Sunday, January 27, 2008

GNU/Linux - சொற்களின் அரசியல் / லினக்ஸ் இலவசமல்ல!

மாயா தனது பதிவில் "இலவச மென்பொருட்கள்" என்ற சொல்லினைப் பயன்படுத்தியிருந்தார்.
அத்தோடு அங்கே தரப்பட்ட தொடுப்புக்களும் சொல்லவந்த கருத்தும் க்னூ/லினக்ஸ் சார்ந்ததாக அமைந்திருந்தது கவனத்தைக் கவர்ந்தது.

இந்தச் சொற்பயன்பாட்டின் குழப்பம், அதன் பாரதூர விளைவுகள் மிகப்பரவலானது. மாயா க்னூ/லினக்ஸ் தொடர்பான தனது நல்லபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விடயமே. சொற் பயன்பாட்டில் ஏற்பட்ட குழப்பம் முழுமையாக அவருடைய தவறல்ல. சரியான விளக்கங்களை கொடுக்க வேண்டியது நமது கடமை.

ஆங்கில மொழிப்பயன்பாட்டில் ஏற்பட்ட இந்த குழறுபடி தேவையில்லாமல் வீண் குழப்பங்களை நிறைய உருவாக்கிவிட்டது. நேரடியாகத் தமிழிலேயே நாம் இச்சொற்களை பயன்படுத்த முனைவோமானால் குழப்பங்கள் வராது.

மாயா கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்சொற்பயன்பாடு குறித்து சில விளக்கங்களைத் தருகிறேன்.

க்னூ/லினக்ஸ் பற்றிய உரையாடலின்போது பின்வரும் சொற்களை நாம் அவதானமாகக் கையாளவேண்டியிருக்கிறது. ஏனெனில் சிறு தவறும் பெரிய தத்துவ, கோட்பாட்டு குழப்பங்களை உண்டாக்கிவிடக்கூடியவை.


இலவச மென்பொருள் :


இந்தச்சொல் தன்னளவில் விளக்குவதைப்போன்றே இந்த வகை மென்பொருட்கள் விலை கொடுத்து வாங்கத் தேவையில்லாதன. எடுத்துக்காட்டாக ரியல் ப்ளேயரை நீங்கள் இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். Winamp இலவசமாகக் கிடைக்கிறது. இவை எல்லாம் இலவச மென்பொருட்கள்.
மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கூட ஏராளமான இலவச மென்பொருட்களை வழங்குகிறது.


இலவச மென்பொருட்கள் எத்தகைய உரிம ஒப்பந்தத்தோடும் வெளிவரலாம் (Lisence Agreement). அவை உங்களை உளவு பார்க்கலாம். வின்டோசில் மட்டுமே கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கலாம். உங்கள் வலைத்தளத்தில் ஏற்றி வைத்து மற்றவர்களோடு பகிரக்கூடாது என்று கட்டுப்படுத்தலாம். பெரும்பாலும் இவை இப்படித்தான் வெளிவருகின்றன.

அனுபவத்தில் இலவச மென்பொருட்கள் ஆபத்தானவையாகவே இருக்கின்றன. எந்தவொரு இலவச மென்பொருளும் (கட்டற்ற இலவச மென்பொருள் அல்லாதவை) ஏதோ ஒரு விதத்தில் உங்கள் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துபவையாக உளவறிபவையாகவே இருக்கின்றன.

நச்சுநிரல்கள் (viruses) அனைத்துமே இலவச மென்பொருட்கள்.

இவற்றை ஆங்கிலத்தில் "Free ware" என்போம்.


தனியுரிமை மென்பொருள்


இவை ஒரு தனி நபருக்கோ நிறுவனத்திற்கோ தனியுரிமையானவை. இம்மென்பொருள் தொடர்பான எல்லா உரிமையும் அவர்களுக்கே உரியதாக இருக்கும். இவற்றை அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் நீங்கள் பயன்படுத்த அனுமதிப்பர்.

தனியுரிமை மென்பொருட்கள் காசுகொடுத்து வாங்கப்பட வேண்டியனவாக இருக்கும். அல்லது அவை இலவச மென்பொருட்களாக இருக்கும்.

