அபரிமிதமான வைரஸ் தாக்குதல், இயக்குதளத்தின் வேகம் குறைதல் போன்ற பிரச்சினைகளுக்கு வின்டோஸ் அடிக்கடி ஆட்பட்டுவிடும். அதனால் மாதத்துக்கு ஒருமுறையாவது வின்டோசை மீள நிறுவலாமா என யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆனால் லினக்சுக்கு வைரஸ் தாக்குதலோ, அடிக்கடி மீள நிறுவ வேண்டிய அவசியமோ இருக்காது. வருடக்கணக்கில் நிறுவும் போது இருந்த மாதிரியே அழகாக வேலை செய்யும்.
இங்கேதான் பிரச்சினை எழுகிறது.
வின்டோசை தனியாக அழித்து மீள நிறுவிக்கொள்ளும்போது கணினியை ஆரம்பித்தால் அது எந்த கேள்வியும் இல்லாமல் வின்டோசினையே ஆரம்பிக்கும்.
எந்த இயக்குதளத்தை ஆரம்பிக்கப்போகிறீர்கள் என்ற பட்டியலைத் தொடக்கத்தில் காட்டாது.
அந்தப்பட்டியலை காட்டுவதுதான் தொடக்க இயக்கி, அதாவது boot loader. இன்றைக்கு வரும் பெரும்பாலான லினக்ஸ் வழங்கல்கள் GRUB இனையே தொடக்க இயக்கியாக நிறுவித்தருகின்றன.
வின்டோசை மறுபடி நிறுவும் போது என்ன ஆகிறதென்றால், அது லினக்ஸ் உங்கள் MBR இல் எழுதிவைத்த தொடக்க இயக்கியை அழித்து துடைத்துவிட்டு, உங்களை எந்த கேவியும் கேட்காமல், உங்கள் கணினியிலிருக்கும் மற்றைய இயங்குதளங்களைக் கண்டுபிடிக்கும் வல்லமையற்ற தனது தொடக்க இயக்கியை நிறுவி விடுகிறது.
அடுத்த முறை கணினியை தொடக்கும்போது கணினி இயல்பாக வேறு வழியில்லாமல் உங்களை எதுவும் கேட்காமல் வின்டோசையே ஆரம்பிக்கிறது.
அபப்டியானால், நீங்கள் ஏற்கனவே நிறுவி வைத்துப் பயன்படுத்திக்கொண்டிருந்த லினக்ஸ் இயங்குதளத்தை எப்படி பயன்படுத்துவது?
GRUB இனை மீள நிறுவிக்கொள்வதன்மூலம் இந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம்.
கீழுள்ள படிமுறைகள் GRUB இனை மீள நிறுவிக்கொள்ளும் வழிமுறைகளை விளக்குகிறது.
தேவையான பொருட்கள்: தேனீர், Gparted அல்லது cfdisk நிறுவப்பட்ட ஏதாவதொரு நிகழ்வட்டு (ubuntu வினை பரிந்துரைக்கிறேன்)
படங்கள் அனைத்தும் உபுண்டு நிகழ் வட்டினைப் பயன்படுத்தி இதனை செய்வதைக் காட்டுகிறது.
1. உங்கள் கைவசமிருக்கும் நிகழ்வட்டினை (LIVE CD) தொடக்கி ஏதாவதொரு லினக்ஸ் சூழலை பெற்றுக்கொள்ளுங்கள்.
(நிகழ்வட்டு என்றால் என்ன, அதை எப்படி தொடக்குவது என்று இங்கே கேட்டால் அடி விழும்! போய் விக்கிபீடியாவில் கேட்டுக்கொள்ளுங்கள்)
2. GParted இனை ஆரம்பியுங்கள்.
3. வின்டோஸ் இனை நிறுவிவைத்திருக்கும் வகிர்வினை (partition) படத்தில் காட்டப்பட்டவாறு இடது புறம் சொடுக்குங்கள்.

