Thursday, August 27, 2009

முதல் தமிழ் கணினிப் பணிச்சூழல் (First Tamil Computer Desktop Environment)

இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழில் கணினிக்குப் பணிச்சூழல் வெளிவந்தது தமிழ் மொழியில் தான் என்பது இதைப் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

(இங்கே உள்ள படங்களின் மேல் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கலாம்)


GNU/Linux இற்கான KDE பணிச்சூழலே இவ்வாறு முதன் முறையாகத் தமிழ் இடைமுகப்பைக் கொண்டு வெளி வந்தது.


October 22 ம் நாள் 2000ம் ஆண்டு வெளிவந்த KDE 2.0 பதிப்பு இவ்வாறு தமிழ் இடைமுகப்பினை முதன்முறையாக உள்ளடக்கியிருந்தது.


பரவலாக தமிழ்ச்சூழலில் GNU/Linux பயன்பாடு வந்துவிட்டது. சொற்பமாயினும் சிலபேர் தமிழாக்க முயற்சிகளில் பங்கெடுக்கிறார்கள். இலங்கையில் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி சர்வேஸ் போன்றவர்கள் பங்குபெறும் தமிழாக்க வேலைகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் தமிழ் உபுண்டு குழும அங்கத்தவர்கள் பலர் தமிழாக்கத்தில் ஈடுபடுகின்றனர். இதெல்லாம் எமது தலைமுறையினர்.

முன்னர் தமிழாக்கத்தில் ஈடுபட்டிருந்த தலைமுறையினரும் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகின்றனர்.




இந்த முதல் தமிழ் KDE வந்த காலம் அவ்வாறானதல்ல. தொழிநுட்ப ரீதியாக, ஆளணி வள ரீதியாக மிகப்பெரிய சவால்களுக்கு முகம் கொடுத்தே தமிழாக்க வேலைகளைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

இந்த வேலைகளைப் பொறுப்பெடுத்து சீராகச் செய்திருந்தவர்கள் Siva, Gomathi, Dinesh, Venkat, Vasee எனும் பெயர்களுடையவர்கள் என்று நான் தேடிய மூலங்களில் காணக்கிடைக்கினறன.


tamillinix yahoo group ஒரு பெரும் கடல் அங்கே மூழ்கினால் தமிழ் க்னூ லினக்ஸ் வரலாற்றின் முத்துக்களை நிறையப் பெற்றுக்கொள்ளலாம்.

இதில் வசீகரன் குழுவினர் பின்னர் இந்த தமிழ் இடைமுகப்புக்கொண்ட KDE இனை உள்ளடக்கி தமிழ் Knoppix நிகழ் வட்டினை உருவாக்கி வெளியிட்டிருந்தனர். அதுபற்றி பின்னரொருபோது விளக்கமாக எழுதுகிறேன்.


இந்த அருமையான தமிழ் இடைமுகப்பு வந்து பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் Microsoft எனும் பெரு வணிக நிறுவனத்தின் தமிழ் இடைமுகப்புப் பொதி வெளியிடப்பட்டது (அதுவும் சமூக உழைப்பைத் திருடி).

இலாப நோக்கற்ற சமூக அக்கறையும், மொழி மீதான நேசமும் கூட்டுழைப்பும் கணிமை உலகில் செய்திருக்கும் வியத்தகு சாதனைகளுக்கு தமிழ்ச்சூழலில் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.




இடைமுகப்பானது UTF-8 TSCII குறிமுறையில் அமைந்துள்ளது. இப்பொழுதுபோல் அக்காலத்தில் ஒருங்குறி ஆதரவு பரவலாக இருக்கவில்லை. கூடவே ஒருங்குறி தொடர்பான விவாதங்கள் பெருமளவில் ஓயாமலிருந்தது.