ஆப்பிள் மாக்கின்டோஷ் இயங்குதளம் ஒரு தனியுரிமை மென்பொருள். இதனை நீங்கள் காசு கொடுத்து வாங்க வேண்டும். "win zip" ஒரு தனியுரிமை மென்பொருள் ஆனால் காசுகொடுத்து வாங்கத்தேவயில்லை. இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச மென்பொருள்.

பெரும்பாலும் தனியுரிமை மென்பொருட்கள் தமது உரிம ஒப்பந்தத்தில் தாம் உங்கள் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளை மிகத்தெளிவாகவே வரையறுப்பர். என்ன, நாங்க கேட்டுக்கேள்வி இல்லாமல் License agreement இனை next கொடுத்து கண்ணை மூடிக்கொண்டு தாண்டிப்போவதால் இந்தக் கட்டுப்பாடுகளை பெரும்பாலான வேளைகளில் அறிந்திருப்பதில்லை.

அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் பொதுவில் சொல்வது என்ன என்றால், இந்த மென்பொருள் அவர்களுக்கே சொந்தமானது, அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை நீங்கள் சில கட்டுப்பாடுகளுடன் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைத்தான்.

விலை கொடுத்து வாங்கினால் என்ன, இலவச மென்பொருளாய் இருந்தல் என்ன இந்த ஒப்பந்தங்களின் படி அவை தனியுரிமை மென்பொருட்களே ஆகும்.

இவற்றை நாம் ஆங்கிலத்தில் "proprietary Software" என்போம்.


மூடிய மூல மென்பொருள் / மூடிய ஆணைமூல மென்பொருள்


கடந்த சில காலங்களுக்கு முன் வெற்றிகரமான மென்பொருள் வணிக உத்தியாக இத்தகைய மென்பொருட்கள் கருதப்பட்டு வந்தன.
அதனால் இவை பிரபலமானவையாகவும் இருக்கின்றன.

இந்த மென்பொருட்களை உருவாக்குபவர்கள்/ உருவாக்கும் நிறுவனம் மென்பொருளின் மூல நிரலை/ஆணைமூலத்தை (source code) மிக மிக இரகசியமாக பேணுவதோடு தான் மறைத்து வைத்துக்கொள்ளும். மென்பொருள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப்பற்றி எல்லாம் பயனர் அறிந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்வார்கள். பயனர்கள் மென்பொருளை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதே இதன் மறைமுக விளைவு.

ஒரு நிறுவனம், குறிப்பிட்ட பணி ஒன்றைச்செய்யும் மென்பொருளை நேரமும் பணமும் செலவழித்து உருவாக்கும்போது, அதன் இயக்க முறைகளை, ஆணைமூலத்தினை மற்றவர்கள் இலகுவில் பார்த்து அறிந்து தாமும் போட்டியாக மென்பொருட்களை உருவாக்கி விடாமல் தடுப்பதற்கு இம்முறை பெரிதும் உதவுகிறது.

அநேகமாக இன்று கற்பிக்கப்படும் மென்பொருட் கட்டுமான, வடிவமைப்புக் (Software architecture and Design) கோட்பாடுகள் மூடிய ஆணைமூல மென்பொருள் விருதிக்கானவையே

இலவச மென்பொருட்களும் , காசு கொடுத்து வாங்க வேண்டிய மென்பொருட்களும் மூடிய மூலமாக இருக்கலாம்.

நல்ல எடுத்துக்காட்டுக்களாக, blogger, yahoo services, opera browser, google, MS Office போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இதனை ஆங்கிலத்தில் "closed source software" என்போம்.திறந்த மூல மென்பொருள் / திறந்த ஆணைமூல மென்பொருள்இது மிகவும் அவதானமாகக் கையாள வேண்டிய சொல்.

வெவ்வேறு அர்த்தங்களில் வெவ்வேறு தேவைகளுக்காக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

எது திறந்த ஆணைமூல மென்பொருள்?

இதற்கு இரு வேறு பதில்கள் இருக்கின்றன.

