Monday, May 28, 2007

உபுண்டு Feisty யின் VCD பிரச்சினை - தற்காலிகத் தீர்வு

வாங்குகின்ற திருட்டு வட்டுக்களை போட்டுப் பார்க்க முடியாவிட்டால் அது ஒரு கணினியா?

உபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை செய்யாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது.


அண்மைய பதிப்பு வந்ததிலிருந்து மிக அவசரமாக எந்தப்படமும் பார்க்கவேண்டியிருந்திராதபடியினால் இந்தப்பிரச்சினை எனக்குத் தலையிடியாக இருக்கவில்லை. நான் உபுண்டு நிறுவிக்கொடுத்த நண்பர்கள் நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு வீதியில் பெரியார் படத்தின் திருட்டு நகல் ஒன்றினை வாங்கிக்கொண்டுவந்து பார்க்கமுயன்றபோதுதான் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உந்துவிசை கிடைத்தது.


இயல்பிருப்பாக உபுண்டுவோடு வரும் Totem ஊடக இயக்கி வழுச்செய்தி ஒன்றினை தந்துகொண்டிருக்கிறது.

மற்றைய மென்பொருட்களும் ஏதாவது சொல்லிவிட்டுப் பேசாமலிருந்துவிடுகின்றன.

கடைசியாகப் பிரச்சினையை கூகிளாண்டவரிடம் முறையிட்டபோது தீர்வு கிடைத்தது.


பிரச்சினையின் மூலகாரணத்தை இன்னமும் அறியமுடியவில்லை.
வழங்கலின் வழுவாக இருக்கலாம்.

அதுவரை இந்த வழிமுறையைப் பின்பற்றிப் படம் பாருங்கள்.


1. mplayer மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்

sudo apt-get install mplayer

2. முனையத்தை (terminal) திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.

3. பின்வரும் ஆணையை வழங்குங்கள்

mplayer vcd://2


இப்பொழுது உங்கள் இறுவட்டு இயங்கும்.

முழுத்திரையில் பார்க்கவேண்டுமானால் f விசையினை உங்கள் விசைப்பலகையில் அழுத்துங்கள்.

முன்னே பின்னே ஓடவிட்டுப் பார்க்க அம்புக்குறிகளைப் பயன்படுத்துங்கள்.

நிறுத்த, முழுத்திரை இயக்கத்தை நிறுத்த esc விசையினைப் பயன்படுத்துங்கள்.

ஏனைய உதவிகளுக்கு

man mplayer

என்ற ஆணை மூலம் உதவிக்குறிப்புக்களை பெறலாம்.


mplayer vcd://2 ஆணை வேலைசெய்யாவிட்டால்

mplayer vcd://1
mplayer vcd://


போன்ற ஆணைகளை முயன்றுபாருங்கள்.


ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டாலோ பின்னூட்டம் மூலம் உரையாடுங்கள்.

Thursday, May 24, 2007

பறக்கத் தெரியாதவர் தமிழரா?

திடீரென என் ஒன்று விட்ட தம்பி ஒருவருக்கு வானூர்தி ஒட்டிப்பார்க்கும் ஆசை வந்துவிட்டது. எப்படி வந்திருக்கும் என்று தெரியும் தானே? அவர் சொன்ன வார்த்தை ஒன்றைத்தான் தலைப்பாய்ப் போட்டிருக்கிறேன்.

Microsoft Flight Simulator இனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று அலைந்துகொண்டிருக்கிறார்.

இது எனக்குப் புதிய தேடும் படலத்தைத் தொடக்கி வைத்துவிட்டது.

திறந்தமூலமாகப் பறந்துபழகும் மென்பொருட்கள் ஏதாவது கிடைக்காதா?

என்ன செய்வது, எங்களுக்கு பறக்கும் ஆசை வந்தால் மென்பொருளைத்தான் தேடவேண்டும்.

பறக்கப்படித்துக்கொண்டிருப்பவர்கள் சிரிக்கிறீர்களா?

தேடிலில் ஓர் அழகிய, அற்புத மென்பொருள் கிடைத்தது.

அதுதான் Flight Gear!


முற்றிலும் திறந்தமூலமாக கிடைக்கும் இந்த மென்பொருள் மிக அழகாக க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் செயலாற்றுகிறது.