இங்கே KOffice இல் தமிழைக் காண்கிறோம் அக்காலத்தில் இருந்த சொற்ப அலுவலகச்செயலிகளுள் ஒன்று. இது இப்போது மிக சீர்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது. TSCII இலிருந்து ஒருங்குறிக்கு மாறியபோது தமிழர்கள் Koffice இனைக் கைவிட்டார்கள். நீண்டகாலத்துக்குப்பிறகே ஒருங்குறி ஆதரவு அதில் கிடைத்தது. இப்போது எல்லோரும் Openoffice பற்றி பேச ஆரம்பித்துவிட்டோம்.



மயிலை98 இனை அடிப்படையாகக்கொண்ட TSCII விசைப்பலகை உள்ளீட்டு முறை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது தவிர தமிழ் VP என்றெல்லாம் உள்ளீட்டு முறைகள் இருந்தன. இந்த உள்ளீட்டு முறைகளின் வரலாறு குறித்து பின்னர் விரிவாக ஆய்வு செய்து எழுத வேண்டும்.


இது முனையத்தில் தமிழைக் கொண்டுவர அக்காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சி. தமிழ் முனையம் ஒன்றை சாத்தியப்படுத்தலாம் என்ற நம்பிக்கைகளின் தொடக்கம். இப்போது ஒருங்குறி வந்தபின் இதைவிட மோசமான நிலையில் தான் தமிழ் முனையப் பயன்பாடு இருக்கிறது. ஒரேயகல எழுத்துக்கள் என்ற பிரச்சினை தாண்டப்படமுடியாத சிக்கல். இப்போது ஏறத்தாழ தமிழ் முனையம் தொடர்பான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டது. வரைகலைப் பயனர் இடைமுகம் எல்லாவற்றையும் செய்யத்தொடங்கிவிட்டது.


UTF8-TSCII codec இனை Hans Peter Bieker என்பவர் உருவாக்கியளித்துள்ளார்.










இங்கே நான் சொல்லத்தவறிய தகவல்களையும் தவறுகளையும் போதாமைகளையும் அறிந்தவர்கள் பினூட்டம் வழியாக திருத்தி நிரப்பி விடுங்கள்.

இப்பதிவுக்கு ஆதாரமாக அமைந்தவை:

  • தமிழ்ழிலின்ஸ் yahoo குழும மடற்களஞ்சியம் http://tech.groups.yahoo.com/group/tamilinix/
  • http://tamillinux.sourceforge.net/
  • எனது சொந்த அனுபவங்கள்

Thursday, April 16, 2009

கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை

கடந்த மார்ச் மாதம் 28ம் நாள் திருக்கோணமலை லியோ கழகத்தினதும் (Leo club of Trinco new city) MIC Computers நிறுவனத்தினதும் அனுசரணையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு நடைபெற்றது.


நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களை இங்கே பார்க்கவும்.


நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் கலந்துகொண்டதும் இறுதிவரை ஆர்வத்துடன் பங்கெடுத்ததும் மகிழ்ச்சி தருவதாய் அமைந்தது.

இவ்வெற்றியில் பெரும்பங்கெடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக ஜெகந்த் நன்றிக்குரியவர்.



கருத்தரங்கின் முன்பாதியில் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்பான சித்தாந்த ரீதியான அறிமுகங்களும் விளக்கங்களுமே இடம்பெற்றன.
கவனம் சிதறாமல் இவ்விஷயங்களைக்கேட்டுக்கொண்டிருந்து கேள்வி நேரத்தில் தத்துவம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்கத்தொடங்கினார்கள்.


திருக்கோணமலையில் இடம் பெறும் கட்டற்ற மென்பொருள் தொடர்பான முதல் கருத்தரங்கு இதுவேயாகும். கலந்துகொண்ட பலர் லினக்ஸ் என்ற சொல்லையே அன்றுதான் முதன் முறையாகக் கேள்விப்படுபவர்களாகவும் இருந்தனர்.


அப்படி இருந்தும் ஒவ்வொரு கேள்வி நேர இடைவெளிகளின் போதும் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டதுடன், க்னூ/லினக்சினைத் தங்கள் சொந்தப்பாவனைக்குப் பயன்படுத்துவது தொடர்பான மிகுதியான ஆர்வத்தையும் வெளியிட்டனர்.



