
நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களை இங்கே பார்க்கவும்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் கலந்துகொண்டதும் இறுதிவரை ஆர்வத்துடன் பங்கெடுத்ததும் மகிழ்ச்சி தருவதாய் அமைந்தது.
இவ்வெற்றியில் பெரும்பங்கெடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குறிப்பாக ஜெகந்த் நன்றிக்குரியவர்.


கருத்தரங்கின் முன்பாதியில் பெரும்பாலும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் தொடர்பான சித்தாந்த ரீதியான அறிமுகங்களும் விளக்கங்களுமே இடம்பெற்றன.
கவனம் சிதறாமல் இவ்விஷயங்களைக்கேட்டுக்கொண்டிருந்து கேள்வி நேரத்தில் தத்துவம் சார்ந்த பல கேள்விகளையும் கேட்கத்தொடங்கினார்கள்.

திருக்கோணமலையில் இடம் பெறும் கட்டற்ற மென்பொருள் தொடர்பான முதல் கருத்தரங்கு இதுவேயாகும். கலந்துகொண்ட பலர் லினக்ஸ் என்ற சொல்லையே அன்றுதான் முதன் முறையாகக் கேள்விப்படுபவர்களாகவும் இருந்தனர்.

அப்படி இருந்தும் ஒவ்வொரு கேள்வி நேர இடைவெளிகளின் போதும் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டதுடன், க்னூ/லினக்சினைத் தங்கள் சொந்தப்பாவனைக்குப் பயன்படுத்துவது தொடர்பான மிகுதியான ஆர்வத்தையும் வெளியிட்டனர்.

இக்கருத்தரங்கில் வழங்கப்படுவதற்கென "உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப் பதிப்பு" என்ற பெயரில் தனியான வழங்கல் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
இவ்வழங்கல் தொடர்பான மேலதிக விபரங்கள் இந்த வலைப்பதிவில் காணலாம்.
கருத்தரங்கின் இரண்டாம் பாதி இவ்வழங்கலை அடிப்படையாகக்கொண்ட செயன்முறை விளக்கங்களாகவே அமைந்திருந்தது.
பொதுவான மாற்று மென்பொருட்கள், தமிழ்ப்பயன்பாடு, நிறுவல் போன்றவை இவ்வழங்கலை அடிப்படையாக்கொண்டு விளக்கப்பட்டது.

இறுதிப்பகுதியில் முப்பரிமாண இடைமுகப்புடன் கூடிய compiz fusion இனை அறிமுகப்படுத்தி நிகழ்த்திக்காட்டியபோது அரங்கு நிறைந்த கைதட்டல் ஓசையும் ஆரவாரமும் எழுந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. :-)
வரைகலை வேலைகளுடன் தொழின்முறையாக தொடர்புகள் கொண்டுள்ள ஆர்வலர் ஒருவரை நான் க்னூ/லினக்சுக்கு முற்றாக மாற வேண்டாம் இரட்டை இயங்குதளங்களைப் பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியபோது அவர் பெரும் ஏமாற்றமடைந்து சோர்ந்து போனது மறக்க முடியாத சம்பவம்.

தொழிநுட்ப ரீதியாக கவரப்பட்டதை விட, க்னூ/லினக்சினைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தைக் கருத்தியல் ரீதியாகப் பெறவேண்டுமென்ற நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரல் வெற்றியளித்திருந்தமை, மூடிய மென்பொருட்களுக்கு எதிரான உணர்வை பல வழிகளிலும் ககலந்துகொண்டவர்கள் வெளிப்படுத்தியதிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாயிருந்தது.

இக்கருத்தரங்கின் வெற்றி அடுத்தடுத்து இப்பரப்பில் தொடர்ச்சியான கருத்தரங்குகளைப், பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கான தளத்தையும் அமைத்துத்தந்துள்ளது.
திருக்கோணமலையை அடிப்படையாகக்கொண்டு க்னூ/லினக்ஸ் பயனர் குழுமம் ஒன்றினை தொடக்கி வைக்கக்கூடிய புறநிலைகளும் கனிந்து வந்துள்ளன.

கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கு லியோ கழகத்தினரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உபுண்டு க்னூ/லினக்ஸ் திருக்கோணமலைப்பதிப்பின் வட்டுக்களும், நான்குபக்கக் கையேடு ஒன்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.
குறிப்பு:
[படங்களில் உள்ளபடி இடைவேளையில் தாகம் தீர்க்க பெப்சி வழங்கப்பட்டது. நான்குமணி நேரம் தொடர்ச்சியாக உரத்துப்பேசியபடி இருந்தேன். தாகம். வேறு தெரிவு இருக்கவில்லை. பெப்சி,கோக் அவற்றின் துணை உற்பத்திகள் உடலுக்கும் உலகுக்கும் தீங்கான பானங்கள் அவற்றைக் குடிப்பதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுங்கள்]