முன்னைப்போல இல்லை இப்பொழுது. ஆளுக்காள் வலைபப்திவுத் திரட்டிகளை ஆரம்பித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு கூகிள், யாகூ போன்ற நிறுவனங்களும் தனித்தனித் திரட்டிகளை வழங்க ஆரம்பித்துவிட்டன.
செய்தித்தளங்களும் எண்ணிக்கையால் அதிகரித்துவிட்டன.
ஒவ்வொரு நாளும் எல்லாத்தளங்களிலும், எல்லாத்திரட்டிகளிலும் என்னென்ன புதிதாக வந்திருக்கிறது என்று தனித்தனியாகப் போய்ப்பார்ப்பதில் எமது இணைய நேரம் கணிசமாக வீணடிகப்படுகிறது.
இதற்கெலாம் என்ன தீர்வு?
நாம் பார்வையிடும் எல்லாத் தளங்களினதும் செய்தியோடைகளை வீட்டில் திரட்டுவதுதான்.
எமக்கென்று ஒரு வலைத்திரட்டியை வைத்துக்கொள்வதுதான்.
இதற்காக ஏராளம் வலைத்திரட்டி மென்பொருட்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்குக் கிடைக்கின்றன.
இவற்றில் எது சிறந்தது? எதனைப் பயன்படுத்தலாம்?
இந்தக்கேள்வியோடே இத்தனைநாள் போராடிக்கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் Liferea என்ற திரட்டியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் வேறு உறுமீன்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் வேறு வேறு திரட்டிகளையும் மேய்ந்துகொண்டிருந்தேன்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறைபாடு.
நான் பயன்படுத்திக்கழித்த சில வலைத்திரட்டிகள் வருமாறு,
Straw
Liferea விற்கு பிறகு பயன்படுத்தத்தொடங்கியது இதுதான். எளிமையான இதன் இடைமுகம் கவர்ந்தது. ஆனால் அந்த எளிமையே பின்பு இடைஞ்சலாகவும் போய்விட்டது.
எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. தலைப்புக்களைப் படித்துவிட்டு மிகுதியை வலை உலாவி மூலமே திறந்து படிக்க வேண்டிய நிலை. இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
Akregetor
இது நல்லது. அனைத்து வசதிகளையும் கொண்டது. பயன்பாட்டு எளிமையும் மிக்கது. எல்லாவற்றையும் விட இது ஒரு K மென்பொருள் என்பதுதான் என்னுடைய பிரச்சினை ;-)
நான் க்னோம் பயன்படுதுவதால் கே மென்பொருட்கள் பயன்படுத்துவதில் நிறைய நன்மையற்ற விளைவுகள் இருக்கின்றன. கே டீ ஈ உதவிச்சேவைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியிருப்பதால் நினைவகம் அடைத்துக்கொள்கிறது. கே டீ ஈ பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திரட்டி பரவாயில்லை.
Thunderbird
இது மொசில்லாக் குழுமத்தின் தயாரிப்பு. ஏராளம் வசதிகளும், எண்ணற்ற நீட்டிப்புக்களும் கொண்டது. செய்தியோடையின் சுருக்கத்தையும் விரிவாகப் பின் வலைத்தளத்தையும் இதனுள்ளே பார்வையிடக்கூடிய வசதி கவர்ந்தது.
அத்தோடு மின்னஞ்சல் பெறும் செயலியாகவும் இதுவே அமைவதால், உலாவிக்குப் போகாமலேயே எம்முடைய இணையப்பயன்பாட்டின் பெரும்பகுதியை இதனுள் செய்து முடித்துவிட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
ஆனால் இந்த பிரமாண்டமே இதை வெறுக்கப் போதுமான காரணமாகிவிட்டது. தொடங்குவதற்கான நேரம் சற்றே அதிகம். சில இடங்களில் தமிழ் ஒருங்குறியைச் சரியாக கையாள்கிறதில்லை. நான் மின்னஞ்சலை உலாவியிலேயே பயன்படுத்த விரும்புவதால் தேவையற்ற வசதிகள் சுமையாகப்போய்விட்டது.
Wizz rss
சரி உலாவியிலேயே திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் Firefox இற்கான வலைத்திரட்டி நீட்சிகளைத் தேட ஆரம்பித்தேன்.
