Friday, June 22, 2007

கணினிச் சஞ்சிகைக்கு ஆங்கிலத்தில் தான் பெயர் இருக்க வேண்டும்!

(GNU/Linux குறிப்பேடு)


அண்மையில் இலங்கையில் வெளிவந்து மிகவும் பிரபலமாகியிருக்கும் நல்லதொரு கணினிச் சஞ்சிகைதான் தமிழ் PC Times.

திறந்த மூலத்துக்கு ஆதரவான பாதையை தேர்ந்தெடுத்திருப்பதுடன், ஆரோக்கியமான, ஆழமான பல கட்டுரைகளையும் இச்சஞ்சிகை கொண்டிருக்கிறது.

கூடவே தனது கட்டுரைகளும் உள்ளடங்கும் வலைப்பதிவொன்றினை இலவசமாகவே நடத்தி வருகிறது.

இப்பொழுதெல்லாம் கணினிச்சஞ்சிகைகள் பற்றி கேட்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது "தமிழ் கம்பியூட்டர்" இதழும், இந்தச் சஞ்சிகையும் தான்.


இச்சஞ்சிகையின் முதல் இதழ் வெளியான காலந்தொட்டே எனக்கு உறுத்தலாயிருக்கும் விடயம் இதன் பெயர்.

அது என்னய்யா தமிழ் பீசீ டைம்ஸ்?

இந்த ஆதங்கத்தை இவ்விதழின் ஆசிரியர் திரு. ருஷாங்கன் அவர்களிடம் நேரடியாகவும் வெளிப்படுத்தியிருந்தேன்.


நீண்டலாகமாக தமிழ்ச் சூழலில் இந்தப் பாரம்பரியம் இருக்கிறது.

கணினிச் சஞ்சிகை என்றால் அதற்கு ஆங்கிலத்தில் பெயர் இருக்க வேண்டும்.

இந்த மனோபாவம் எல்லாச் சஞ்சிகைக்காரர்களிடத்திலும் இருக்கிறது.

தமிழ் கம்பியூட்டர்
கம்பியூட்டர் டுடே
பீ சீ ஃபோக்கஸ்

என்று நீள்கிறது இந்தப்பட்டியல்.


"கணினி என்றால் ஆங்கிலம்" என்ற ஆழ்மனத் தாக்கத்தின் விளைவே இது என்று கருதுகிறேன்.

தீவிர எழுத்துச்சூழலில் பரிச்சயமுள்ள ருஷாங்கன் போன்றவர்கள் இடம்பெறும் சஞ்சிகைகூட இதிலிருந்து தப்பவில்லை.



இத்தகைய பெயர்கள் சஞ்சிகை வாங்கிப்படிப்பதையே தடுக்கும் மனவுறுத்தலாக பலமுறை எனக்கு இருந்திருக்கிறது.

இந்த சஞ்சிகைக்கு ஆரம்பம் தொட்டே எதுவும் எழுதாமலிருப்பதற்கு ஒரே காரணமும் இந்தப்பெயர்தான்.



தமது சஞ்சிகையின் பெயரை நல்ல தமிழ்ப்பெயராக மாற்றியமைப்பதன்மூலம் பரம்பரை பரம்பரையாகத்தொடர்ந்துவரும் இந்த அடிமை மனோபாவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் PC Times இதழ்க்காரர்கள் முன்வருவார்களா?

பெயரை மாற்றுவது அவர்களது சந்தைப்படுத்தலுக்கு பாரிய தாக்கமெதனையும் ஏற்படுத்தாது என்பதை என்னால் உறுதிபடக் கூற முடியும்.
இப்போது இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரேயொரு தரமான கணினிச் சஞ்சிகை இதுதான்.

இரண்டு இதழ்களில் உட்பக்கம் மாற்றப்பட்ட பெயரைப்போட்டு, மூன்றாவது இதழிலிருந்து ஒரேயடியாகப் பெயர் மாற்றம் செய்துவிடலாம்.

இது தமிழ் சூழலுக்கு செய்யும் கைம்மாறு.

இம்மாற்றத்தினை செய்ய முன்வருமாறு சஞ்சிகையின் ஆசிரியர் குழுவினரை தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

எனது இக்கருத்துக்கு ஆதரவானவர்கள் இந்த சஞ்சிகைக்காரர்களுக்கு பெயர் மாற்றத்துக்கான அழுத்தத்தைக் கொடுக்கவும்.

Saturday, June 16, 2007

வீட்டுக்கு வீடு ஒரு வலைத்திரட்டி - From Liferea to Liferea

(GNU/Linux)
முன்னைப்போல இல்லை இப்பொழுது. ஆளுக்காள் வலைபப்திவுத் திரட்டிகளை ஆரம்பித்துவிட்டார்கள். போதாக்குறைக்கு கூகிள், யாகூ போன்ற நிறுவனங்களும் தனித்தனித் திரட்டிகளை வழங்க ஆரம்பித்துவிட்டன.