இந்த விளையாட்டு மென்பொருள் பற்றிய அறிமுகப்பக்கத்திலே,

"வணிக மென்பொருட்களாக வரும் வானூர்தி போன்மி மென்பொருட்களில் இருக்கும் மிகப்பெரிய குறையான, மூடப்பட்ட நிலைக்கு மாற்றாக, நீட்டிக்கப்படக்கூடிய, பெரும் பரப்பிலான சாத்தியங்களை வழங்கக்கூடிய, பறப்புப் பயிற்சிகளை முறையாக வழங்கக்கூடிய மென்பொருள் " என்று குறிப்பிடுகிறார்கள்.

வானூர்திகளின் உண்மையான உள்ளமைப்பைப், பௌதீகத் தத்துவங்களை உள்வாங்கி, அப்படியே தந்திருப்பது இதன் சிறப்பு.

ஏறத்தாழ உண்மையாகவே வானூர்தி ஒன்றினை ஓட்டிப்பார்க்கும் அனுபவத்தை இந்த விளையாட்டு உங்களுக்குத்தரும்.


இது உண்மையில் ஒரு கற்றல் மென்பொருள்.
இதனை பயன்படுத்த நீங்கள் சற்றே ஆழமாக சில விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆரம்பநிலை மாணவர்களுக்கு உதவக்கூடிய வழிகாட்டி ஒன்று இணையத்தில் கிடைத்தது.

இம்மென்பொருளின் வலைமனையில் ஏராளமான வானூர்திகள், வானூர்தித்தளங்கள், சிறப்புப் பொருத்துக்கள் போன்றவற்றை தரவிறக்கிக்கொள்ளலாம்.



இப்பொழுது நான் ஓரளவு பறக்கக்கற்றுக்கொண்டுவிட்டேன். சில நிமிடங்கள் அலுங்காமல் குலுங்காமல் பறப்பில் ஈடுபட முடிகிறது. ஆனால் தரையிறங்கத்தான் தெரியவில்லை.

நீங்களும் விளையாடிப்பாருங்கள்.



உபுண்டுவில் இம்மென்பொருளை நிறுவுவதற்கான ஆணை,

sudo apt-get install flightgear

மற்றைய வழங்கல்களில் பொதி முகாமைத்துவ செயலியில் flightgear என்று தேடி நிறுவுங்கள்.

பொதிகளை நேரடியாகத் தரவிறக்கி நிறுவ வலைமனைக்கு போய்ப்பாருங்கள்.


----



வானூர்தி, பறப்பு, தரையிறக்கம், வான் தாக்குதல், பறப்பில் ஈடுபடுதல், வானோடிகள், வான்படை......

எவ்வளவு அழகான தமிழ்ச்சொற்கள்!

இந்த விளையாட்டை விளையாடும்போது நண்பர்கள் வாயில் அநாயாசமாக இந்தச் சொற்கள் வந்துபோகின்றன.

ஈழப்போர் நல்ல தமிழ்ச்சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது. இயல்பாக புழங்கச்செய்கிறது.



----


ஒரு பாடலின் சில வரிகள்...


"ஆழக்கடல் நேற்றெமக்கு
நீல வானம் இன்றெமக்கு
நாளை தமிழ் ஈழமதும் எமக்குத்தான்! -புலி
வானமேறிப் போனதுவும் இதுக்குத்தான்

நூறு வருடங்கள் நெஞ்சில் இருந்திட்ட கனவு பலித்தது -நேற்று
நீரு கொழும்பிற்கு மேலே இருந்திட்ட நிலவும் சிலிர்த்தது.

நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது -புலி
இளவல் நான்கு பறந்துபோன அழகைப்பார்த்தது!"

பாடல் கேட்க

Monday, May 14, 2007

பாலினி - Bamini for GNU/Linux

பல நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டிருந்த பணி, சக லினக்ஸ் தோழர் சயந்தனால் இப்போது நிறைவேறி முடிந்திருக்கிறது.

பெரும்பாலான மொழிகளின் பெரும்பாலான விசைப்பலகை வடிவங்களைப் பயன்படுத்தக்கூடியதாக இருந்த லினக்சில் பாமினி வடிவத்தை பயன்படுத்தி ஒருங்குறித்தமிழை உள்ளிட முடியவில்லையே என்ற குறை பல நாட்களாக இருந்துவந்துள்ளது.

இதற்கு ஈழத்தமிழர்கள்தான் பெரும் காரணம். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண-வடபுலத் தமிழர்கள். இவர்களுக்கு ஏனோ தெரியவில்லை லினக்சைப்பிடிப்பதில்லை.;-) அத்தோடு இவர்கள்தான் இந்த பாமினியை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள். ஆக இவர்கள் லினக்சை பெரிதாக பயன்படுத்தாமற்போனதால் பாமினியும் லினக்சுக்கு இல்லாமற்போய்விட்டது.

