Friday, May 11, 2007

தபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்

இன்றைக்குத்தான் ஃபீஸ்டிக்கான (Feisty) தபுண்டு (tabuntu) பொதியினை முழுமைப்படுத்தி தரவேற்றினேன்.

சரி, முதலில் தபுண்டு என்றால் என்ன என்று சொல்லிவிடுகிறேன்.

தமிழ் உபுண்டு என்பதன் சுருக்கமே தபுண்டு. ;-)

உங்களை அதிகம் அலைக்கழிக்காமல், மிக எளிமையாக மூன்றே மூன்று படிகளில் உங்களுக்குத்தேவையான சகல தமிழ் வசதிகளையும் உபுண்டு க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவித்தரும் பொதிதான் தபுண்டு.


நீங்கள் வின்டோஸ் பயனராக இருந்தால், உங்கள் கணினியில் இயங்குதளத்தை நிறுவியதும் ஏகப்பட்ட சடங்காசாரங்களை பின்பற்ற வேண்டிவரும்.

வன்பொருள் இயக்கிகளை ஒவ்வொன்றாக நிறுவுவது, வைரஸ் தடுப்பூசி, அப்புறம் ஆபீஸ், மற்றைய மென்பொருட்கள்...... இப்படி.

பிறகு தமிழை பயன்படுத்த வேண்டுமானால் இன்னும் தலையிடி.
ஒருங்குறி ஆதரவு, ஏ கலப்பை, இத்தியாதி....

லினக்ஸ் ஓரளவு பரவாயில்லை நிறுவியதும் பயன்படுத்தக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் தமிழை பயன்படுத்த அங்கேயும் ஏகப்பட்ட படிமுறைகளைத் தாண்ட வேண்டும்.

உபுண்டு இப்போதைக்கு தமிழ் பயனர்களுக்கு மிகச்சிறந்த லினக்ஸ் தெரிவாக அமைகிறது. கவனிக்க, "உபுண்டு". குபுண்டுவோ மற்றையவையோ அல்ல.

ஆனால் அதில் தமிழை பயன்படுத்த பின்வரும் தடைகள் தாண்டப்படவேண்டும்.

1. போதிய எழுத்துருக்கள் நிறுவுதல்.

2,. தமிழ் எழுத்துக்களை உலாவியில் சரிவரத் தெரியப்பண்ணுதல்.

3. தமிழ் உள்ளீடு. (தமிழ் 99, அஞ்சல் ...)

எழுத்துருக்கள் பரவாயில்லை. உள்ளீடு மற்றும் firefox பிரச்சனைகளை தீர்க்க சற்றே தேர்ந்த பயனருக்குரிய அனுபவம் தேவைப்படும்.
சிலவேளை scim சட்டகவமைப்புடன் m17n உள்ளீட்டமைப்புகள் இணைந்து வேலை செய்யாமல் அடம்பிடிக்கும். இப்படியாக பல.

இதற்கெல்லாம் வேண்டிய நேரத்தில் இணையம் கையில் இருக்க வேண்டும்.


க்னூ/லினக்ஸ் இனை தமிழ் பயனர் மத்தியில் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் சில முக்கிய தடைகள் தாண்டப்பட வேண்டும் என்பதனை உணர்ந்தேன்.

1. இணைய வசதி இல்லாத பயனர்களும் தேவையான மென்பொருட்களைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

2. சிக்கல்கள் இல்லாமல் தமிழ் வசதிகளை நிறுவக்கூடியதாக இருக்க வேண்டும்.


இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது உருவானதே தபுண்டு எனும் எண்ணக்கரு.

சராசரித் தமிழ்ப்பயனருக்குத் தேவைப்படக்கூடிய பொதிகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருப்பதன்மூலமும், அதனை மிக அழகாக, எளிமையாக வரைகலை இடைமுகப்புடன் (Graphical Interface) நிறுவித்தருவதன்மூலமும் இவ்விரு தடைகளையும் தாண்ட தபுண்டு இலகுவாக உதவிவிடுகிறது.

தபுண்டுவின் இந்தப்பதிப்பில் வரைகலை இடைமுகப்பைச் சேர்த்திருக்கிறேன்.


இப்போது கணினியில் தமிழைப்பயன்படுத்த வின்டோசைப்பயன்படுத்துவதை விடவும் உபுண்டுவினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாக மாறிப்போனது.


நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

உபுண்டுவின் அண்மைய பதிப்பொன்றினை நிறுவிக்கொள்ளுங்கள்.

தபுண்டுவை அதில் நிறுவிக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். தமிழ் பயன்பாட்டுக்கு உங்கள் கணினி தயார்!!!


நீங்கள் உபுண்டுவின் 7.04 பதிப்பினை பயன்படுத்துகிறீர்களா?
தமிழை பயன்படுத்த, தட்டெழுத அங்கே சிரமப்படுகிறீர்களா?


அப்படியானால்,

தபுண்டுவின் வலைத்தளத்துக்கு வருகை தாருங்கள்.

http://tabuntu.googlepages.com/home

கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய தபுண்டுவினை நிறுவிக்கொள்ளுங்கள்.



இனி என்ன? உபுண்டு க்னூ/லினக்சில் தங்குதடையின்றி தமிழைப் பயன்படுத்துங்கள்!




குறிப்பு: தபுண்டு "உபுண்டு 7.04 " இற்கானது. குபுண்டு உள்ளிட்ட ஏனைய வழங்கல்களில் சோதிக்கப்படவில்லை.