Sunday, April 05, 2009

GNU/Linux: "எழுதுபவர்களுக்கு" ஒரு மென்பொருள்

நண்பரோடு தொலைபேசிக்கொண்டே Gnomefiles வலைத்தளத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த ஆர்வமூட்டும் மென்பொருள் கண்ணில் பட்டது.

இது "எழுதுபவர்களுக்கானது".

எழுதுங்கள்; எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடு.

எழுதும் மனநிலையை சிதைக்கும் ஏராளம் விஷயங்கள் குறுக்கிட்டுக்கொண்டிருக்கும் கணித்திரை எழுத்துச் சூழலில் கணித்திரை எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவும் ஒரு மென்பொருள் இது.


Pyroom என்று பெயரிடப்பட்டுள்ள இது வழக்கமான உரைதிருத்திகளைப் (Text Editors) போன்றதுதான். ஆனால் என்ன, நீங்கள் எழுதத்தொடங்கிவிட்டால் வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. எங்கேயும் கவனம் சிதற வேண்டியதில்லை. நீங்கள் எழுதுவதை மட்டுமே நீங்கள் கவனிக்க முடியும்.

எழுத்தாளர்களின் உளவியல் அறிந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.

"எழுதுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" ;)

உங்கள் கணினியின் திரையை கருமை நிரப்பிவிட எழுதும் திடலை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

திடலைச் சுற்றியிருக்கும் எல்லைக்கோட்டினைக்கூட நீங்கள் அகற்றி விடலாம்.

படத்தில் இருக்கும் கருப்பில் பச்சை நிற இடைமுகப்பு எனக்கு வசதியாக இருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கு வேண்டியபடி நிறங்களை அமைத்துக்கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவை இம்மென்பொருள் கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாய்ப் படுகிறது

தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை எழுதும் விதமாக Buffer அடிப்படையிலான வசதி உண்டு. தானாக குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை ஆவணத்தைச் சேமித்துவிடுகிறது. வேகமாக விசைப்பலகை கொண்டே அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

பொதுமக்கள் உரிமத்தில் அமைந்த கட்டற்ற மென்பொருள்தான் இது என்பதையும் சொல்லவேண்டுமா என்ன?

பத்திரிக்கை நிறுவனங்களில் தட்டெழுத்தாளர்கள் இவ்வாறான கருந்திரை முனையங்களைப் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

நம் வலைப்பதிவாளர்களுக்கு மிகவும் பயன்படும் மென்பொருள்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டுக் கருத்துச்சொல்லுங்கள்.

எழுதுங்கள், எழுதுங்கள்; எழுதும்போது எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் ;-)

1 comments:

Subash said...

அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தல