சயந்தன் லினக்சில் காதல் கொள்ளவே, அவருக்கு பாமினி தேவைப்பட்டுப்போய் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அத்தோடு நான் கேட்டுக்கொண்ட பாமினியில் தட்டெழுதப்பட்ட அரிச்சுவடியினையும் உடனே எந்த தாமதமுமின்றி எனக்கு அனுப்பி வைத்தார். அவரது பேருதவியுடன் இந்த பாலினி விசைப்பலகை இயக்கியினை எழுதி முடித்தேன்.

scim-tables முறையில் வைத்திருப்பதா அல்லது m17n உள்ளீட்டுமுறையாக மாற்றி வெளியிடுவதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததும். பாலினி பொதுப்பயன்பாட்டுக்கு வந்துவிடும். அடுத்த தபுண்டு கட்டாயம் பாலினியைக் கொண்டிருக்கும். அதற்கு சில நாட்கள் பொறுத்திருக்கவேண்டியிருக்கும்.
அதுவரை பாலினியின் சோதனைப்பதிப்பான scim-tables script இங்கே கிடைக்கும்.


== புதிய "ஐடியா"க்கள் ==

சும்மா இருக்கும் பாமினி விசைப்பலகையை அப்படியே தருவதானால் லினகின் பேராற்றலைப் பயன்படுத்திக்கொள்ளாததாகிப்போய்விடும்.
சயந்தன் சில யோசனைகள் சொன்னார். அந்த யோசனைகளைத் தொட்டு இந்த பாலினியில் பாமினியில் இல்லாத பல புதிய வசதிகளை சேர்ப்பதாய் உத்தேசம்.

அதாவது பாமினி முறைப்படி தட்டினால் அழகாக இந்த இயக்கி ஒருங்குறி எழுத்துக்களைத் தரும்.

அதற்கும் மேலதிகமாக சில இலகுபடுத்தல்கள், மாற்றங்கள் இந்த பாலினி கொண்டிருக்கும்.

என்னென்ன புதிய வசதிகள் வேண்டும் என இங்கே பின்னூட்டமிட்டீர்களானால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, சயந்தனுக்கு ஊகார எழுத்துக்களோடு பிரச்சினை. பல ஊகார எழுத்துக்கள், (ழூ, கூ, சூ) போன்றவை பாமினியில் எங்கே இருக்கிறதென சயந்தனுக்கு ஒரே குழப்பம்.
அவர் எளிய வழிமுறை ஒன்றினைப்பரிந்துரைத்தார்.

உகர எழுத்துக்களுடன் அரவை அடித்தால் ஊகாரம் வரும்படி செய்து தரச்சொன்னார். செய்தாப்போச்சு!

இப்போது பாலினியில் இந்த வசதி உண்டு.

Ah என்று தட்டினால் அது "யூ" என்ற எழுத்தைத்தரும். இப்படியாக எல்லா எழுத்துக்களுக்கும்.


உங்களுக்கும் பாமினி விசைப்பலகையில் இப்படியான புதிய வசதிகள் வேண்டுமா?

பின்னூட்டமிடுங்கள்.

அனைவருக்கும் மிகவும் உதவக்கூடிய பாலினியை பெற்றெடுப்போம்.


** மேலதிக தகவல் : என்னுடைய சுட்டி (mouse) பழுதடைந்துவிட்டது. இன்று முழுக்க சுட்டி இல்லாமற்தான் கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நல்ல அனுபவம். இந்த பதிவை இடும் செயற்பாட்டில் கூட சுட்டி பங்குபற்றவில்லை. GNOME இன் mouse key function இற்கு நன்றி. வாழ்க்கை ஒரேமாதிரியாக போய்க்கொண்டிருந்தால் இப்படியான வீரதீர செயல்களை நீங்களும் செய்துபார்க்கலாம். :-)))

Friday, May 11, 2007

தபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்

இன்றைக்குத்தான் ஃபீஸ்டிக்கான (Feisty) தபுண்டு (tabuntu) பொதியினை முழுமைப்படுத்தி தரவேற்றினேன்.

சரி, முதலில் தபுண்டு என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.

தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமே தபுண்டு. ;-)

உங்களை அதிகம் அலைக்கழிக்காமல், மிக எளிமையாக மூன்றே மூன்று படிகளில் உங்களுக்குத்தேவையான சகல தமிழ் வசதிகளையும் உபுண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவித்தரும் பொதிதான் தபுண்டு.


