தற்போது ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு பணி நிமித்தமாக மிகப்பழைய கணினிகளை கையாளும் பேறு கிடைத்திருக்கிறது.
வின்டோஸ் அடிமை உலகினால் தூக்கியெறியப்பட்ட "காலங்கடந்த" கணினிகளில் க்னூ/லினக்சை நிறுவி அவற்றுக்கு மறுவாழ்வு கொடுக்கும் செயன்முறை ஆய்வு.
இதில் நான் பெற்றுக்கொண்ட அறிவினை அடுத்ததடுத்து வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.
Floppy என்று ஒரு பொருள் முன்னர் பாவனையிலிருந்திருக்கிறது. (!)
அதனை நெகிழ்வட்டு என்று தமிழில் அழைத்தார்கள். அதில் தரவுகளை சேமிக்க, சேமித்து கொண்டுசெல்ல, கணினிக்கு வழங்க முடியும். இறுவட்டுக்களின் வருகைக்கு சற்றே முற்பட்ட காலப்பகுதிகளில் இது பாவனையிலிருந்திருக்கிறது.
தனது இறுதிக்காலப்பகுதியில் இந்த நெகிழ்வட்டு பழைய கணினிகளை தொடக்குவதற்கு பயன்பட்டிருக்கிறது. தொடக்கிவைக்கும் வட்டுக்களாக. அதாவது bootable disk.
பென்டியம் 1 இற்கு முன்னர் வந்த பழைய கணினிகளில் இணைய உலாவல் செய்ய, படம் பார்க்க, பாட்டுக்கேட்க இன்னும் சில சில அடிப்படை பணிகளை செய்ய க்னூ/லினக்ஸ் மிகுந்த உதவிகளை செய்கிறது.
Basic Linux என்று ஒரு வழங்கல். இதனை பயன்படுத்தி அரதப்பழைய கணினிகளில் கூட புதிய மென்பொருட்களை (opera browser உள்ளிட) நிறுவி வேகமாக பணியாற்ற முடியும். இதனை கணினி ஒன்றில் நிறுவியோ, நிறுவாமலோ பயன்ப்டுத்த bootable floppy disks தேவை.
இந்த அருமையான வழங்கல் பற்றி பிறகு உரையாடுவோம்
என்னுடைய கணினியிலோ நெகிழ்வட்டு இயக்கியே இல்லை. வீட்டில் இந்த வழங்கலை பரீட்சித்துப்பார்க்க qemu வைதான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
நெகிழ்வட்டுக்கள் அவ்வளவு நம்பகமானவை அல்ல. நாளைக்கு நான் இந்த வழங்கலை நிறுவ வேண்டிய கணினியில் இறுவட்டு இயக்கி இருக்கிறது. நெகிழ்வட்டுக்கள் விலை அதிகம்.
என்ன செய்யலாம்?
இந்த "தொடக்கும் நெகிழ்வட்டுக்களை" "தொடக்கும் இறுவட்டுக்களாக" மாற்றிக்கொள்வதுதான் பிரச்சனைக்கு தீர்வு.
எப்படி இதனை செய்வது என்று தேடிக்கொண்டிருந்தபோது mkisofs என்ற சிறு உரைவழி மென்பொருள் கிடைத்தது.
அநேகமாக தற்போதைய க்னூ/லினக்ஸ் வழங்கல்கள் எல்லாம் இம்மென்பொருளை கொண்டிருக்கும் என்றே நம்புகிறேன். இது cdrecord மென்பொருளோடு வரும் cdrecord இல்லாத வழங்கல்களே தற்போது இல்லை. இல்லாவிட்டால் நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
பின்வரும் படிமுறைகள் மூலம் நீங்கள் தொடக்கத்தக்க இறுவட்டினை உருவாக்கலாம்.
1. முதலில் உங்கள் பணிகளுக்கென ஒரு அடைவினை உருவாக்கிக்கொள்ளுங்கள். [ mkdir convert ]
2. முனையதில் அந்த அடைவிற்குள் நுழையுங்கள் [ cd convert/]
3. இப்போது நீங்கள் மாற்றவேண்டிய bootable floppy image இனை convert என்ற அடைவினுள் போட்டுவிடுங்கள். (இக்கோப்பு .IMG என்ற பின்னொட்டுடன் இருக்கும்)
4. பின்வரும் ஆணையை இயக்குங்கள்.
mkisofs -pad -b DISK.IMG -R -o cd.iso DISK.IMG
வெளியீடாக நீங்கள் cd.iso என்ற bootable cd image இனை பெற்றுக்கொள்வீர்கள்.
