Thursday, May 24, 2007

பறக்கத் தெரியாதவர் தமிழரா?

திடீரென என் ஒன்று விட்ட தம்பி ஒருவருக்கு வானூர்தி ஒட்டிப்பார்க்கும் ஆசை வந்துவிட்டது. எப்படி வந்திருக்கும் என்று தெரியும் தானே? அவர் சொன்ன வார்த்தை ஒன்றைத்தான் தலைப்பாய்ப் போட்டிருக்கிறேன்.

Microsoft Flight Simulator இனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று அலைந்துகொண்டிருக்கிறார்.

இது எனக்குப் புதிய தேடும் படலத்தைத் தொடக்கி வைத்துவிட்டது.

திறந்தமூலமாகப் பறந்துபழகும் மென்பொருட்கள் ஏதாவது கிடைக்காதா?

என்ன செய்வது, எங்களுக்கு பறக்கும் ஆசை வந்தால் மென்பொருளைத்தான் தேடவேண்டும்.

பறக்கப்படித்துக்கொண்டிருப்பவர்கள் சிரிக்கிறீர்களா?

தேடிலில் ஓர் அழகிய, அற்புத மென்பொருள் கிடைத்தது.

அதுதான் Flight Gear!


முற்றிலும் திறந்தமூலமாக கிடைக்கும் இந்த மென்பொருள் மிக அழகாக க்னூ/லினக்ஸ் இயங்குதளங்களில் செயலாற்றுகிறது.

இந்த விளையாட்டு மென்பொருள் பற்றிய அறிமுகப்பக்கத்திலே,

"வணிக மென்பொருட்களாக வரும் வானூர்தி போன்மி மென்பொருட்களில் இருக்கும் மிகப்பெரிய குறையான, மூடப்பட்ட நிலைக்கு மாற்றாக, நீட்டிக்கப்படக்கூடிய, பெரும் பரப்பிலான சாத்தியங்களை வழங்கக்கூடிய, பறப்புப் பயிற்சிகளை முறையாக வழங்கக்கூடிய மென்பொருள் " என்று குறிப்பிடுகிறார்கள்.

வானூர்திகளின் உண்மையான உள்ளமைப்பைப், பௌதீகத் தத்துவங்களை உள்வாங்கி, அப்படியே தந்திருப்பது இதன் சிறப்பு.

ஏறத்தாழ உண்மையாகவே வானூர்தி ஒன்றினை ஓட்டிப்பார்க்கும் அனுபவத்தை இந்த விளையாட்டு உங்களுக்குத்தரும்.


இது உண்மையில் ஒரு கற்றல் மென்பொருள்.
இதனை பயன்படுத்த நீங்கள் சற்றே ஆழமாக சில விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆரம்பநிலை மாணவர்களுக்கு உதவக்கூடிய வழிகாட்டி ஒன்று இணையத்தில் கிடைத்தது.

இம்மென்பொருளின் வலைமனையில் ஏராளமான வானூர்திகள், வானூர்தித்தளங்கள், சிறப்புப் பொருத்துக்கள் போன்றவற்றை தரவிறக்கிக்கொள்ளலாம்.



இப்பொழுது நான் ஓரளவு பறக்கக்கற்றுக்கொண்டுவிட்டேன். சில நிமிடங்கள் அலுங்காமல் குலுங்காமல் பறப்பில் ஈடுபட முடிகிறது. ஆனால் தரையிறங்கத்தான் தெரியவில்லை.

நீங்களும் விளையாடிப்பாருங்கள்.



உபுண்டுவில் இம்மென்பொருளை நிறுவுவதற்கான ஆணை,

sudo apt-get install flightgear

மற்றைய வழங்கல்களில் பொதி முகாமைத்துவ செயலியில் flightgear என்று தேடி நிறுவுங்கள்.

பொதிகளை நேரடியாகத் தரவிறக்கி நிறுவ வலைமனைக்கு போய்ப்பாருங்கள்.


----



வானூர்தி, பறப்பு, தரையிறக்கம், வான் தாக்குதல், பறப்பில் ஈடுபடுதல், வானோடிகள், வான்படை......

எவ்வளவு அழகான தமிழ்ச்சொற்கள்!

இந்த விளையாட்டை விளையாடும்போது நண்பர்கள் வாயில் அநாயாசமாக இந்தச் சொற்கள் வந்துபோகின்றன.

ஈழப்போர் நல்ல தமிழ்ச்சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது. இயல்பாக புழங்கச்செய்கிறது.



----


ஒரு பாடலின் சில வரிகள்...


"ஆழக்கடல் நேற்றெமக்கு
நீல வானம் இன்றெமக்கு
நாளை தமிழ் ஈழமதும் எமக்குத்தான்! -புலி
வானமேறிப் போனதுவும் இதுக்குத்தான்

நூறு வருடங்கள் நெஞ்சில் இருந்திட்ட கனவு பலித்தது -நேற்று
நீரு கொழும்பிற்கு மேலே இருந்திட்ட நிலவும் சிலிர்த்தது.

நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது -புலி
இளவல் நான்கு பறந்துபோன அழகைப்பார்த்தது!"

பாடல் கேட்க

13 comments:

said...

தமிழ்க் கட்டளைகளோடே விளையாட்டு வருகிறதா?
நீங்கள் சொன்ன குறிப்பு இப்படியொரு பொருள் தருகிறது.

சரி. இல்லாவிட்டால் நீங்களே முயன்று தமிழையும் சேர்த்து ஒரு பொதியை வெளியிட்டு விடுங்கள்.
நாங்களும் பறக்கப்பழகுவோம்.

எவ்வளவு காலத்துக்குத்தான் புலிகளையே நம்பிக்கொண்டிருப்பது?

said...

