Saturday, April 26, 2008

உபுண்டு 8.04 : தமிழர்களே தற்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்!

உபுண்டுவின் புதிய பதிப்பான 8.04 தற்போது வெளிவந்துவிட்டது.

அவசியமான சிறப்பான பல மேம்பாடுகளுடன் இப்புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


ஆனால் தமிழ்ப்பயனர்களான எம்மை இப்பதிப்பு ஏமாற்றிவிட்டது. தமிழ் எழுத்துக்கள் எந்த எழுத்துருவை மாற்றினாலும் தெளிவாகத்தெரியாத புது பிரச்சினை ஒன்று இப்பதிப்பில் இருக்கிறது.

பிரச்சினைக்கான காரணத்தைக் கண்டறிவதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறோம்.

காரணம் கண்டறியப்பட்டு தீர்வு கண்டடையப்பட்டதும் தமிழப்பயன்பாட்டுக்கு ஏற்றவண்ணம் இப்புதிய பதிப்பினை உங்களுக்காக மாற்றியமைத்துத்தரும் வகையில் புதிய தபுண்டு வெளியாகும்.

அதுவரை தபுண்டு வெளியீடும் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

ஆகவே, தமிழ், இணையப்பயன்பாட்டை முக்கியமாகக்கருதும் தமிழ்ப்பயனர்கள் இப்போதைக்கு உங்கள் உபுண்டு இயங்குதளத்தை 8.04 இற்கு இற்றைப்படுத்த வேண்டாம் எனப்பரிந்துரைக்கிறேன்.

7.10 இப்போதைக்கு மிகச்சிறப்பாகப் பணியாற்றுகிறது.


இப்பரிந்துரை உபுண்டு குடும்பத்தின் ஏனைய வழங்கல்களான குபுண்டு, எடியுபுண்டு, எக்ஸ் உபுண்டு ஆகியவற்றுக்கும் பொருந்தி வருவதே.


இப்பிரச்சினை தொடர்பான தகவல்களும் மேலதிக செய்திகளும் பின்னூட்டம் வழியாக தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும்.

Saturday, April 19, 2008

பெங்குயின்கள் பறக்கப்பழகிய நாளொன்றில்...

Wednesday, April 09, 2008

Youtube நிகழ்படங்களை மேசைத்தளத்துக்குக் கொண்டுவரும் Totem Plugin

கூகிள் தனது app engine ஐ அறிவித்திருக்கிறது. கணினி வலையமைப்புக்களின் போக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது. வலைப்பக்கங்கள் செயலிகளாக மாறிக்கொண்டிருக்க்கின்றன. ஆனால் அதே நேரத்தில் உங்கள் கணினிச்செயலிகள் வலையோடு தம்மை இறுகப்பிணைத்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டன.

இந்த அடிப்படையில் அண்மையில் வெளிவந்த க்னோம் 2.22 மேசைச்சூழலின் புதிய முன்னேற்றங்களில் ஒன்றுதான் இந்தச் சொருகுபொருள் (plugin).

உபுண்டு, ஃபெடோரா போன்ற வழங்கல்களில் இயல்பிருப்பாக வந்து தொலைக்கிறது என்பதைத்தாண்டி இந்த டோட்டம் இயக்கியை நான் பாட்டுக்கேட்கவோ படம் பார்க்கவோ பயன்படுத்துவதில்லை.

ஆனால் இந்த youtube சொருகுபொருளோடு தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது totem.


உங்கள் totem player இனை திறந்து வைத்துக்கொண்டு அதில் youtube நிகழ்படங்களைத்தேடி, அதிலேயே பார்க்கக்கூடிய வசதியை இது தருகிறது. கூடவே related videos, search results எல்லாவற்றையும் சிறு படங்களாகப் பக்கப்பட்டையில் காண்பிக்கிறது.

உலாவியைப்பயன்படுத்தி youtube தளத்திற்குப்போய் படம்பார்ப்பதை விட இந்த வழிமுறை கொஞ்சம் ஆர்வமூட்டும்படியாக இருப்பதென்னவோ உண்மைதான்.
கூடவே வலைச்செயலிகளை விட, ஒரு மேசைத்தள media player என்ற வகையில் பெறக்கூடிய கூடுதல் வசதிகளையும் பெற முடிகிறது.


இயல்பிருப்பாக வரும் சொருகுபொருளில் வழுக்கள் உண்டு. வழு நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்தச்சொருகினை பெற்றுச் சொருகிக்கொள்ளுங்கள்.

இம்மென்பொருள் கட்டற்றது. பைத்தான் மொழியில் எழுதப்பட்டது.

இதனை மேலும் சீர்படுத்தச் சில யோசனைகள்:

1. youtube மட்டுமல்லாது ஏனைய நிகழ்படப்பகிர்வுச் சேவைகளையும் உள்ளடக்கலாம்.

2. youtube இனது சொல்திருத்தியைப் பயன்படுத்ததக்கதாக்கலாம்.

3. தமிழில் "தமிழ்" என்று தேடினால் "tamil", "thamiz" போன்ற தேடல் முடிவுகளையும் தரக்கூடியவண்ணம் மாற்றியமைக்கலாம்.

4. தரவிறக்க வசதியினைச் சேர்க்கலாம்.

5. நேரடியாக எமது நிகழ்படங்களைத் தரவேற்றும் வசதி இருந்தால் சிறப்பு.

6. பின்னூட்டங்களைப்படிக்க, அனுப்பக்கூடிய வசதி.

இந்த வசதிகளை வழங்க பகிர்வுத்தளங்களின் API ஒத்துழைக்கவேண்டும்.

முயன்றுபாருங்கள்.

புதிய க்னோம் தற்போது புதிதாக வந்த வழங்கல்களில் காணப்படுகிறது. அடுத்து வரும் உபுண்டுவும் இதனையே கொண்டிருக்கிறது.