இக்கருத்தரங்கில் வழங்கப்படுவதற்கென "உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப் பதிப்பு" என்ற பெயரில் தனியான வழங்கல் ஒன்று வடிவமைக்கப்பட்டது.

இவ்வழங்கல் தொடர்பான மேலதிக விபரங்கள் இந்த வலைப்பதிவில் காணலாம்.

கருத்தரங்கின் இரண்டாம் பாதி இவ்வழங்கலை அடிப்படையாகக்கொண்ட செயன்முறை விளக்கங்களாகவே அமைந்திருந்தது.

பொதுவான மாற்று மென்பொருட்கள், தமிழ்ப்பயன்பாடு, நிறுவல் போன்றவை இவ்வழங்கலை அடிப்படையாக்கொண்டு விளக்கப்பட்டது.



இறுதிப்பகுதியில் முப்பரிமாண இடைமுகப்புடன் கூடிய compiz fusion இனை அறிமுகப்படுத்தி நிகழ்த்திக்காட்டியபோது அரங்கு நிறைந்த கைதட்டல் ஓசையும் ஆரவாரமும் எழுந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. :-)

வரைகலை வேலைகளுடன் தொழின்முறையாக தொடர்புகள் கொண்டுள்ள ஆர்வலர் ஒருவரை நான் க்னூ/லினக்சுக்கு முற்றாக மாற வேண்டாம் இரட்டை இயங்குதளங்களைப் பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியபோது அவர் பெரும் ஏமாற்றமடைந்து சோர்ந்து போனது மறக்க முடியாத சம்பவம்.



தொழிநுட்ப ரீதியாக கவரப்பட்டதை விட, க்னூ/லினக்சினைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கருத்தியல் ரீதியாகப் பெறவேண்டுமென்ற நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் வெற்றியளித்திருந்தமை, மூடிய மென்பொருட்களுக்கு எதிரான உணர்வை பல வழிகளிலும் ககலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தியதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.


இக்கருத்தரங்கின் வெற்றி அடுத்தடுத்து இப்பரப்பில் தொடர்ச்சியான கருத்தரங்குகளைப், பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கான தளத்தையும் அமைத்துத்தந்துள்ளது.

திருக்கோணமலையை அடிப்படையாகக்கொண்டு க்னூ/லினக்ஸ் பயனர் குழுமம் ஒன்றினை தொடக்கி வைக்கக்கூடிய புறநிலைகளும் கனிந்து வந்துள்ளன.



கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கு லியோ கழகத்தினரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப்பதிப்பின் வட்டுக்களும், நான்குபக்கக் கையேடு ஒன்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.


குறிப்பு:

[படங்களில் உள்ளபடி இடைவேளையில் தாகம் தீர்க்க பெப்சி வழங்கப்பட்டது. நான்குமணி நேரம் தொடர்ச்சியாக உரத்துப்பேசியபடி இருந்தேன். தாகம். வேறு தெரிவு இருக்கவில்லை. பெப்சி,கோக் அவற்றின் துணை உற்பத்திகள் உடலுக்கும் உலகுக்கும் தீங்கான பானங்கள் அவற்றைக் குடிப்பதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்]

Sunday, April 05, 2009

GNU/Linux: "எழுதுபவர்களுக்கு" ஒரு மென்பொருள்

நண்பரோடு தொலைபேசிக்கொண்டே Gnomefiles வலைத்தளத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த ஆர்வமூட்டும் மென்பொருள் கண்ணில் பட்டது.

இது "எழுதுபவர்களுக்கானது".

எழுதுங்கள்; எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடு.

எழுதும் மனநிலையை சிதைக்கும் ஏராளம் விஷயங்கள் குறுக்கிட்டுக்கொண்டிருக்கும் கணித்திரை எழுத்துச் சூழலில் கணித்திரை எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவும் ஒரு மென்பொருள் இது.