நீங்கள் வின்டோஸ் பயனராக இருந்தால், உங்கள் கணினியில் இயங்குதளத்தை நிறுவியதும் ஏகப்பட்ட சடங்காசாரங்களை பின்பற்ற வேண்டிவரும்.

வன்பொருள் இயக்கிகளை ஒவ்வொன்றாக நிறுவுவது, வைரஸ் தடுப்பூசி, அப்புறம் ஆபீஸ், மற்றைய மென்பொருட்கள்...... இப்படி.

பிறகு தமிழை பயன்படுத்த வேண்டுமானால் இன்னும் தலையிடி.
ஒருங்குறி ஆதரவு, ஏ கலப்பை, இத்தியாதி....

லினக்ஸ் ஓரளவு பரவாயில்லை நிறுவியதும் பயன்படுத்தக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் தமிழை பயன்படுத்த அங்கேயும் ஏகப்பட்ட படிமுறைகளைத் தாண்ட வேண்டும்.

உபுண்டு இப்போதைக்கு தமிழ் பயனர்களுக்கு மிகச்சிறந்த லினக்ஸ் தெரிவாக அமைகிறது. கவனிக்க, "உபுண்டு". குபுண்டுவோ மற்றையவையோ அல்ல.

ஆனால் அதில் தமிழை பயன்படுத்த பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.

1. போதிய எழுத்துருக்கள் நிறுவுதல்.

2,. தமிழ் எழுத்துக்களை உலாவியில் சரிவரத் தெரியப்பண்ணுதல்.

3. தமிழ் உள்ளீடு. (தமிழ் 99, அஞ்சல் ...)

எழுத்துருக்கள் பரவாயில்லை. உள்ளீடு மற்றும் firefox பிரச்சனைகளை தீர்க்க சற்றே தேர்ந்த பயனருக்குரிய அனுபவம் தேவைப்படும்.
சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்படியாக பல.

இதற்கெல்லாம் வேண்டிய நேரத்தில் இணையம் கையில் இருக்க வேண்டும்.


க்னூ/லினக்ஸ் இனை தமிழ் பயனர் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் சில முக்கிய தடைகள் தாண்டப்பட வேண்டும் என்பதனை உணர்ந்தேன்.

1. இணைய வசதி இல்லாத பயனர்களும் தேவையான மென்பொருட்களைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

2. சிக்கல்கள் இல்லாமல் தமிழ் வசதிகளை நிறுவக்கூடியதாக இருக்க வேண்டும்.


இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதே தபுண்டு எனும் எண்ணக்கரு.

சராசரித் தமிழ்ப்பயனருக்குத் தேவைப்படக்கூடிய பொதிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதன்மூலமும், அதனை மிக அழகாக, எளிமையாக வரைகலை இடைமுகப்புடன் (Graphical Interface) நிறுவித்தருவதன்மூலமும் இவ்விரு தடைகளையும் தாண்ட தபுண்டு இலகுவாக உதவிவிடுகிறது.

தபுண்டுவின் இந்தப்பதிப்பில் வரைகலை இடைமுகப்பைச் சேர்த்திருக்கிறேன்.


இப்போது கணினியில் தமிழைப்பயன்படுத்த வின்டோசைப்பயன்படுத்துவதை விடவும் உபுண்டுவினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாக மாறிப்போனது.


நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

உபுண்டுவின் அண்மைய பதிப்பொன்றினை நிறுவிக்கொள்ளுங்கள்.

தபுண்டுவை அதில் நிறுவிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். தமிழ் பயன்பாட்டுக்கு உங்கள் கணினி தயார்!!!


நீங்கள் உபுண்டுவின் 7.04 பதிப்பினை பயன்படுத்துகிறீர்களா?
தமிழை பயன்படுத்த, தட்டெழுத அங்கே சிரமப்படுகிறீர்களா?


அப்படியானால்,

தபுண்டுவின் வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள்.

http://tabuntu.googlepages.com/home

கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய தபுண்டுவினை நிறுவிக்கொள்ளுங்கள்.



இனி என்ன? உபுண்டு க்னூ/லினக்சில் தங்குதடையின்றி தமிழைப் பயன்படுத்துங்கள்!




குறிப்பு: தபுண்டு "உபுண்டு 7.04 " இற்கானது. குபுண்டு உள்ளிட்ட ஏனைய வழங்கல்களில் சோதிக்கப்படவில்லை.