Friday, June 22, 2007

கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!

(GNU/Linux குறிப்பேடு)


அண்மையில் இலங்கையில் வெளிவந்து மிகவும் பிரபலமாகியிருக்கும் நல்லதொரு கணினிச் சஞ்சிகைதான் தமிழ் PC Times.

திறந்த மூலத்துக்கு ஆதரவான பாதையை தேர்ந்தெடுத்திருப்பதுடன், ஆரோக்கியமான, ஆழமான பல கட்டுரைகளையும் இச்சஞ்சிகை கொண்டிருக்கிறது.

கூடவே தனது கட்டுரைகளும் உள்ளடங்கும் வலைப்பதிவொன்றினை இலவசமாகவே நடத்தி வருகிறது.

இப்பொழுதெல்லாம் கணினிச்சஞ்சிகைகள் பற்றி கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது "தமிழ் கம்பியூட்டர்" இதழும், இந்தச் சஞ்சிகையும் தான்.


இச்சஞ்சிகையின் முதல் இதழ் வெளியான காலந்தொட்டே எனக்கு உறுத்தலாயிருக்கும் விடயம் இதன் பெயர்.

அது என்னய்யா தமிழ் பீசீ டைம்ஸ்?

இந்த ஆதங்கத்தை இவ்விதழின் ஆசிரியர் திரு. ருஷாங்கன் அவர்களிடம் நேரடியாகவும் வெளிப்படுத்தியிருந்தேன்.


நீண்டலாகமாக தமிழ்ச் சூழலில் இந்தப் பாரம்பரியம் இருக்கிறது.

கணினிச் சஞ்சிகை என்றால் அதற்கு ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் எல்லாச் சஞ்சிகைக்காரர்களிடத்திலும் இருக்கிறது.

தமிழ் கம்பியூட்டர்
கம்பியூட்டர் டுடே
பீ சீ ஃபோக்கஸ்

என்று நீள்கிறது இந்தப்பட்டியல்.


"கணினி என்றால் ஆங்கிலம்" என்ற ஆழ்மனத் தாக்கத்தின் விளைவே இது என்று கருதுகிறேன்.

தீவிர எழுத்துச்சூழலில் பரிச்சயமுள்ள ருஷாங்கன் போன்றவர்கள் இடம்பெறும் சஞ்சிகைகூட இதிலிருந்து தப்பவில்லை.



இத்தகைய பெயர்கள் சஞ்சிகை வாங்கிப்படிப்பதையே தடுக்கும் மனவுறுத்தலாக பலமுறை எனக்கு இருந்திருக்கிறது.

இந்த சஞ்சிகைக்கு ஆரம்பம் தொட்டே எதுவும் எழுதாமலிருப்பதற்கு ஒரே காரணமும் இந்தப்பெயர்தான்.



தமது சஞ்சிகையின் பெயரை நல்ல தமிழ்ப்பெயராக மாற்றியமைப்பதன்மூலம் பரம்பரை பரம்பரையாகத்தொடர்ந்துவரும் இந்த அடிமை மனோபாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் PC Times இதழ்க்காரர்கள் முன்வருவார்களா?

பெயரை மாற்றுவது அவர்களது சந்தைப்படுத்தலுக்கு பாரிய தாக்கமெதனையும் ஏற்படுத்தாது என்பதை என்னால் உறுதிபடக் கூற முடியும்.
இப்போது இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரேயொரு தரமான கணினிச் சஞ்சிகை இதுதான்.

இரண்டு இதழ்களில் உட்பக்கம் மாற்றப்பட்ட பெயரைப்போட்டு, மூன்றாவது இதழிலிருந்து ஒரேயடியாகப் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.

இது தமிழ் சூழலுக்கு செய்யும் கைம்மாறு.

இம்மாற்றத்தினை செய்ய முன்வருமாறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினரை தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

எனது இக்கருத்துக்கு ஆதரவானவர்கள் இந்த சஞ்சிகைக்காரர்களுக்கு பெயர் மாற்றத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்கவும்.

14 comments:

வடுவூர் குமார் said...

