உபுண்டுவின் அண்மைய பதிப்பு வெளிவந்த நாள் தொட்டு இது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. VCD வேலை செய்யாமல் அடம்பிடித்துக்கொண்டிருந்தது.
அண்மைய பதிப்பு வந்ததிலிருந்து மிக அவசரமாக எந்தப்படமும் பார்க்கவேண்டியிருந்திராதபடியினால் இந்தப்பிரச்சினை எனக்குத் தலையிடியாக இருக்கவில்லை. நான் உபுண்டு நிறுவிக்கொடுத்த நண்பர்கள் நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.
இன்றைக்கு வீதியில் பெரியார் படத்தின் திருட்டு நகல் ஒன்றினை வாங்கிக்கொண்டுவந்து பார்க்கமுயன்றபோதுதான் இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உந்துவிசை கிடைத்தது.

இயல்பிருப்பாக உபுண்டுவோடு வரும் Totem ஊடக இயக்கி வழுச்செய்தி ஒன்றினை தந்துகொண்டிருக்கிறது.
மற்றைய மென்பொருட்களும் ஏதாவது சொல்லிவிட்டுப் பேசாமலிருந்துவிடுகின்றன.
கடைசியாகப் பிரச்சினையை கூகிளாண்டவரிடம் முறையிட்டபோது தீர்வு கிடைத்தது.
பிரச்சினையின் மூலகாரணத்தை இன்னமும் அறியமுடியவில்லை.
வழங்கலின் வழுவாக இருக்கலாம்.
அதுவரை இந்த வழிமுறையைப் பின்பற்றிப் படம் பாருங்கள்.
1. mplayer மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்
sudo apt-get install mplayer
2. முனையத்தை (terminal) திறந்துவைத்துக்கொள்ளுங்கள்.
3. பின்வரும் ஆணையை வழங்குங்கள்
mplayer vcd://2
இப்பொழுது உங்கள் இறுவட்டு இயங்கும்.
முழுத்திரையில் பார்க்கவேண்டுமானால் f விசையினை உங்கள் விசைப்பலகையில் அழுத்துங்கள்.
முன்னே பின்னே ஓடவிட்டுப் பார்க்க அம்புக்குறிகளைப் பயன்படுத்துங்கள்.
நிறுத்த, முழுத்திரை இயக்கத்தை நிறுத்த esc விசையினைப் பயன்படுத்துங்கள்.
ஏனைய உதவிகளுக்கு
man mplayer
என்ற ஆணை மூலம் உதவிக்குறிப்புக்களை பெறலாம்.
mplayer vcd://2 ஆணை வேலைசெய்யாவிட்டால்
mplayer vcd://1
mplayer vcd://
போன்ற ஆணைகளை முயன்றுபாருங்கள்.
ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டாலோ பின்னூட்டம் மூலம் உரையாடுங்கள்.