யாக்குவதால்) அந்த எகர மெய்யுடன் ள், ளா, ளி, ளீ என்பன சரியாக சேர்ந்து வருகின்றனவா என்பனவைகளே நான் சோதிக்கும் அடுத்த வினாக்கள்.
இச் சோதனைகளில் பாமிலி தவறுகிறது. ஒள் ஒளா ஒளி ஒளீ என்பவைகளுக்கு உள்ளிட்டுப் பாருங்கள் - அவை ஔ; ஔா ஔp ஔP என்றுதான் வருகின்றன. அவ்வாறான வழுக்கள் ஒவ்வொரு எகர-உயிர்மெய்களின் பின் ள், ளா, ளி, ளீ என்பவைகள் உள்ளிடுகையிலும் ஏற்படும். நான் சிலவற்றைத்தான் சோதித்தேன் - ஆனால் மூலக் கோப்பினுள் பார்த்ததில் அவ்வழு எல்லா எகர மெய்களின் பின்னும் மேற்கூறிய ள், ளா, ளி, ளீ சேர்க்கையில் வரக்கூடியதாகவே உள்ளது.
இவ்வழுக்களைத் தீர்க்க:
பின்வரும் வரிகளைச் சேர்க்கவும் :
xs; ஒள்
xsh ஒளா
xsp ஒளி
xsP ஒளீ
nfs; கெள்
nfsh கெளா
nfsp கெளி
nfsP கெளீ
...
அவ்வாறு ஒவ்வொரு எகர-உயிர்மெய்யிற்கும் செய்ய வேன்டும்!
பொதுவாக நான் கண்டுள்ளது ஒருங்குறிக்காக ஆக்கப்படும் தட்டச்சு முறைமை விசைப் பலகைகளில் வழுக்கள் கூடுதலாக உள்ளன. (தட்டச்சு முறை பாவனையாளர்களே லினக்ஸ் உலகில் இல்லை என்றும் நினைக்கிறேன் - இல்லாவிட்டால் வழுக்களைப் பற்றி அடிக்கடி வினாக்கள் வந்திருக்குமே பல குழுமங்களில்!). ஒலிப்பியல் முறைகள் (தமிழ்99, இன்ஸ்கிரிப்ட் மற்றும் எல்லா qwerty ஆங்கில ஒலிப்பியல்) இயல்பாகவே ஒருங்குறியின் மெய்யின் பின் உயிரொலி என்ற வரிசையுடன் ஒத்துள்ளதாலும், தட்டச்சு முறைகளில் போலல்லாது ஔகாரத்துக்கும் அதன் உயிரொலிக்கும் ள-கரத்தை பாவிக்கதாதலும் ஒலிப்பியல் முறைகளுக்கான விசைப்பலகைகளில் வழுக்கள் ஏற்படுவத்ற்கு சாத்தியங்கள் குறைவு.
இவ்வாறான பிரச்சினைகளைப் பற்றி நான் ஓரிரண்டு கட்டுரைகள் எழுத உள்ளேன் - அதன் பின் freetamilcomputing குழுமத்தில் பரவலாகக் காணப்படும் வழுக்களை எடுத்துக் காட்டவுள்ளேன்.
கா. சேது
எனது மேலுள்ள பின்னூட்டத்தை வாசித்த எல்லாருக்கும்:
மன்னிக்கவும் - பாலினியை நான் பாமிலி எனத் தவறாக எழுதியுள்ளேன் நேற்றிரவு - தூக்க கலக்கத்தினால் என நினக்கிறேன்.
கா. சேது
சேது சொன்ன ஒளி வழுவினை நானும் சுட்டிக் காட்ட இருந்தேன். ஒள வினை ஒரு எழுத்தாக கொள்ளும் போது ஒளிக்காள ளி யில் விசிறி இட முடியவில்லை. ஒளியிலை தட்டச்ச ஒள என தட்டச்சி பின்னர் ளியினை பிரித்தெடுத்து அதற்கு விசிறி சேர்க்க வேண்டியிருந்தது. நானும் ஒவ்வொரு தடவையும் இவ்வாறான இடறல்களை எதிர் கொள்ளும் போது நீங்கள் அனுப்பிய கோப்பினில் அவற்றை சேர்த்துப் பயன்படுத்துகிறேன்.
இதனைத் தவிர தற்போதைய பாலினியில் shift விசை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மாற்றும் விசையாக உள்ளது.
அதே நேரம் பாமினி வடிவில் shift இன் பயன்பாடு அதிகமானது. அதாவது பல எழுத்துக்கள் shift விசை அழுத்தியிருக்கையிலேயே தட்டச்சப் படுகின்றன. சில வேளைகளில் அல்ல எனக்கு பல வேளைகளில் தவறுதலாக தனியே shift மட்டும் அழுத்துப் பட ஆங்கிலத்துக்கு மாறிவிடுகிறது.
பாலினியில் ஆங்கிலத்திற்கு மாறும் option தேவை தானா..
அல்லது அதற்கான விசையை மாற்ற முடியாதா..
ஆராய்க..
//இதனைத் தவிர தற்போதைய பாலினியில் shift விசை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மாற்றும் விசையாக உள்ளது.//
சயந்தன், தாங்கள் குறிப்பிடுவது Front-end trigger hotkey அதன் அமைப்பு உள்ளது scim-setup இல் Front End --> Global Setup இல். அந்த hotkey பாலினியின் கோபிலிருந்தோ வேறு எந்தவொரு வி.ப. க்கான கோப்பிலிருந்தோ ஏற்பட ஒரு காரணியையும் நான் கண்டதில்லை.
தாங்கள் பாவிக்கும் மேசைத்தளம் எது? ( கனோம்?, கே.டீ.ஈ? ) மேலும் scim மேல் skim உறையும் பாவிகிறீர்களா? இவ் விரண்டு வினாகளுக்கான தங்கள் பதிலைப் பார்த்த பின் scim-setup மூலம் இருக்கும் hotkeys அகற்றுதல் மற்றும் மாற்று ஏற்பாடுகளை அமைப்பது என்பன எவ்வாறு என நான் எழுதுவேன்.
கா. சேது
Post a Comment