1. OSI நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிம ஒப்பந்தத்தைக்கொண்ட மென்பொருட்கள்.

2. மென்பொருளின் ஆணைமூலத்தைக் கிடைப்பில் வைத்திருக்கும் மென்பொருள்.

இந்த இருவேறு பதில்களுக்குரிய மென்பொருட்களும் இன்று இணையம் பூராகவும் திறந்த ஆணைமூல மென்பொருள் என்ற பெயரில் பரந்து கிடக்கின்றன.

இச்சொல் பெரும்பாலும் ஏமாற்று வேலையாகவே பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் கூட திறந்த ஆணைமூலம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. (இந்தத் தொடுப்பைப் போய்ப்பாருங்கள். ச்சும்மா அதிர்ந்து போவீர்கள்!! ) ஆம். அவர்கள் சில மென்பொருட்களுக்கு ஆணைமூலத்தைத் திறந்து வைத்துவிட்டு திறந்த ஆணைமூலம் என்கிறார்கள். இது ஒரு ஏமாற்று நாடகம். மூடிய ஆணைமூல வடிவம் தொடர்ச்சியான தோல்வியைப் பல வழிகளிலும் சந்தித்து வருவதால், தமது நலன்களைக் காத்துக்கொண்டு அதனை எதிர்கொள்ள அவர்கள் இந்த ரெண்டும் கெட்டான் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.


அவர்கள் திறந்து வைத்திருக்கும் மூல நிரலை நீங்கள் பார்க்க முடியும் . ஆனால் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாது. அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிம ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மூடிய ஆணை மூல மென்பொருட்கள் உறுதியற்றவை, பாதுகாப்பில் மிகப்பலவீனமானவை, வினைத்திறன் குறைந்தவை என்று இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால், தமது மென்பொருள் சிறந்தது, பாதுகாப்பானது, வினைத்திறன் கூடியது என்பதை விளம்பரப்படுத்த திறந்த ஆணைமூலம் என்கிறார்கள்.

OSI நிறுவனம் இன்று கேலிக்கூத்தாகிப்போய்விட்டது.

வேறு பலர் "திறந்த ஆணைமூலம்" என்ற சொல் பிரபலமாகிவிட்டதால், விளம்பரத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் எந்தக் கேள்வியும் சிந்தனையும் இல்லாமல் தமது மென்பொருட்களைத் திறந்த ஆணைமூலம் என்கிறார்கள்.


மூடிய ஆணைமூல மென்பொருள் விருத்தி முறை தோல்விகண்டுவிட்டதால் இன்று திறந்த ஆணைமூல விருத்தி முறை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இச்சொல்லைப் பயன்படுத்தலாமே ஒழிய இச்சொல் அரசியல் ரீதியில் அர்த்தமற்றது.

இச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லதென நான் பரிந்துரைக்கிறேன்.

இதனை ஆங்கிலத்தில் "Open Source Software" என்பர்கட்டற்ற மென்பொருள்


(சுதந்திர மென்பொருள் / தளையறு மென்பொருள் / விடுதலை மென்பொருள் என்றும் சொல்லலாம்)


இவ்வகையில் அடங்கும் மென்பொருட்களே அரசியல் ரீதியில் மிக முற்போக்கானவை.

மற்றைய வகை மென்பொருட்களிலிருந்து கட்டற்ற மென்பொருளை வேறுபடுத்துவது அதன் உரிம ஒப்பந்தமேயாகும்.

குறித்த மென்பொருளின் உரிம ஒப்பந்தம் பின்வரும் சுதந்திரங்களை உங்களுக்குத் தருகிறதா என்று பாருங்கள்.

சுதந்திரம் 0: எந்த நோக்கத்துக்காகவும் மென்பொருளை இயக்குவதற்கான சுதந்திரம்.

சுதந்திரம் 1: மென்பொருள் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கற்றுக்கொள்வதற்கும், உங்கள் தேவைகளுக்கேற்றபடி அதனை உள்வாங்கிக்கொள்வதற்குமான சுதந்திரம் (ஆணைமூலம் கிடைக்கக்கூடியதாக இருப்பது இதற்கு முன்நிபந்தனையாகும்)

சுதந்திரம் 2: மென்பொருளின் படிகளை/நகல்களை/பிரதிகளை மீள் விநியோகம் செய்வதற்கான சுதந்திரம். இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவ முடியும்.

