Sunday, August 27, 2006

jEdit தந்த தொல்லை.

விக்கிபீடியா கட்டுரைகளை இலகுவாக தொகுப்பதற்கு ஏதாவது நல்ல மென்பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தபோது அகப்பட்டதுதான் jEdit.

வழமைபோல இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ள டெபியன் பொதி ஒன்றினை தேடிப்பெற்றேன். (மூலத்திலிருந்து இருமவாக்கம் (compile) செய்துகொண்டிருப்பதற்கு சோம்பலில் டெபியன் பொதியின் தயவை நாடினேன்)

மேற்கண்ட பொதியினை நிறுவிக்கொண்டிருக்கும்போது, dpkg வழுச்செய்தியை தந்தது. பொதியை நிறுவ முடியாதாம்.

பிரச்சனை இப்படித்தான் ஆரம்பமாகியது.

வழமையாக இப்படி ஏதாவது பொதி நிறுவிக்கொள்ளும்போது வழுவுற்றால் இலகுவாக synaptic சென்று உடைந்த பொதியாகவிருக்கும் அதனை அகற்றிவிட்டால் போதுமானது. ஆனால் இந்தமுறை அது சரிவரவில்லை.
synaptic மறுபடி மறுபடி உடைந்த பொதி ஒன்று மீள் நிறுவலுக்காக காத்திருக்கிறது என்ற வழுச்செய்தியை தந்துகொண்டிருந்ததே அல்லாமல், அகற்றுவதற்கான வழி எதனையும் விட்டுவைக்கவில்லை. பொதியை அகற்றுவதற்கு தேவையான தகவல் பொதியில் இல்லை. அதுதான் பிரச்சனை.

jEdit பயன் படுத்தும் ஆசை விட்டுப்போய்விட்டது. ஆகக்குறைந்தது என்னுடைய apt அல்லது synaptic ஆவது ஒழுங்காய் வேலைசெய்தால் போதும் என்றாகிவிட்டது

எப்பாடுபட்டும் உடைந்துபோன jedit பொதியினை நீக்க முடியவில்லை.

இறுதி ஆயுதமாக ஒவ்வொரு கோப்பாக தேடிச்சென்று அகற்றும் நிலைக்கு போனாலும் கூட apt இனை சரிப்படுத்த முடியாதே?

synaptic பொதிகளை பட்டியலிட்டு கூட காட்டவில்லை. ஏறத்தாழ apt செத்துவிட்டது என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிற்று.

apt இயங்கமறுத்தால் என்னுடைய கணினிப்பயன்பாட்டின் அர்த்தமே இல்லாதுபோய்விடும். ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள பொதிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டிவரும்.

ஆசை ஆசையாய் எல்லாவகையான வசதிகளையும் ஒவ்வொன்றாய் பொருத்தி கட்டமைத்து வைத்திருக்கும் என்னுடைய dapper drake இயங்குதளத்தை மீள நிறுவ வேண்டி வந்துவிடுமோ என்கிற பயம் வேறு தொற்றிக்கொண்டது.

கடைசியாக google இன் உதவியை நாடினேன்.

பலன் கிடைத்தது.

இதே பிரச்சனை, இதே பொதியை நிறுவ முற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் தனது வலைப்பதிவில் இதற்கான தீர்வினை வெளியிட்டிருக்கிறார்.

அடிப்படை இதுதான்.

apt, பொதிகளின் நிறுவல் விபரத்தை சேமித்துவைத்திருக்கும் ஒரு கோப்பில் jEdit உடைந்துபோய்விட்டது என்ற தகவலை வைத்திருக்கிறது. இந்த தகவலையே வழுச்செய்தியாக காட்டிக்கொண்டு இயங்க மறுக்கிறது. அந்த தகவலை கைமுறையாக மாற்றிவிட்டால் வழுச்செய்தி வராதுதானே?

அந்த கோப்பு எங்கே இருக்கிறது?

இதுதான் அந்த கோப்பு

/var/lib/dpkg/status

இந்த கோப்பை உரைச்செயலி ஒன்றில் திறந்துவைத்துகொண்டு jedit என்பதை தேடினேன்.
jedit இற்கன தகவலில் status வரியில் reinstall needed என்பதாக இருந்த தகவை மாற்றி Status: install ok installed
என்று அமைத்துக்கொண்டேன்.

ஆசைக்கு ஒருமுறை sudo apt-get update இனை ஓடவிட்டுவிட்ட பின் எல்லாம் சரி.
பிரச்சனை தீர்ந்தது.

உடைந்த jEdit என் கணினியில் குற்றுயிராயும் ஆவியாயும் உலாவுவதாக தகவல்கள் உண்டு.
கணக்கெடுப்பதில்லை.

ஆக, இனி இப்போதைக்கு jEdit பயன்படுத்துவதாய் இல்லை.

2 comments:

said...

ஒரு வாரம் மல்லுக்கட்டி இப்ப தான் நானே எப்படி விண்டோஸ் உருவாக்கிய parttionகளை லினக்சில் பார்ப்பது என்ற அளவுக்கு வந்துள்ளேன். terminalஐ இயக்குவதில் தொடக்க நிலையில் தான் உள்ளேன். ஆனால், ஆணைகளின் அதிசய சாத்தியங்களை நீங்கள் விளக்க விளக்க மேலும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மேலிடுகிறது. தொடர்ந்து இது போன்ற குறிப்புகளை எழுதுங்கள். இந்தப் பதிவுக்கு ரொம்ப பொருத்தமாய் இல்லாவிட்டாலும், தமிழ்மணத்தில் இப்பதிவு தென்படட்டும் என்ற நோக்கில் பின்னூட்டமிடுகிறேன்..பதிப்பிப்பீர்கள் தானே :)

said...

தேவையான தகவல் மயூரன்.
கொஞ்ச நாட்களுக்கு "ஜே" பக்கம் போகாம இருக்கோம்.
என்ன? உங்க பின்னூட்டத்தில், தமிழ் பெயர்கள் பூச்சியாக தெரிகிறதே!!