Pyroom என்று பெயரிடப்பட்டுள்ள இது வழக்கமான உரைதிருத்திகளைப் (Text Editors) போன்றதுதான். ஆனால் என்ன, நீங்கள் எழுதத்தொடங்கிவிட்டால் வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. எங்கேயும் கவனம் சிதற வேண்டியதில்லை. நீங்கள் எழுதுவதை மட்டுமே நீங்கள் கவனிக்க முடியும்.

எழுத்தாளர்களின் உளவியல் அறிந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.

"எழுதுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" ;)

உங்கள் கணினியின் திரையை கருமை நிரப்பிவிட எழுதும் திடலை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

திடலைச் சுற்றியிருக்கும் எல்லைக்கோட்டினைக்கூட நீங்கள் அகற்றி விடலாம்.

படத்தில் இருக்கும் கருப்பில் பச்சை நிற இடைமுகப்பு எனக்கு வசதியாக இருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கு வேண்டியபடி நிறங்களை அமைத்துக்கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவை இம்மென்பொருள் கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாய்ப் படுகிறது

தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை எழுதும் விதமாக Buffer அடிப்படையிலான வசதி உண்டு. தானாக குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை ஆவணத்தைச் சேமித்துவிடுகிறது. வேகமாக விசைப்பலகை கொண்டே அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

பொதுமக்கள் உரிமத்தில் அமைந்த கட்டற்ற மென்பொருள்தான் இது என்பதையும் சொல்லவேண்டுமா என்ன?

பத்திரிக்கை நிறுவனங்களில் தட்டெழுத்தாளர்கள் இவ்வாறான கருந்திரை முனையங்களைப் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

நம் வலைப்பதிவாளர்களுக்கு மிகவும் பயன்படும் மென்பொருள்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டுக் கருத்துச்சொல்லுங்கள்.

எழுதுங்கள், எழுதுங்கள்; எழுதும்போது எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் ;-)

Friday, March 27, 2009

திருக்கோணமலை நிகழ்வட்டு - Trincomalee GNU/Linux Live CD

நாளை நடைபெறவுள்ள GNU/Linux கருத்தரங்கில் பங்குபற்றும் அனைவருக்கும் ubuntu 8.10 நிகழ்வட்டுக்கள் வழங்குவதென முன்னர் முடிவெடுக்கப்பட்டிருந்தது. GNU/Linux தொடர்பான அறிமுகம் திருக்கோணமலையில் முதன்முறையாக நாளைதான் இடம்பெறப்போகிறது என்பதாலும், அங்கே வருபவர்கள் பெரும்பாலும் க்னூ/லின்க்ஸ் பயன்படுத்தும் அடிப்படைகளையும் கூட அறிந்திருக்க வாய்ப்பற்றவர்கள் என்பதாலும் இணையப்பயன்பாடு மிகக்குறைவாகவே காணப்படுவதாலும் ubuntu 8.10 போதுமான அறிமுகத்தையும் பயன்பாட்டு எளிமையையும் வழங்காது என உணர்ந்தேன்.


ubuntu 8.10 இல் உள்ள பிரச்சினைகள்,

1. தமிழ் மொழி இடைமுகப்பு இணையம் மூலமே நிறுவப்படவேண்டியுள்ளது.

2. பயன்பாட்டிலுள்ள உள்ளீட்டு வடிவங்கள் இயல்பிருப்பாக இல்லை.

3. mp3, DVD போன்றவற்றை இயக்கத்தேவையான மென்பொருட்கள் இல்லை

4. க்னூ/லினக்சின் கவர்ச்சிகரமான மென்பொருட்கள் அதில் உள்ளடங்கி இல்லை.


இவற்றை களையுமுகமாக உபுண்டுவை அடிப்படையாகக்கொண்ட புதிய வழங்கல் ஒன்றினை உருவாக்க வேண்டியிருந்தது.

remastersys பயன்படுத்தி இப்புதிய வழங்கலை உருவாக்கினேன். ஏற்கனவே நூலகம் நிகழ்வட்டு உருவாக்கிக்கிடைத்த அனுபவங்கள் மிகவும் பயனளித்தது.


