Monday, November 12, 2007

Gutsy க்கான தபுண்டு வெளிவந்துவிட்டது

தபுண்டு (தமிழ் உபுண்டு) (பார்க்க: முன்னைய வலைப்பதிவொன்று) பொதியின் Gutsy யுடன் ஒத்திசையும் பதிப்பை இன்றுமுதல் தரவிறக்கிக்கொள்ளலாம்.

புதிய பொதி தபுண்டு வலைமனையில் தரவேற்றப்பட்டிருக்கிறது.

பொதி, "tabuntu_7.10.1_i386" எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

அளவு 4.1 MB.

நிறுவலில், பயன்பாட்டில் ஏற்படும் சிக்கலகளை, வழுக்களை உடனுக்குடன் எனக்கு அறிவிப்பதன்மூலம் மற்றவர்களுக்கு உதவுங்கள். தபுண்டு நிரலாக்கத்திலும் தபுண்டு செயற்றிட்டத்திலும் பங்கெடுக்க வாருங்கள்.


== என்ன புதுசு?==

இந்தத் தமிழ் உபுண்டு பதிப்பில் பாரிய மாற்றங்கள் பலவற்றைச் செய்வதாக உத்தேசித்திருந்தேன். நேரமின்மை காரணமாக அவ்வாறெதனையும் செய்து முடிக்க முடியவில்லை. 7.10.2 அல்லது 7.10.3 இல் திட்டமிட்டபடி பெரியளவான மாற்றங்கள் இருக்கும்.

இருந்தாலும் இந்தப்பதிப்பில் பல கவனிக்கத்தகுந்த மாற்றங்கள் உண்டு.


1. பொதிகள் அத்தனையும் கட்ஸி பொதிக்களஞ்சியத்திலிருந்து (Gutsy repositories) பெறப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

2. m17n-contrib பொதி நீக்கப்பட்டுள்ளது. பதிலாக m17n தமிழ் உள்ளீட்டு முறைகள் தனியாக நிறுவப்படுகின்றன.

3. www.wsws.org போன்ற வலைத்தளங்கள் இன்னமும் பயன்படுத்திக்கொண்டிருப்பதால் tam-maduram ஆஸ்கி எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளது.

4. பாமினி விசைப்பலகை வடிவத்தை பயன்படுத்துபவர்களுக்கான "பாலினி" தன்னியக்கமாக நிறுவப்படுகிறது.

5. குழப்பங்களைத் தவிர்க்குமுகமாக நீங்கள் பயன்படுத்தும் உபுண்டு பதிப்பைச் சோதனையிட்டுத் திருப்திகண்டால் மட்டுமே நிறுவல் தொடரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


== என்ன குறை? ==

1. ஓப்பன் ஆபீசில் தமிழ் எழுத்துருவை இயல்பிருப்பாக்குவதற்கான வழிமுறை இன்னும் எனக்கு கண்டுபிடிக்க முடியாதிருப்பதால் இம்முறையும் அதே பழைய அரைகுறை முறை மூலமே இப்பணி செய்யப்படுகிறது.

2. scim மென்பொருள் ஏனைய மென்பொருட்களோடு சேர்ந்து இயங்கும் போது ஏற்படும் வேகக்குறைவு, முறிவு போன்றன தொடரக்கூடும். இதை சரிப்படுத்துவது scim மேநிலை தொழிநுட்பவியலாளர்களுடைய பணி.

3. திறந்த மூலமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே இம்முறையும் பாமினி, சூரியன், tam-maduram எழுத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

4. நிறுவலின் ஆரம்பத்தில் இம்முறையும் உங்களைக்கேட்காமலே இடைமுகப்பின் எழுத்துருவை தபுண்டு மாற்றும். (அடுத்த பதிப்பில் சரி செய்து விடுகிறேன் அதுவரை இம்முறைப்பாட்டைச்செய்த பழனி ராஜா மன்னிக்கவும்)

5. தமிழ் விசை நீட்சி சேர்க்கப்படவில்லை. சில குழப்பங்கள் உண்டு. அடுத்த பதிப்பில் எதிர்பார்க்கலாம்.


== நன்றி ==

  • Mr. Palani Rajah
  • Mr. Sethuramalingam
  • Mr. Sri ramados
  • Mr. T.Vasudevan
  • Ven. Mettavihari
  • Mr. Ravishankar
  • All Ubuntu-tam group members
  • Google Search Engine


== ஆதரவு ==

தபுண்டு தொடர்பான உதவிகளுக்கும் ஆதரவுக்கும் இந்த வலைப்பதிவின் மூலமோ மின்னஞ்சல் மூலமோ உரையாடுங்கள்.

6 comments:

said...

பெருமையாக இருக்கிறது, நற்செய்திக்கு சர்க்கரை இட வேண்டும்.
விரைவில் தரவிரக்கம் செய்து முயல வேண்டும்.

said...

இன்னமும் 7.10க்கு மாறவில்லை, 7.04இல் ஒரு சில வேலைகள் உள்ளன...

விரைவில் மாறியபின் பாவிக்கவேண்டும்...

உங்கள் முயற்சிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...!

said...

தபுண்டுவின் மற்றுமொரு போதாமை இதை நிறுவிய பின் KDE மென்பொருட்களில் தமிழை உள்ளிட முடியாது. இதற்கு scim-qtimm என்ற பொதியை அதற்குரிய தளைகளுடன் நிறுவிக்கொள்ள வேண்டும்.

இதனை தபுண்டுவில் சேர்ப்பதானால் அதற்கான தளைகளாகக்காணப்படும் பல்வேறு KDE மென்பொருட்களையும் சேர்த்தாகவேண்டியிருக்கும். இது நடைமுறைச் சாத்தியமற்றதாகக் காணப்பட்டதாலேயே KDE இற்கு தபுண்டு ஆதரவுப்பொதிக்ளைக் கொண்டிருக்கவில்லை.

இந்தப்பிரச்சினைகென, இணைய இணைப்புக் கொண்டவர்களுக்கான சிறப்பு "தபுண்டு" பொதி ஒன்றினை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. பார்க்கலாம்.

said...

It would be great if I could get tabuntu for ubuntu-amd64 (i686). If you could tell me how to port it, I would do it for tabuntu.

said...

மிகவும் நன்றி ரகு.

தபுண்டு மடலாடல் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
https://lists.sourceforge.net/lists/listinfo/tabuntu-talk


அத்தோடு,

தபுண்டு பொதியினுள் files/debs/ அடைவினுள் உள்ள அத்தனை பொதிகளுக்கும் சமமான 64bit பொதிகளை மாற்றி வைத்துக்கொண்டீர்களானால் 64 bit இற்கான தபுண்டு தயாராகிவிடும். (கவனமாக சோதித்துப்பார்க்கவேண்டும்)

பொதிகளை எனக்கு அனுப்பிவைத்தீர்களானாலும் நல்லதே.
mmauran@gmail.com

இதுபற்றி தொடர்ந்து தபுண்டு மடலாடற் குழுவில் உரையாடலாம்.

said...

புதிய தபுண்டு நிறுவிக் கொண்டேன். நன்றி மயூரன். scim-qtimm நிறுவிய பின்னும் amarokல் எப்படி தமிழில் எழுதுவது என்று புரிபடவில்லை. சிறப்பு தபுண்டுவுக்குக் காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் :)