நானும் பல விஷயங்களை தமிழ் கம்யூடர் மூலம் தான் தெரிந்துகொண்டேன்.3 வருடங்களுக்கு முன்பு இங்கு நூலகத்தில் வரவழைத்துக்கொண்டிருந்தார்கள் ஆனால் இப்போது அவ்வளவாக பார்க்கமுடியவில்லை.

Anonymous said...

இதற்கெல்லாம் கருணாநிதியின் விளையாட்டுத்தான் சரி.
தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்று ஏதாவது அரசுஅறிவிக்கலாம்.
ஆனால் "சிவாஜி - The Boss" க்கு எதையோ பெற்றுக்கொண்டு வரிவிலக்கு அளிச்சதுபோல ஆங்கிலப்பெயர் சஞ்சிகைகளுக்கும் வரிவிலக்கு அளிக்காமல் பார்த்துக்கொள்ள வேணும்.

கொண்டோடி said...

அட எங்கட தமிழ்மணத்தைப் பாருங்கோவன்,
ஒருக்கா விழியத்திரட்டி எண்டு காட்டுப்படுது, அடுத்தநாள் வீடியோத்திரட்டி எண்டு காட்டப்படுது, பிறகு அடுத்தநாள் மீளவும் விழியத்திரட்டி எண்டு வருது. சிலவேளை விளங்காத ஆக்களுக்காகத்தான் இடைக்கிடை மாத்திக்கொண்டிருக்கினமோ?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அந்த வலைப்பதிவை இன்னைக்குத் தான் பார்த்தேன்..நல்ல தமிழில் கட்டுரை எழுத முற்படுபவர்கள் பெயரையும் தமிழில் வைக்கலாம் தான். கோரிக்கை வைத்திருக்கிறேன். தமிழ்நாட்டு கணினி இதழ்களில் இந்த அளவு தமிழ்க் கட்டுரைகளைப் பார்த்தது இல்லை. நல்ல முயற்சி

கா. சேது said...

// "கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!"//

தலைப்பைப் பார்த்ததும் என்ன இது மயூரனா இப்படிச் சொல்கிறார் என்ற வியப்புடன் வாசிக்கத் தொடங்கிய பின் தெரிந்தது அவர் வழக்கம் போல நல்ல காரியம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் என. நல்ல பதிவு.

//Anonymous said...

இதற்கெல்லாம் கருணாநிதியின் விளையாட்டுத்தான் சரி.
தமிழில் பெயர்வைத்தால் வரிவிலக்கு என்று ஏதாவது அரசுஅறிவிக்கலாம்.
ஆனால் "சிவாஜி - The Boss" க்கு எதையோ பெற்றுக்கொண்டு வரிவிலக்கு அளிச்சதுபோல ஆங்கிலப்பெயர் சஞ்சிகைகளுக்கும் வரிவிலக்கு அளிக்காமல் பார்த்துக்கொள்ள வேணும்.//

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பது ஒரு தவறான அணுகுமுறை என்பதை நண்பர் ரவி மிகத் தெளிவாக வாதிட்டுள்ளார் http://blog.ravidreams.net/?p=228 இல். அக்கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுள்ளது.

கா. சேது

கா. சேது said...

இன்னுமிரண்டைக் கூற விரும்புகிறேன்.

தமிழ் கம்பியூட்டர், தமிழ் பிசி டைம்ஸ் இப்படி பெயர்களில் முதலில் தமிழ் என்று அவர்கள் சுட்டிக் காட்டவும் தேவையில்லை. ஏனென்றால் கணினி / கணினித்துறை பற்றிய பல கட்டுரைகளையும் தகவல்களையும் வெளியிடும் பொதுச் சஞ்சிகைகள் இவை. வருங்காலங்களில் வாகனங்களைப் பற்றிய சஞ்சிகை ஒன்று தமிழில் வெளிவருமேயாயின் "தமிழ் மோட்டர் கார்" என்று யாரும் பெயர் வைப்பார்களா?

தமிழ் பிசி டைம்ஸ் வெளியிடும் விஜய பத்திரிகையாளர்கள் நிறுவனம் சகோதர மொழி சஞ்சிகைக்கு "பரிகணக்க" என தூய சிங்களத்திலேயே பெயரிட்டுள்ளனர். தமிழ் சஞ்சிகைக்கு தமிழிலில் பெயரிட அவர்கள் தயக்கம் காட்ட மாட்டர்கள் என நம்புவோம்.