முதலில் தலைப்பை பார்த்து உள்ளே புகாமலே நழுவிவிட்டேன்.மறுபடியும் எதோ ஒன்று உந்த நம்ம மயூரன் பதிவில் ஏதோ ஒன்று இருக்கும் என்று எண்ணி வந்தால் .. அருமையான மென்பொருளை கொடுத்துள்ளீர்கள்.
எனக்கும் பறக்கவேண்டும் என்று ஆசை தான் ஆனால் வசதியும்,வயதும் கொஞ்சம் இல்லை,அந்த குறையை தீர்க்க 6 வருடங்களுக்கு முன்பு பிளைட் ஸ்டுமிலேட்டர் வாங்கி விளையாடி தீர்த்துக்கொண்டேன்.அதன் பிறகு ஒரு நாள் சிங்கையில் உள்ள சயின்ஸ் சென்டரில் இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கும் போது வெகு நேரம் வானில் இருப்பதை பார்த்த காவலாளி என்னை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
உண்மையிலே இந்த மாதிரி மென்பொருட்கள் நம் கற்பனையை இன்னும் விரிவாக்கிவிடுகிறது.

said...

மயூரன்!

வலைப்பதிவில் தீ விரமா(சூடான)கப் பதிந்து கொண்டிக்கும் ஒருத்தருக்கு இது மிகவும் உதவியான தகவலாய் இருக்கப் போகிறது.

இனிக் கொஞ்சகாலத்துக்கு அவர் இதில பறந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறன்.

said...

தகவலுக்கும் பாடலுக்கும் நன்றி.

இதிலை மருந்தடிக்கலாமோ?:)

said...

அண்ணோய்.. உப்பிடியே.. மீன்பிடிப் படகுகளை வைத்து விளையாடும் விளையாட்டு ஏதும் இருக்கோ.. இருந்தால் சொல்லுங்கோ.. ஒராளுக்கு தேவைப் படுது.. கொடுத்தால் அவர் அதோடை இருப்பார். தேவையில்லாமல் உண்மையான மீன்பிடி படகுகளோடு விளையாட மாட்டார்.

said...

//இப்பொழுது நான் ஓரளவு பறக்கக்கற்றுக்கொண்டுவிட்டேன். சில நிமிடங்கள் அலுங்காமல் குலுங்காமல் பறப்பில் ஈடுபட முடிகிறது. ஆனால் தரையிறங்கத்தான் தெரியவில்லை.//

அதுக்கென்ன?

எங்கயாவது பொறுத்த இடமாப் பாத்து மோதிவிட்டியளெண்டாச் சரிதான்.;-)

said...

Really, it is good one.

I played with Microsoft simulator.

My favorite is flying upside down almost all the flight :).
I missed this only in 747.

said...

அப்ப நானும் சொந்த விமானம் வாங்கலாமோ? நல்ல முயற்சி.

said...

மிக அருமையான பதிவு.
வின்டோஸ் இயங்கு தளத்தில் செயலாற்றாது என்பது தான் வருத்தம்
காரணம் என்னிடம் லினக்ஸ் இயங்கு தளம் இல்லை.
லினக்ஸ் இயங்கு தளம் வைத்திருக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை தந்திருக்கிறது.

நன்றி பதிவுக்கு

said...

//கீர்த்தனா said...
மிக அருமையான பதிவு.
வின்டோஸ் இயங்கு தளத்தில் செயலாற்றாது என்பது தான் வருத்தம்//

FlightGear வின்டோஸூக்கும் கிடைக்கிறது. மேலும் Live CD மூலம், கணினியில் நிறுவாமல், நேரடியாகவே பாவிக்கலாம்.

said...

//வின்டோஸ் இயங்கு தளத்தில் செயலாற்றாது என்பது தான் வருத்தம்//

யார் சொன்னது..? அப்படியொன்றும் மயூரன் சொல்ல வில்லையே.. வின்டோசிலும் பறக்கிறது.. அவர்களது தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்படுத்துங்கள்.

said...

பறக்கத் தெரியாதவன் தமிழனா என்று நீங்கள் கேள்வி கேட்டு நான் உணர்ச்சி வசப்பட்டு. அந்த சிமுலேட்டரை பதிவிறக்கி பறந்து பறந்து இப்ப கனவிலயும் பறந்துகொண்டு இருக்கிறன். பெரிய பெரிய ஜெட் இயந்திரம் பொருத்தி யுத்த விமானம் எல்லாம் ஓட்டிப் பார்த்துவிட்டேன். என்ன மேல் எழும்புவதை விட தரையிறங்குவதுதான் படு கஷ்டம். நிலத்தில போய் விமானம் குத்திக்கொண்டு நிற்கும்.

ஆனால் இந்த மென்பொருள் அவ்வளவு நிலையானதாகத் தோன்றேல (Stable). அடிக்கடி கணனி தொங்கி (Hang) விடுகின்றது. வர்த்தக ரீதியான மென்பொருள் என்பதில்லை என்பதனால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்..

மைக்ரோசாப்டின் பிளைட் சிமுலேட்டர் ஒன்று எம்.சியில கண்டனான் அதை வேண்டி ஒருக்கா விமானம் ஓட்டவேண்டும் என்று இப்ப முடிவெடுத்திட்டன்.

said...

நான் Airbus விமான நிறுவனத்தின் இது போன்ற ஒரு Simulation வகுப்புக்கு சென்றிருக்கிறேன் (at Hamburg, Germany). அற்புதமான அனுபவம். ஆனால் கணினி Simulatorகளில் சரியான கட்டுப்பாட்டு கருவிகள் இல்லாமல், தட்டச்சு பலகை கொண்டு விமானம் ஓட்டுவது கொஞ்சம் நகைச்சுவையாகத்தான் இருக்கும்!