பெரிய பிரச்சினை இடப்பற்றாக்குறைதான். நெருக்கப்பட்ட iso படிமம் 700 மெகாபைட்டுக்கு குறைவாக இருந்தாக வேண்டும் (DVD வழங்க முடியாது. செலவு, DVD Drive பிரச்சினைகள்)

எனவே உபுண்டுவின் பின்வரும் முக்கிய பொதிகள் அகற்றப்படவேண்டியிருந்தது.

* Help Documents
* F-Spot
* Evolution
* GNOME Games


இவைதவிர வேறும் பல மென்பொருட்கள் அகற்றப்பட்டது.


கூடவே,


* Pidgin அகற்றப்பட்டு Kopete ஆக் பிரதியிடப்பட்டது. (webcam வசதிக்காக)

* மிக நீண்ட மனப்போராட்டத்துக்கும் சமரசங்களுக்கும் பின்னர் Ekiga அகற்றப்பட்டு Skype நிறுவப்பட்டது.

* இடப்பிரச்சினையாலும், நிகழ்வட்டில் வேகம் தேவைப்படுவதாலும் Openoffice Calc அகற்றப்பட்டு Gnumeric நிறுவப்பட்டது.

* Totem அகற்றப்பட்டு VLC நிறுவப்பட்டது. (இது அனைத்து கோப்பு வடிவங்களையும் பிரச்சினையின்றி இயக்க உதவும்)

புதிதாக தமிழ் பயன்பாட்டுக்குத்தேவையான பொதிகளும் தமிழ் இடைமுகப்புப்பொதியும் நிறுவப்பட்டது. இதில் தமிழ் இடைமுகப்பானது பயனர் தெரிவின் அடிப்படையில் செயற்படுமாறே அமைக்கப்பட்டது. தமிழ் இடைமுகப்பை விட ஆங்கில இடைமுகப்புடன் கருத்தரங்கில் வட்டுக்கள் வழங்கப்பட வேண்டிய சூழல் உண்டு. முற்றிலும் புதியதொன்றாக அல்லாமல் க்னூ/லினக்சினை ஓரளவு பழக்கப்பட்ட ஒன்றாகவே பயனர் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஆனால் பார்வையாளர்களைக் கவருமுகமாக தமிழ் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளும், தமிழ் இடைமுகப்பும் திரையில் காண்பிக்கப்படும். தமிழ் இடைமுகப்பாக்கத்தில் பங்குபற்றும் வழிமுறைகளும் விளக்கப்படும்.

தமிழ் 99, பாமினி, இலங்கையின் தரப்படுத்தப்பட்ட தளக்கோலம், ஆங்கில ஒலியியல் ஆகியவை உள்ளீட்டு முறைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை க்னூ/லினக்சை இவ்வட்டு மூலமாகவே அறிமுகப்படுத்த வேண்டியுள்ளதால் ஆர்வமூட்டக்கூடிய பல மென்பொருட்களைக் காட்சிப்படுத்த வேண்டிய தேவையும் எழுகிறது.
மிகச்சிரமப்பட்டு இடமொதுக்கி பின்வரும் பொதிகள் நிறுவப்பட்டுள்ளன.

* Kdenlive video editor
* Audacity
* Hydrogen Drum machine

இப்பொதிகள் பயனுள்ள "விளையாட்டுக்களாக" வும் இருக்கும் என்பதால் Games அகற்றப்பட்டுள்ளது ;-)


நேரப்பற்றக்குறை காரணமாக இடைமுகப்பின் எழுத்துரு, அழகு போன்றவற்றை கவனிக்க முடியாமல் போய்விட்டது.


திருக்கோணமலை நிகழ்வட்டுக்கான Wallpaper வடிவமைப்புக்காக திருக்கோணமலைக் கடற்கரையை அழகாக ஒளிப்படம் எடுத்துத் தந்துதவிய வி. பிரஷாந்தனுக்கு நன்றிகள்.