செய்தித்தளங்களும் எண்ணிக்கையால் அதிகரித்துவிட்டன.

ஒவ்வொரு நாளும் எல்லாத்தளங்களிலும், எல்லாத்திரட்டிகளிலும் என்னென்ன புதிதாக வந்திருக்கிறது என்று தனித்தனியாகப் போய்ப்பார்ப்பதில் எமது இணைய நேரம் கணிசமாக வீணடிகப்படுகிறது.

இதற்கெலாம் என்ன தீர்வு?

நாம் பார்வையிடும் எல்லாத் தளங்களினதும் செய்தியோடைகளை வீட்டில் திரட்டுவதுதான்.
எமக்கென்று ஒரு வலைத்திரட்டியை வைத்துக்கொள்வதுதான்.

இதற்காக ஏராளம் வலைத்திரட்டி மென்பொருட்கள் க்னூ/லினக்ஸ் இயங்குதளத்துக்குக் கிடைக்கின்றன.

இவற்றில் எது சிறந்தது? எதனைப் பயன்படுத்தலாம்?


இந்தக்கேள்வியோடே இத்தனைநாள் போராடிக்கொண்டிருந்தேன்.

ஆரம்பத்தில் Liferea என்ற திரட்டியைப் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். ஆனால் வேறு உறுமீன்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் வேறு வேறு திரட்டிகளையும் மேய்ந்துகொண்டிருந்தேன்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சிறப்பு, ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குறைபாடு.

நான் பயன்படுத்திக்கழித்த சில வலைத்திரட்டிகள் வருமாறு,

Straw

Liferea விற்கு பிறகு பயன்படுத்தத்தொடங்கியது இதுதான். எளிமையான இதன் இடைமுகம் கவர்ந்தது. ஆனால் அந்த எளிமையே பின்பு இடைஞ்சலாகவும் போய்விட்டது.


எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் செய்யும் வாய்ப்பு குறைவாக இருந்தது. தலைப்புக்களைப் படித்துவிட்டு மிகுதியை வலை உலாவி மூலமே திறந்து படிக்க வேண்டிய நிலை. இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.


Akregetor

இது நல்லது. அனைத்து வசதிகளையும் கொண்டது. பயன்பாட்டு எளிமையும் மிக்கது. எல்லாவற்றையும் விட இது ஒரு K மென்பொருள் என்பதுதான் என்னுடைய பிரச்சினை ;-)


நான் க்னோம் பயன்படுதுவதால் கே மென்பொருட்கள் பயன்படுத்துவதில் நிறைய நன்மையற்ற விளைவுகள் இருக்கின்றன. கே டீ ஈ உதவிச்சேவைகளும் ஆரம்பிக்கப்படவேண்டியிருப்பதால் நினைவகம் அடைத்துக்கொள்கிறது. கே டீ ஈ பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் திரட்டி பரவாயில்லை.

Thunderbird

இது மொசில்லாக் குழுமத்தின் தயாரிப்பு. ஏராளம் வசதிகளும், எண்ணற்ற நீட்டிப்புக்களும் கொண்டது. செய்தியோடையின் சுருக்கத்தையும் விரிவாகப் பின் வலைத்தளத்தையும் இதனுள்ளே பார்வையிடக்கூடிய வசதி கவர்ந்தது.


அத்தோடு மின்னஞ்சல் பெறும் செயலியாகவும் இதுவே அமைவதால், உலாவிக்குப் போகாமலேயே எம்முடைய இணையப்பயன்பாட்டின் பெரும்பகுதியை இதனுள் செய்து முடித்துவிட முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.


ஆனால் இந்த பிரமாண்டமே இதை வெறுக்கப் போதுமான காரணமாகிவிட்டது.
தொடங்குவதற்கான நேரம் சற்றே அதிகம். சில இடங்களில் தமிழ் ஒருங்குறியைச் சரியாக கையாள்கிறதில்லை. நான் மின்னஞ்சலை உலாவியிலேயே பயன்படுத்த விரும்புவதால் தேவையற்ற வசதிகள் சுமையாகப்போய்விட்டது.


Wizz rss

சரி உலாவியிலேயே திரட்டி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் Firefox இற்கான வலைத்திரட்டி நீட்சிகளைத் தேட ஆரம்பித்தேன்.
கிடைத்தவற்றுள் சிறப்பாக இருந்தது இதுவே.


நிறைய வசதிகளைக் கொண்டிருந்தது.
குறை என்று சொல்லப் பொதுவாக எதுவுமில்லை.
ஆனால் என்னுடைய உலாவியில் தேவையற்ற பட்டைகளைப் போட்டுவிடுவது உறுத்தலாக இருந்தமையாலும், "உலாவி அற்ற வலைத்திரட்டி" ஒன்று நல்லது என்று பட்டதாலும் இதனை விட்டு வரவேண்டியதானது.