4. manage flags என்பதை தெரிவு செய்யுங்கள்.

5. படத்தில் காட்டப்பட்டவாறு boot என்பதை தெரிவகற்றுங்கள்.
6. நீங்கள் ஏற்கனவே லினக்சின் மூல அடைவினை (/) இனை நிறுவிவைத்திருக்கும் வகிர்வை ( partition) வலப்புறம் சொடுக்குங்கள்
7. manage flags என்பதை தெரிவு செய்யுங்கள்
8. boot என்பதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது மாற்றங்கள் பதிவாகும். இதையே cfdisk கொண்டும் செய்யலாம். cfdisk பயன்படுத்தத்தெரிந்தவர்களுக்கு இப்படி படிமுறைகளை எல்லாம் விளக்க வேண்டியிராது என்று நம்புகிறேன்.
9. முனையத்தை திறந்து வைத்துக்கொள்ளுங்கள் ( terminal)
10. முனையத்தில் sudo grub என ஆணையிடுங்கள் (உபுண்டு என்பதால் sudo. பொதுவாக நிர்வாக அனுமதியுடன் இதை செய்ய வேண்டும் என்பது சட்டம். (root access))

11. இப்பொழுது grub> என்று சொல்லிக்கொண்டு நிற்கும்.

12. அதில் find /boot/grub/stage1 என்ற ஆணையை வழங்குங்கள்.
இந்த படிமுறை நீங்கள் எங்கே grub இனை நிறுவி வைத்திருக்கிறீர்கள் என்பதைக் கண்டு பிடித்துச் சொல்லும்.
எடுத்துக்காட்டாக, (hd0,0) என்று கண்டுபிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
13. இப்பொழுது root (hd0,0) என்ற ஆணையை வழங்குங்கள்.
14 setup (hd0) என்ற ஆணையை இப்போது வழங்கி grub இனை மீள நிறுவிக்கொள்ளுங்கள்.

15 அவ்வளவு தான். இனி QUIT என்ற ஆணையை வழங்கி grub செயலியை நிறுத்துங்கள்.
அடுத்தமுறை நீங்கள் கணினியை தொடங்கும்போது உங்கள் கணினியில் இருக்கும் எல்லா இயக்குதளங்களும் ஆரம்பத்திலேயே பட்டியலிடப்படும். வேண்டியதை தெரிவு செய்து தொடக்கலாம்.
இது தொடர்பான கேள்விகள், மேலதிகமாக சேர்க்கப்படவேண்டிய குறிப்புக்கள் இருந்தால் பின்னூட்டமிடுங்கள்.
3 comments:
இன்னும் இந்தப் பிரச்சினை வரல எனக்கு..vistaவ போட்டுப் பார்க்கலாமான்னு ஒரு யோசனை இருக்கு..ஆனா, இங்கு திருட்டு cd கிடைக்காதே :(
தகவலை பகிர்ந்ததற்கு நன்றி. ம், குறிப்பேடு - இரண்டிலும அடிக்கடி இடுகைகள் வருது..மீண்டும் வந்தாச்சா? :)
நிறுவுதல் பணியை நான் வேறுவிதமாக செய்வேன்.
என்னுடிய வன்தட்டை தேவையான அளவுக்கு பிரித்துவிட்டு,பூட் லோடர்க்கென்று ஒரு இடம் ஒதுக்கிவிட்டு,அதன் மூலம் எல்லா ஓ/ஸ் யையும் இணைத்துவிடுவேன்.
இப்படி செய்வதால் ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதனதன் இடத்தில் இருக்கும்,மாற்றவும் எளிது.
விவரமாக என்னுடைய லினக்ஸ் பதிவில் படங்களுடன் இருக்கு.
CD இல்லாதவர்க்ளுக்கு http://www.geocities.com/lode_leroy/grubinstall/ தளத்திலிருந்து பெற்ருக்கொள்ளாம்!
Post a Comment