சுதந்திரம் 3: மென்பொருளை மேம்படுத்துவதற்கும், திருத்தியமைப்பதற்கும் அவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட மென்பொருளை மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்குமான சுதந்திரம். இதனால் முழுச் சமுதாயமும் பயன்பெற முடியும். (ஆணைமூலம் கிடைக்கக்கூடியதாக இருப்பது இதற்கு முன்நிபந்தனையாகும்)


இந்தச் சுதந்திரங்களை ஒப்பந்தம் உங்களுக்குத் தருமாயின் அது ஒரு கட்டற்ற மென்பொருளாகும்.

இதில் மென்பொருளின் விலை பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை.


ஆம். கட்டற்ற மென்பொருளை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இல்லை. நீங்கள் தாராளமாகக் கட்டற்ற மென்பொருளைக் காசுக்கு விற்கலாம். எந்த தடையும் இல்லை. காசுக்கு விற்கப்படுவதும் கட்டற்ற மென்பொருளே. மேற்கண்ட சுதந்திரங்களை அது பயனருக்கு உறுதிப்படுத்தினால் போதுமானது.

இந்த இடத்திலேயே மாயாவின் பதிவில் "லினக்ஸ் ஒரு இலவச மென்பொருள் இல்லையா?" என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.

லினக்ஸ் கரு என்பது எப்போதும் விற்கப்படக்கூடாதது அல்ல.

எடுத்துக்காட்டாக லினக்ஸ் கருவினைக் கொண்டிருக்கும் எத்தனையோ இயங்குதளங்கள் காசுக்கு விற்கப்படுகிறது. அப்போது நீங்கள் அங்கே உள்ளடக்கப்பட்டுள்ள லினக்ஸ் கருவினைக் காசு கொடுத்தே வாங்க வேண்டும். மிக நல்ல எடுத்துக்காட்டு நீங்கள் நன்கறிந்த ரெட்ஹாட் ( red hat GNU/Linux)
இதன் Enterprise edition இலவசமல்ல. ஆனால் அது கட்டற்ற மென்பொருள்.

வேறும் சில கட்டற்ற மென்பொருட்கள் இலவசமல்ல.

கட்டற்ற மென்பொருட்கள் பொதுவாகப்பயன்படுத்தும் நன்கறியப்பட்ட உரிம ஒப்பந்தம் GPL ஆகும் (க்னூ பொதுமக்கள் உரிமம்) இது தவிர வேறு பல உரிமங்களும் உண்டு.

கட்டற்ற மென்பொருட்கள் ஆங்கிலத்தில் Free software எனத் துரதிஷ்ட வசமாகப் பயன்படுத்தப்படுவதே இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் உண்மையில் இந்தச்சொல் freedom software என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.கட்டற்ற மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருள்இது அடிக்கடிச் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் இரு முகாம்களைச் சமாளித்து ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகக் கண்டுபிடிக்கப்பட்ட சொல்.

பல திறந்த ஆணைமூலக் காரருக்கு தம்மைக் கட்டற்ற மென்பொருள் என்று மட்டும் சொல்வது பிடிக்காது. பல கட்டற்ற மென்பொருள் காரருக்குத் தம்மைத் திறந்த ஆணைமூலம் என்று சொல்வது பிடிக்காது.

கட்டற்ற மென்பொருட்கள் எல்லாம் திறந்த ஆணைமூலமே அதில் பிரச்சினை இல்லை. சில திறந்த ஆணைமூல மென்பொருட்களும் கட்டற்றவை. எனவே இருவரும் ஓர் உடன்பாடு கண்டு இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.


மேற்சொன்ன நான்கு சுதந்திரங்களைக் கொடுக்காத திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இந்த வகைக்குள் அடங்காது.