Liferea.

வலைத்திரட்டிக்கான எனது தேடல் கடைசில் தொடங்கிய இடத்திலேயே வந்து முடிந்தது. :-)



ஊர் மேய்ந்து பார்த்ததில் முன்னர் பயன்படுத்திய இந்தத்திரட்டியே சிறப்பானது என்று முடிவெடுக்க வேண்டியதாயிற்று.

  • எளிமை. அதே நேரம் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய வாய்ப்பு.
  • திரட்டியினுள்ளேயே வலைப்பக்கத்தையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு.
  • மிகக்குறைந்த தொடங்கும் நேரம்.
  • எளிமையான வகைப்படுத்தல் வசதி
  • GTK பின்பலம்
  • சிறப்பான ஒருங்குறிக் கையாள்கை

போன்றவை கவர்கின்றன.

ஏனோ தெரியவில்லை விக்கிபீடியாவின் செய்தியோடையைத் திரட்டுவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றது இச்செயலி. இது யாருடைய தவறு என்று தெரியவில்லை. இப்போதைக்கு தமிழ் விக்கியின் அண்மைய மாற்றங்களை வலைத்தளம் வழியாகவே பார்க்கவேண்டியதாகிறது.

ஆகவே இத்தால் சகலமானவர்களுக்கும் நான் தெரிவிப்பது யாதெனில்,
உங்கள் வீட்டில் வலைத்திரட்டி ஒன்றை வைத்திருக்க நான் பரிந்துரைக்கும் மென்பொருள் Liferea.

எல்லா திரட்டிகளுமே எமது செய்தியோடைச் சேகரிப்பை opml கோப்பாக சேமித்துத்தரக்கூடிய வசதியைக்கொண்டிருக்கின்றன. அதனால் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறுவது அவ்வளவு குழப்பகரமானதல்ல.



இவைதவிர வேறு சிறப்பான வலைத்திரட்டிகளுடனான பரிச்சயம் உங்களுக்கு இருக்குமெனில் பின்னூட்டம் வழியாக அறியத்தாருங்கள்.

Friday, June 15, 2007

உபுண்டு தமிழ் கோளரங்கம்

(GNU/Linux)

தமிழ்மணம் தளம் மட்டுமே என்றில்லாது இப்போது பல்வேறு தேவைகளுக்குமான சிறு சிறு குழுக்கள் சார்ந்த வலைபப்திவுத்திரட்டிகள் உருவாகிக்கொண்டிருக்கும் ஆரோக்கியமான சூழல் வளரத்தொடங்கியிருக்கிறது. இதில் தற்போது புதிதாக இணைந்துகொண்டிருப்பது உபுண்டு தமிழ் கோளரங்கம்.

தற்போது வளர் நிலையில் இருந்தாலும் தமிழில் உபுண்டு தொடர்பாகவும், கட்டற்ற இயங்குதளம் தொடர்பாகவும் எழுதும் வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திரட்டித்தரப்போகிறது இந்தக் கோளரங்கம்.


Planet என்கிற செய்தியோடைத் திரட்டி மென்பொருளைக்கொண்டு இயங்குகின்ற இவ்வாறான ஏராளம் திரட்டிகள் ஆங்கிலத்தில் உண்டு.

அவற்றுள் பிரபலமானவை,

Planet Ubuntu Women
ubuntu planet
debian planet
gnome planet


போன்றவை.

தமிழில் இதுவே முதன்முறை.

இத்திரட்டி தற்போது கைமுறையாகவே இற்றைப்படுத்தப்படுகிறது என்ற போதிலும் எதிர்காலத்தில் தன்னியக்க இற்றைப்படுத்தல் நிகழும் என உறுதியளிக்கிறார்கள்.

உண்மையில் உபுண்டுவின் ஜனநாயகத்தன்மையே இப்படியான திரட்டியொன்றின் வருகைக்கு உந்துவிசையாக இருந்திருக்கிறது.

இது ஒரு நல்ல வருகை.

இவ்வாறன திரட்டி ஒன்றினை உருவாக்கிப் பராமரிக்க முன்வந்திருக்கும் உபுண்டுத் தோழர்கள் ராமதாஸ், ஷங்கர் போன்றோருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நீங்களும் உபுண்டு மற்றும் கட்டற்ற இயங்குதளம், GNU/Linux தொடர்பான பதிவுகளைச் செய்பவராயின் உபுண்டு கோளரங்கத்தில் உங்கள் பதிவையும் இணைத்துக்கொள்ளலாம்.

அதற்கான வழிமுறைகள் இங்கே.