அவரது ஒளிவண்ணத்தில் உருவான Wallpaper இதோ :



கருத்தரங்கினை ஒழுங்குபடுத்தி அதற்கான உழைப்பினைச் செலுத்திக்கொண்டிருக்கும் ஜெகந்த்துக்கு சிறப்பு நன்றிகள்.


வட்டினைத் தரவிறக்கத்துக்கு வழங்குவதற்கான வசதிகள் தற்போது இல்லை.

நாளை திருக்கோணமலையில் GNU/Linux கருத்தரங்கு.

நாளை 28-03-2009 சனிக்கிழமை திருக்கோணமலை இந்துக்கல்லூரியில் பிற்பகல் 2 மணிக்கு க்னூ/லினக்ஸ் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒழுங்கு வருமாறு:


1. Software and Types of software
* Software
* Closed Source
* Open Source
* Free software

Software Of the session
Q&A

2. Software Politics
* Monopoly
* Piracy

Software Of the session
Q&A

3. GNU Project, RMS and Linux

* History
* Distros

Software Of the session
Q&A

4. Pros and Cons of GNU/Linux

Software Of the session
Q&A

5. GNU/Linux and IT Industry

FOSS on Windows
Software Of the session
Q&A

6. திருக்கோணமலை நிகழ்வட்டு introduction

Software Of the session
Q&A

7. திருக்கோணமலை நிகழ்வட்டு In use

Software Of the session
Q&A

8. Discussion


திருக்கோணமலை நகரத்தைச்சேர்ர்ந்த கணினிப் பயனாளர்கள், மாணவர்கள் உள்ளடங்கிய 100 பேர் பங்குபற்றும் நிகழ்ச்சியாக இது அமையும்.

கலந்துகொள்ள விரும்புபவர்கள் என்னை (077 2260165) அல்லது ஜெகந்த் (077 5385895)ஐ நாளை காலைக்கிடையில் தொடர்புகொள்ளவும்.

கலந்துகொள்ளும் அனைவருக்கும் க்னூ/லினக்ஸ் கையேடு, திருக்கோணமலை நிழ்வட்டு, சிற்றுண்டிகள் வழங்கப்படும்.

Saturday, February 14, 2009

கியூப மக்களின் கருத்தியலுக்கு மிக அருகாமையில் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இருக்கிறது.

இவ்வாரம் கியூபா (கூபா) நாடு தன் க்னூ/லினக்ஸ் வழங்கலான "நோவா" வினை வெளியிட்ட செய்தி ஊடகங்களை பற்றிகொண்டுவிட்டது.




நோவா:

இது பிரபலமான ஜென்ட்டூ லினக்ஸ் இனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல். அதனால் மற்றைய (எடுத்துக்காட்டாக உபுண்டு) வழங்கல்கள் போன்று இருமக்கோப்புகளிலிருந்தல்லாது மூல நிரலிலிருந்து மென்பொருட்களை நிறுவிக்கொள்ளும்.


சீனா, வெனிசுவேலா, பிறேசில், ஆகிய நாடுகள் தமக்கென உத்தியோகபூர்வமாக லினக்ஸ் வழங்கல்களை இதற்கு முன்னர் உருவாக்கிக்கொண்டுள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் உருவாகிவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசுகள் க்னூ/லினக்ஸ் மீதான தங்கள் ஆதரவை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன.

நோவா, ஹவனாவில் நடைபெற்ற "தொழிநுட்ப இறையாண்மை" மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

நோவா க்னூ/லினக்ஸ் பற்றிய சிறு விளக்கப்படம் Youtube இல் உள்ளது.



சில பின்னணித் தகவல்கள்:


  • இதன் காரணமாக தொழிநுட்ப உபகரணங்களை கியூபாவுக்கு விற்றல் தடுக்கப்பட்டுள்ளது
  • கியூபா மிக அண்மைக்காலத்தில் தான் தனிப்பட்ட பாவனைக்கான கணினிகளை விற்கும் அனுமதியை வர்த்தகர்களுக்கு வழங்கியிருந்தது.