அந்த இறுவட்டு பிம்பத்தினை இறுவட்டாக எழுதிக்கொள்வதன்மூலம் நீங்கள் இப்போது உங்கள் பணிக்கு தேவையான bootable disk இனை பெற்றுக்கொண்டுவிட்டீர்கள்.
iso பிம்பம் ஒன்றினை இறுவட்டாக எழுதிக்கொள்வது எப்படி என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.
Wednesday, October 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//Floppy என்று ஒரு பொருள் முன்னர் பாவனையிலிருந்திருக்கிறது//
அப்படியானால் இப்போது அது பாவனையில் இல்லையா?
bootable முறைகள் மாறினாலும் இன்னமும் எங்களுர் கணினிகளில் floppy drive கண்டிப்பாக இருக்கிறது.
பழையவர்கள் பலர் பலர் இப்போதும் தங்கள் கோப்புகளை பிளாப்பிகளில் சேமிப்பதை காண முடிகிறது. அதற்கு அவர்கள் கூறும் காரணம் அதில் சேமிக்க இன்னொரு மென்பொருளைத் திறக்க தேவையில்லை. :-)
ஒரு வேளை அது வழக்கொழிந்து வருவதை இப்படி சிம்பாலிக்காக குறிப்பிடு கிறீர்களா?
தேவையான பொருட்கள்:
1. ஒரு bootable ப்ஃளாப்பி
2. ஒரு CD
3. கோந்து
செய்முறை:
1. ப்ஃளாப்பின் ப்ளாஸ்டிக் உறையைப் பிரித்து, உள்ளிருக்கும் ப்ளாஸ்டிக் தாளைத் தனியே எடுத்து வைக்கவும்.
உறையுடன் ஒட்டி இருந்தால் பிய்த்து எடுக்கவும்.
2. ப்ளாஸ்டிக் தாளைத் எடுத்து அதன் ஒரு பக்கமாக கோந்தை தடவவும்.
3. CDயை எடுத்து அதன் பிரதிபலிக்கும் பக்கத்தை கோந்து தடவிய ப்ளாஸ்டிக் தாளுடன் வைத்து ஒட்டவும்.
4. பின் CDயை ஐந்து நிமிடங்களுக்கு காயவிடவும்.
Booting CD தயார்.
//ஒரு வேளை அது வழக்கொழிந்து வருவதை இப்படி சிம்பாலிக்காக குறிப்பிடு கிறீர்களா?//
ஆமாம். நகைச்சுவைக்காகத்தான் அப்படி எழுதினேன்.
இன்றும் நெகிழ்வட்டு பரவலாக இலங்கையில் பாவனையிலிருக்கிறது.
நெகிழ்வட்டு ஒப்பீட்டளவில் விலை உயர்ந்ததாக இருந்தபோதும், எல்லோராலும் flash memmory வாங்குவதற்கு இயலுமாக இருக்காதல்லவா?
மயூரன்,
பயனுள்ள பதிவுகளில் ஒன்று.
மாதிரிக்கு, நீங்கள் மாற்றிய வட்டுக்களின் பிம்பக்கோப்புகளை எங்கேணும் வலைப்பதிந்து வைக்க முடியுமா?
சுவையான குறிப்பு. அது சரி, விண்டோஸ் அடிமை உலகமா? சிரிப்புதான் வருகிறது. உங்கள் லினக்சுகாரர்கள் சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு எளிதாக உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா?
/மாதிரிக்கு, நீங்கள் மாற்றிய வட்டுக்களின் பிம்பக்கோப்புகளை எங்கேணும் வலைப்பதிந்து வைக்க முடியுமா?//
மன்னிக்கவும் என்னிடம் ஏற்றிவைக்க இடமில்லை.
//லினக்சுகாரர்கள் சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு எளிதாக உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா?//
சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கு எப்போதுமே கணினி எளிதாக இருந்ததில்லை.