கா. சேது

Anonymous said...

மயூரன்,
கணிபொறியில் விண்டோஸ் பயன்படுத்தி பழகிய ஒரு நண்பருக்கு லினக்ஸ் நிறுவிபடி
புதிய கணிப்பொறி வந்துள்ளது.அதை அவர் பெரிதும் சிக்கல்கள் ஏதுமில்லாமல்
விண்டோஸின் பயன்பாட்டு அறிவுடனே இயக்க தேவையான தகவல்கள் வேண்டும்.
விண்டோஸையும், லினக்ஸையும் ஒரே வன்வட்டில் பதிய முடியுமா ?
அவற்றை ஆரம்பத்தில் டொஸ் நிலையில் தேர்ந்தெடுக்கக் கூடிய மாதிரி.. ?
முதலில் லினக்ஸில் எதேனும் புதிய வன்பொருளை கணினியுடன் இணைத்தால் அது தானாக
இனங்காணுமா, டிரைவர்கள் உள்ளே இருப்பின் அதை வைத்து அக் கருவியை நிறுவுமா?
மற்றும் என்னென்ன நிரல்களைப் பயன்படுத்தலாம்,
வைரஸ் எதிர்ப்பிற்கு, CD burn பண்ண, பாடல்கள் இசைப்பிக்க, DVD பார்க்க, மைக்ரோ சாஃப்ட்டு
ஆபிஸ் பொதி போல ஆனால் கட்டற்றதான மென்பொருள் ஏதும் உண்டா, தமிழ் இடைமுகத்தோடு
உள்ள நிரல்கள் எவை.புதிதாய் லினக்ஸ் நிறுவுபவருக்கான ஆலோசனைகளாய் இவற்றுக்கு பதில்
அளித்து உதவுங்களேன்.

மு. மயூரன் said...

//கணிபொறியில் விண்டோஸ் பயன்படுத்தி பழகிய ஒரு நண்பருக்கு லினக்ஸ் நிறுவிபடி
புதிய கணிப்பொறி வந்துள்ளது.//

மகிழ்ச்சி.
க்னூ/லினக்ஸ் என்று பயன்படுத்துவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். லினக்ஸ் என்று மொட்டையாய்ச் சொல்வது தவறு.
(GNU/Linux)

//அதை அவர் பெரிதும் சிக்கல்கள் ஏதுமில்லாமல்
விண்டோஸின் பயன்பாட்டு அறிவுடனே இயக்க தேவையான தகவல்கள் வேண்டும்.//

தாராளமாக!

//விண்டோஸையும், லினக்ஸையும் ஒரே வன்வட்டில் பதிய முடியுமா ?//

ஆம்.

//அவற்றை ஆரம்பத்தில் டொஸ் நிலையில் தேர்ந்தெடுக்கக் கூடிய மாதிரி.. ?//

ஆம்.

//முதலில் லினக்ஸில் எதேனும் புதிய வன்பொருளை கணினியுடன் இணைத்தால் அது தானாக
இனங்காணுமா,//

பெரும்பாலும் ஆம். சில வேளைகளில் இல்லை. பிரபலமான நிறுவனங்களின், அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்படும் வன்பொருட்கள் இயங்கும்.

webcam, scanner, tv card, wifi adepter போன்றவை சில வேளைகளில் சிக்கல் தரலாம். பொதுவாக இல்லை.

// டிரைவர்கள் உள்ளே இருப்பின் அதை வைத்து அக் கருவியை நிறுவுமா?//

அதே பதில்

//மற்றும் என்னென்ன நிரல்களைப் பயன்படுத்தலாம்,//

டெபியன் குவையில் மட்டும் 21,000 மென்பொருட்கள் இலவசமாய்க் கிடைக்கின்றன ;-)

//வைரஸ் எதிர்ப்பிற்கு,//

(பலமான சிரிப்பு) வைரசே இல்லை. காவல் எதற்கு?