  • கியூபாவுக்கான ஒளிநார் இணையப்பாட்டை அணுக்கம் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ளது. (இது இணையத்தொடர்புக்கும், வேகத்துக்கும் இன்றியமையாதது)

மைக்ரோசொஃப்ட் மென்பொருட்கள் சட்டபூர்வமாக கியூபாவுக்கு விற்கப்படுவது அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.



கியூபத் தரப்பில் இச்செய்தி தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் சில :


எல்லாம் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் என்ற வகையில், கியூப மக்களின் கருத்தியலுக்கு மிக அருகாமையில் கட்டற்ற மென்பொருள் இயக்கம் இருக்கிறது.


தனியுரிமை மென்பொருட்கள், ஒருவர் அறியாதபடிக்கு பின்கதவுகளையும் கெடுதியான நிரல்களையும் கொண்டிருக்கமுடியும். கட்டற்ற மென்பொருட்களில் அவ்வாறில்லை.


மைக்ரோசொஃப்டின் மென்பொருட்கள் மூடிய நிரல்களாக இருப்பதால், அந்நிரல்களில் அமெரிக்க அரசின் நலன் சார்ந்த செயற்பாடுகள் பொதியப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகமும் வெவ்வேறு வர்த்தைகளூடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.





தொழிநுட்பத்துறையின் பன்னாட்டு இளம் சமுதாயம் கியூபா, கம்யூனிசம் தொடர்பாய் இச்செய்தி தொட்டு என்ன உரையாடிக்கொள்கிறார்கள்?

பார்க்க:

http://linux.slashdot.org/article.pl?sid=05/05/19/1213245&tid=106&tid=219




Damn, for a minute there, I thought we could use his celebrity power to start convincing people that Linux really is cool.

I can Imagine Castro doing a commercial for Linux:

"Linux. Works for computers as old as myself!" (smokes cigar)



America is pretty much the only country not trading with Cuba directly. In spite of that, millions in US currency flow into Cuba every month through indirect routes, including the sizable Cuban population who fled to the US for love of freedom. Overall, Cuba has a national GDP of $33.92 billion, which gives them a far better per-capita than most other countries with similar poverty levels.

The reality simply is that Cuba is run by a corrupt and incompetant military dictator whose only prior qualification was being a spoiled rich kid and lawyer. The complete mismanagement of the economy by his everlasting regime led to scarcity, and the spoils system inherent in any communist regime has led to a disparity whereby most Cubans live in abject poverty, but the priveledged few live in opulant comfort.

Cuba is not even a good example of how a communist ought to be run, but it is an excellent example of how communist governments eventually are run.



//Oh come on, cut the hypocricy.

Fulgencio Batista was a ruthless dictator, but that was all fine and dandy with the US because he was friendly with them. Not so with Cubans, which why Castro et al managed to overthrow him starting off with only 16 people.

And in Chile, Salvadore Allende was democratically elected, yet the US helped to overthrow him because he wasn't right-wing enough for them, and so that bastard Pinochet got run run roughshod over Chile for the next few decades. And that was all okay.

And in the Dominican Republic, Rafael Trujillo ("he may be a son of a bitch, but he's our son of a bitch") ran a brutal dictatorship all with the help of the US. So why was he okay?

And in Nicaragua, Anastasio Somoza ran a disgraceful dictatorship all nicely sponsored by the US for decades. But once again, somehow that was okay but Sandinistas were not.

And let's not forget that good buddy of the US, Saddam Hussein, who received assloads of military equipment because it suited the interests of the US.

US history is so overrun with embarassing stuff like this it's depressing. But the worst part is that it keeps happening, and most Americans just don't seem to give a damn.//




இச்செய்தி தொடர்பான கியூபாவின் உத்தியோகபூர்வ அறிக்கையினை தேடிப்பார்த்தேன் இணையத்தில் சிக்கவில்லை.உங்களில் எவருக்காவது தேடிப்பெற முடிந்தால் தொடுப்பினை பின்னூட்டம் வழியாகத் தாருங்கள்.