கணினிப்பயனாளர்களுக்கு பல எளிமையான வசதிகளை வின்டோஸ் வழங்கியிருக்கிறது. எப்போதைக்கும் அதனை மறுக்க முடியாது.
ஆனால் எப்போதும் வின்டோஸ் பயன்பாட்டு எளிமை கொண்டதல்ல.
வின்டோசை நிறுவிக்கொள்ள சாதாரண மக்களால் முடியுமா? ஆனால் லினக்சை ஆறு கிளிக்குகளில் நிறுவிக்கொள்ளலாம். (உதாரணம் உபுண்டு)
நிறுவியவுடன் உங்களுக்கு தேவையான பணிகள் அனைத்தையும் வின்டோசில் செய்துகொள்ள முடியாது. தனித்தனியாக மென்பொருட்கள் தேவை, அத்தோடு வன்பொருட்களுக்கான இயக்கிகள் தேவை.
லினக்ஸ் அப்படி அல்ல.
சூசி , உபுண்டு, ஃபெடோரா, மான்ட்ரிவா மெபிஸ் எதை எடுதாலும் நிங்கள் நிறுவிக்கொண்ட உடனேயே, ஏன் நிறுவாமலும் கூட சாதாரண மக்களுக்கு தேவைப்படும் பணிகள் அத்தனையையும் இலகு்வாக செய்துவிடலாம்.
மற்றது சாதாரண மக்களுக்கான விலையிலா வின்டோசை விற்கிறார்கள்? (வெறும் வின்டோஸ் ஆபீஸ்கூட இல்லை)
என்றைக்காவது வின்டோச்காரர்கள் சாதாரண மக்கள் வாங்கி பயன்படுத்தவென தமது உற்பத்திக்கு விலைகுறித்திருக்கிறார்களா?
சாதாரண மக்கள் பற்றி சொன்னதால் இந்த பதில்.
சற்றே தேடலுடைய கணினிப்பயனருக்கு வின்டோஸ் எப்போதும் நெகிழ்வான இயங்குதளம் இல்லை. லினக்ஸ் மிகவும் எளிமையானது. எமக்கு வேண்டிய எதையும் செய்துகொள்ளு வாய்ப்பினை அது வழங்குகிறது.
எந்த இயங்குதளமும் கற்றுக்கொண்டுதான் பயன்படுத்த வேண்டும். லினக்சை கற்றுக்கொள்வது கடினம். விண்டோசின் பயனர் இடைமுகத்தில் எதையும் சுலபமாக கண்டுபிடிக்க இயலும். என்னுடைய சுசி 10இல் புதிய இணைய இணைப்பை உருவாக்கப் பல மணிநேரம் தேடிய பிறகே ஊகித்து ஒருவாறாக மோடமை கன்பிகர் செய்து இணைப்பை நிறுவினேன். விண்டோசில் மை கம்ப்யூட்டர்ஸில் இதை ஒரே கிளிக்கில் செய்துவிட்டேன். இது ஒரு உதாரணம் மட்டுமே. அடிமை என்ற சொல்லை ஆட்சேபிக்கத்தான் அப்பின்னூட்டத்தினை இட்டேன். மற்றபடி நான் சொல்ல வேண்டியவற்றை அனானியாக முன்பே உங்கள் முதல் வலைப்பதிவில் பல காலம் முன்பு சொல்லிவிட்டேன்.
சாதாரண மக்கள் விண்டோசையும் எம்எஸ் ஆபிசை காசு கொடுத்து வாங்குகிறார்களா?
//அடிமை என்ற சொல்லை ஆட்சேபிக்கத்தான் அப்பின்னூட்டத்தினை இட்டேன்.//
இந்த வார்த்தையை முழு பிரக்ஞையுடனேயே பயன்படுத்தினேன்.
இது தொழிநுட்பரீதியான பதிவுகளுக்கான வலைப்பதிவு என்பதால் என்னுடைய பதிலில் அதனை விளக்க முயலவில்லை.
இது தொடர்பான என்னுடைய அரசியல் நிலைப்பாடுபற்றி என்னுடைய "ம்..." பதிவில் விவாதிக்கிறேன்.
பார்க்க
Post a Comment