கிடைத்தவற்றுள் சிறப்பாக இருந்தது இதுவே.
நிறைய வசதிகளைக் கொண்டிருந்தது.
குறை என்று சொல்லப் பொதுவாக எதுவுமில்லை.
ஆனால் என்னுடைய உலாவியில் தேவையற்ற பட்டைகளைப் போட்டுவிடுவது உறுத்தலாக இருந்தமையாலும், "உலாவி அற்ற வலைத்திரட்டி" ஒன்று நல்லது என்று பட்டதாலும் இதனை விட்டு வரவேண்டியதானது.
Liferea.
வலைத்திரட்டிக்கான எனது தேடல் கடைசில் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது. :-)
ஊர் மேய்ந்து பார்த்ததில் முன்னர் பயன்படுத்திய இந்தத்திரட்டியே சிறப்பானது என்று முடிவெடுக்க வேண்டியதாயிற்று.
- எளிமை. அதே நேரம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு.
- திரட்டியினுள்ளேயே வலைப்பக்கத்தையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு.
- மிகக்குறைந்த தொடங்கும் நேரம்.
- எளிமையான வகைப்படுத்தல் வசதி
- GTK பின்பலம்
- சிறப்பான ஒருங்குறிக் கையாள்கை
போன்றவை கவர்கின்றன.
ஏனோ தெரியவில்லை விக்கிபீடியாவின் செய்தியோடையைத் திரட்டுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றது இச்செயலி. இது யாருடைய தவறு என்று தெரியவில்லை. இப்போதைக்கு தமிழ் விக்கியின் அண்மைய மாற்றங்களை வலைத்தளம் வழியாகவே பார்க்கவேண்டியதாகிறது.
ஆகவே இத்தால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது யாதெனில்,
உங்கள் வீட்டில் வலைத்திரட்டி ஒன்றை வைத்திருக்க நான் பரிந்துரைக்கும் மென்பொருள் Liferea.
எல்லா திரட்டிகளுமே எமது செய்தியோடைச் சேகரிப்பை opml கோப்பாக சேமித்துத்தரக்கூடிய வசதியைக்கொண்டிருக்கின்றன. அதனால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறுவது அவ்வளவு குழப்பகரமானதல்ல.
இவைதவிர வேறு சிறப்பான வலைத்திரட்டிகளுடனான பரிச்சயம் உங்களுக்கு இருக்குமெனில் பின்னூட்டம் வழியாக அறியத்தாருங்கள்.
4 comments:
google reader நல்லா தானே இருக்கு? அதுல கடைசி 2000 இடுகைகளை offlineல் படிக்கும் வசதியும் வந்திருக்கே..விக்கி அண்மைய மாற்றங்களும் நல்லா தெரியுது
Bloglines?
Google Reader?
liferea இப்ப தான் நிறுவிப் பார்த்தேன். நீங்க சொன்ன மாதிரி வேகம், எளிமை, இணைய இணைப்பில் இல்லாம பார்க்க முடிவது, தேடல், ஒருங்குறி ஆதரவு, அடைவுக்குள் இழுத்து விடும் வசதி, கீற்றில் வலைப்பக்கத்தைத் திறப்பது, மறுமொழிப் பக்கத்துக்கான இணைப்புன்னு அருமையா இருக்கு. சொந்தக் கணினிக்கு இது உதவும். அலுவலகம், வீடு, போகிற இடங்கள் என்று எல்லா இடத்திலும் ஓடைகளைப் பார்வையிட உலாவியோடு இணைந்த வலைத்திரட்டி தான் பொருந்தும்னு நினைக்கிறேன்.
கூகிள் ரீடர் சிறப்பாகத்தான் இருக்கிறது ரவி. ஆனால் வலைச்செயலிகளின் முழுமையான வெற்றி சாத்தியமாகக்கூடிய நிபந்தனைகள் எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்யப்படவில்லையே.
என்னுடைய இணைப்பு வேகத்துக்கு கூகிள் ரீடரை பயன்படுத்துவது மிகவும் எரிச்சல் தரக்கூடியது.
நீங்கள் சொன்னது போல கூகிள் ரீடர் போன்றவற்றின் பயன்பாடுகளையும் பறுப்பதற்கில்லை.
Post a Comment