மிக மிக மோட்டுத்தனமான எளிமையாகச்சொன்னால் (;-), கட்டற்ற மென்பொருட்களும் , நல்ல திறந்த ஆணைமூல மென்பொருட்களும் இந்த வகைக்குள் அடங்கும். கெட்ட திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இந்த வகைக்குள் அடங்காது.


ஆங்கிலத்தில் இது FOSS எனப்படுகிறது. ( Free and Open Source Software)

பிரான்சியர்கள் இதனை FLOSS என்கிறார்கள். அதாவது Free/Libre/Open Source Software.லினக்ஸ்


இதுவும் மிகத்தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்களிலொன்று.

உண்மையில் லினக்ஸ் என்பது இயங்குதளத்தின் அடிப்படையாய் அமையும் கருனி யாகும் (kernel)

Linus என்பவர் இக்கருனியை உருவாக்கினார். கருனி இயங்குதளமொன்றின் இன்றியமையாத கூறாகும். இயங்குதளத்தில் வேறு இன்றியமையாத பாகங்களும் உண்டு.

இன்று நாம் பொத்தாம்பொதுவாக லினக்சஸ் என்று சொல்லும் இயங்குதளங்கள்(Operating Systems) லினக்ஸ் கருனியினையும் மிகுதி GNU பாகங்களையும் கொண்டிருக்கிறது.

GNU என்பது எண்பதுகளில் ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் உருவாக்க முயலப்பட்ட முழுமையான கட்டற்ற இயங்குதளமாகும். அவ்வியங்குதளத்தின் கருனியாக லினக்ஸ் பரவலக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. லினக்ஸ் இல்லாத க்னூ இயங்குதளங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக Nexanta வினை சொல்லலாம். இது தனது கருனியாக Open solaris இனைக் கொண்டிருக்கிறது.

ஆகவே இக்கட்டற்ற இயங்குதளத்தினை லினக்ஸ் என்று சொல்வது மிகத்தவறனதாகும். GNU/Linux என்றே சொல்ல வேண்டும்.


லினக்ஸ் என்று பரவலாக அறியாமை கரணமாகவே பயன்படுத்தப்படுகிறது.


இப்பதிவில் சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டால், சந்தேகங்கள் இருந்தால், முரண்பாடுகள் இருந்தால், பின்னூட்டமிடுங்கள். பின்னூட்டங்கள் வழியாக இவை தொடர்பான கேள்வி-பதில் ஆவணம் ஒன்றை உருவாக்கலாம்.

10 comments:

said...

நன்றி மயூரன்

said...

நல்ல விளக்கம், மயூரன். "லினக்ஸ் இலவசமல்ல" என்பதைக் காட்டிலும் "லினக்சை விற்கவும் செய்யலாம், எல்லா இடங்களிலும் இலவசமாகக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை" என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். உபுண்டுவை இலவசமாகத் தானே பெற்றுக் கொள்கிறோம்?

said...

நன்றி ரவிசங்கர். உங்கள் கருத்துச் சரியானதே.

இன்னொரு பதிவுக்கான பதில் என்பதால் அதலைப்பு அப்படி அமைந்துவிட்டது.

said...

பதிவுக்கு நன்றி மயூரன். இங்க இன்னொரு முக்கியமானது(!) விட்டுப்போயிருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு புரிஞ்ச வரையில,

ஏதாவதொரு கட்டற்ற மென்பொருள்ல நாம நமக்கு விரும்பின மாதிரி மூலத்தில எதாவது மாற்றங்கள் செஞ்சி அதை தனியா வெளியிட விரும்பினா அதையும் மூலத்தோட உரிமத்தில தான் வெளியிடணும்.

இங்க எனக்கிருக்கிற சின்ன குழப்பம், //கட்டற்ற மென்பொருளை இலவசமாகத்தான் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இல்லை. நீங்கள் தாராளமாகக் கட்டற்ற மென்பொருளைக் காசுக்கு விற்கலாம். எந்த தடையும் இல்லை. காசுக்கு விற்கப்படுவதும் கட்டற்ற மென்பொருளே.//

எனக்கு ஆணைமூலங்கள் கிடைக்கும்போது அதை நான் மீள்வெளியீடாக இலவசமாகவே கொடுக்கமுடியுமே. அதை எப்படி கட்டுப்படுத்தறாங்க.

said...