// CD burn பண்ண, பாடல்கள் இசைப்பிக்க, DVD பார்க்க, //

பெரும்பாலும் இவை எல்லாம் தாமாகவே நிறுவப்படும். தனியாக நிறுவிக்கொள்ளத்தேவையில்லை.

//மைக்ரோ சாஃப்ட்டு
ஆபிஸ் பொதி போல ஆனால் கட்டற்றதான மென்பொருள் ஏதும் உண்டா,//

openoffice.org
தனியாக நிறுவத்தேவையில்லை. அநேகமாக இயல்பிருப்பிலேயே நிறுவித்தரப்படும்.

//தமிழ் இடைமுகத்தோடு
உள்ள நிரல்கள் எவை.//

GNOME, KDE பணிச்சூழல்கள்.

மேலும்,

புதிய பயனருக்கு பரிந்துரைக்கும் க்னூ/லினக்ஸ் வழங்கல்கள்,

1. உபுண்டு (இணைய இணைப்பு, வலுக்கூடிய கணினி அவசியம்)

2. XUBUNTU (இணைய இணைப்புடனான வலுக்குறைந்த கணினிகளுக்கு)

3. Fedora, open suse, mandriva : இணைய இணைப்பு அற்றவர்களுக்கு

4. elive, pclinuxos : முப்பரிமண அட்டை கொண்ட கணினிகளில், அழகான இடைமுகப்பை விரும்புபவர்களுக்கு.

5. puppy linux, DSL : பழைய கணினிகளுக்கு

Sridhar Sivaraman said...

Hi,

I have Dell Inspiron 6400 laptop when i try to install linux, it says there is some problem with video adapter.
hence i am unable to install, can anything be done about it.

Anonymous said...

But they not allowed user's articles.

Sri Rangan said...

அன்பு மய+ரன்,
நானறியத் தமிழில் மிக ஆரோக்கியமான தொழில் நுட்பக் கட்டுரையை கனடாவிலிருந்து வெளி வந்த நுட்பம் சஞ்சிகையே வெளியிட்டு வந்தது.தமிழுக்கு நிரந்தரமான குறைபாடான வாசகர் வட்டம் குறைந்த சூழலில், அச் சஞ்சிகை நின்றுவிட்டது.அவர்கள் தொழில் நுட்ப விஷயங்களை எளிமையாகச் சொன்னார்கள்.இன்றைய நிலையில் கணினிக்கான சஞ்சிகைகள் தமிழில் பெயர் வைப்பதற்கு நுட்பம் சஞ்சிகைக்காரரை உதாரணமாகக்கொள்ளலாம்.கணினி நுட்பம் எனப் பெயரிட்டால் என்ன இதழ் விற்காதுவிடுமா?தேவை இருக்கும்போது அது விற்றுத்தாம் தீரணம்.இன்றுவரை நுட்பம் சஞ்சிகையின் இடம் காலியாகவே இருக்கிறது.அதன் தாக்கம் என்னை மிகவும் சந்தோசத்தில் ஆழ்த்தியது.ஆனால் நின்றுவிட்டது.

உங்கள் வேண்டுகோளோடு நானும் உடன்படுகிறேன்.

ஜெயபாலன் said...

நன்றி மயூரன்ன், நண்பர் ருசாங்கன் கணனித் தமிழ் என்கிற பெயரில் இணைய ? சஞ்சிகை நத்தும் சேதி தற்செயலாக உங்கள் வலைப்பதிவில் இடறியபோது கண்டேன். அவருக்கு எனது நல் வாழ்த்துக்காளை தெரிவியுங்கள்.
வ.ஐ.ச.ஜெயப்பாலான் (visjayapalan@yahoo.com)

Anonymous said...

// தமிழ் கம்பியூட்டர், தமிழ் பிசி டைம்ஸ் இப்படி // பெயர்களில் முதலில் தமிழ் என்று அவர்கள் // சுட்டிக் காட்டவும் தேவையில்லை.

ஓமோம்! இயல்பு தமிழ் தானே! அதைச் தனியாகச் சுட்டத் தேவையில்லை...

Unknown said...

தமிழில் இருந்தால் உமக்கென்ன