என்ன லினிக்ஸ் இலவசமில்லையா?? தலைப்பை பாத்து கொஞ்சம் அதிர்ந்து போய்...

எனக்கு இருந்த பல சந்தேகங்கள் ஒரேயடியா போயிட்டுது. மிக விளக்கமான கட்டுரை.

மிக்க நன்றி மயூரன்

உடுக்கை முனியாண்டியின்ர கேள்வி எனக்கும் இருக்கு.

நன்றி.

said...

இவற்றையும் பார்க்கவும்

http://www.gnu.org/philosophy/categories.ta.html

http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html

http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html

said...

உடுக்கை முனியாண்டி,


உங்கள் கேள்விகளுக்கு மிக்க நன்றி.

//ஏதாவதொரு கட்டற்ற மென்பொருள்ல நாம நமக்கு விரும்பின மாதிரி மூலத்தில எதாவது மாற்றங்கள் செஞ்சி அதை தனியா வெளியிட விரும்பினா அதையும் மூலத்தோட உரிமத்தில தான் வெளியிடணும்.//

ஆம். அது கட்டாயமானது. உரிம ஒப்பந்தத்தில் இது மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே சுதந்திரத்தைப் பாதுகப்பதற்கான தீவிர கட்டுப்பாடு என்று வர்ணிக்கப்படுகிறது.


//எனக்கு ஆணைமூலங்கள் கிடைக்கும்போது அதை நான் மீள்வெளியீடாக இலவசமாகவே கொடுக்கமுடியுமே. அதை எப்படி கட்டுப்படுத்தறாங்க.//

ஆமாம். தாராளமா நீங்கள் அந்த ஆணைமூலத்தை compile செய்து இலவசமாக வழங்கலாம். யாரும் கட்டுப்படுத்த முடியாது.

எடுத்துக்காட்டுக்கு இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.

1. அனைவரும் நன்கறிந்த Limewire இருக்கிறதல்லவா? அது அடிப்படையில் ஒரு "கட்டற்ற" மென்பொருள். பார்க்க: http://www.limewire.org/gnu.shtml

அது தனது turbo charged பதிப்பு எனப்படும் வேகம் கூடியதரவிறக்கத்துக்கான பதிப்பினைப் பணத்துக்கே விற்கிறது.

பின்னொரு காலத்தில் இம்மென்பொருளின் ஆணைமூலத்தினப்பெற்று மீள compile செய்து frostwire என்ற பெயரில் இன்னொரு குழு வெளியடுகிறது. இது முற்றிலும் இலவசம்.

2. Redhat நீங்கள் நன்கறிந்த க்னூ/லினக்ஸ் வழங்கல். இதன் enterprise edition இலவசமல்ல. பணம் கொடுதே வாங்க வேண்டும். ஆனால் இது கட்டற்ற மென்பொருளாக இருப்பதால் தனது ஆணை மூலத்தினை இலவசமாக வழங்கியே ஆக வேண்டும். இவ்வாறு வழங்கப்பட்ட ஆணைமூலத்தைக்கொண்டு, அதே redhat enterprise edition ஐ மீள உருவாக்கி இன்னொரு செயற்றிட்டம், Cent OS என்ற பெயரில் வெளியிடுகிறது. இது முற்றிலும் இலவசம்.


இதுதான் கட்டற்ற மென்பொருட்களின் இயற்கை இதற்கு ஒன்றுமே செய்ய முடியாது.

இந்த நிலைதான் கடற்ற மென்பொருள் உலகில் ஏகாதிபத்தியம் உருவாகாமல் தடுத்து வருகிறது.

said...

நன்றி மயூரன் !

உங்கள் நீண்ட விளக்கமான பதிவுக்கு

said...

நல்ல விளக்கம்!

said...

அருமையான கட்டுரை மயூரன்.

ஒரு புது தமிழ் வார்த்தையை இங்கே கண்டேன்.... கருனி(kernel) :)

நல்ல மொழிபெயர்ப்பு ..:)