இப்பதிவு கட்டற்ற மென்பொருளோடோ க்னூ லினக்சோடோ நேரடியான சம்பந்தமுடையதல்ல.
ஆனால் கணிமை உலகின் கவனிக்கத்தகுந்த மாற்றங்களுள் ஒன்றினை இச்செய்தி குறிகாட்டுவதாகப் படுவதால் இங்கே பகிரப்படுகிறது.
கூகிள் தேடுபொறியின் படங்களைத்தேடும் பொறியில் புதிய வசதி ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
நீங்கள் தேடும் குறிச்சொல்லுக்கான கோட்டுப்படம் வேண்டுமா, ஒளிப்படம் வேண்டுமா, Clip art வேண்டுமா அல்லது முகங்கள் வேண்டுமா எனத் தேடு பொறிகொண்டு தீர்மானிக்கக்கூடிய வசதிதான் அது.
இதுவரை காலமும் தேடு பொறிகள் எழுத்துக்களை மட்டுமே வாசித்தன. பின்னர் அண்மையில் படங்களாக உள்ள எழுத்துக்களை ஒளிசார் எழுத்துணரி கொண்டு வாசித்துத் தேடும் வசதிகள் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் அதுவும் கூட எழுத்துக்கள் தொடர்பானதே.
தற்போது வந்திருக்கும் இந்த வசதி படங்களை வாசிக்க தொடங்கியிருக்கிறது.
படவுணர்தல் (Image Recognition) தொழிநுட்பம் புதியதல்ல. ஒத்த படங்களைத் தேடிக்கண்டறியவும் படத்தின் நிறங்களை முடிந்தவரை ஆய்ந்தறியவும் வல்ல மென்பொருட்கள் பயன்பாட்டிலுள்ளன.
எனது கணினியிலும் கூட அவ்வப்போது ஒத்த படங்களைத் தேடிக் களைய இவ்வாறான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளேன்.
கூகிள் குரோம் வெளியிடப்பட்டபோது, தன்னியக்க முறையில் மில்லியன் கணக்கான வலைப்பக்கங்களுடன் அதனைச் சோதனை செய்ய இவ்வாறான படவுணர்தல் தொழிநுட்பமே பயன்படுத்தப்பட்டதாக அதன் ஆவணங்களில் தெரிவித்திருந்தார்கள்.
படங்களின் hash பெறப்பட்டு அது ஒப்பிடப்படுதல்.
இதன் அடுத்த படிக்கே கூகிள் இப்போது நகர்ந்திருக்கிறது.
படங்களின் சூத்திரம், படங்களின் வகைகளுக்குள் பொதிந்திருக்கும் "கோலங்கள்" இவற்றைப்பயன்படுத்தும் தேடும் முறையைக் கொண்டுவந்திருக்கிறது.
இது வேறு பல இடங்களில் ஏற்கனவே சோதிக்கப்பட்டதாயினும் தேடுபொறியொன்றில் இதனைப்பொருத்தும் சிந்தனை புதியது.
முகங்கள் கொண்ட படங்களைப் பிரித்தறிதல் இதன் சுவையான பெறுபேறு.
படங்களின் "கோலங்களை" அதன் சமன்பாடுகளை ஆய்வு செய்யும் இப்புதிய ஆய்வுப்பாதை இன்னும் சுவையான, ஆக்கபூர்வமான பல பெறுபேறுகளை மனிதருக்குப் பெற்றுத்தரும்.
தனக்கான மட்டுப்பாடுகளுடன் இதன் சாத்தியங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது.
சிறுவயதில் அம்மம்மா வீட்டில் இருந்த ஒலிநாடா இயக்கி (tape player) ஒன்று இத்தனையாவது பாடல் வேண்டும் என்று விசையை அழுத்தினால் சரியாக அந்தப்பட்டின் தொடக்கத்தில் போய் நிற்பது கண்டு புல்லரித்து வியந்திருக்கிறேன். (அப்போது இறுவட்டுக்கள் வரத்தொடங்கிய காலம்) பின்னர், பாடல் முடிவில் ஒரு ஒலியற்ற இடைவெளி இருக்கும் எனும் எளிய கோலம் தான் இந்த வசதியின் சூத்திரம் என்று ஒலியற்ற இடைவெளிகள் சிலவற்றை பதிவு செய்து சோதித்துத் தெளிந்துகொண்டேன்.
படங்களைப் படிக்கும் முறையும் இவ்வாறானதே.
இனி படங்களில், அசைபடங்களில், ஒலிக்கோப்புக்களில் உள்ள கோலங்களை அறிந்து உணர்ந்து தேடித்தரும் வசதிகளை மனிதர் மனிதருக்கு வழங்கத்தொடங்குவர்.
இசை என்ற குறிச்சொல்லில் தேடி, தவில் இசை மட்டும் கொண்ட ஒலிக்கோப்புக்கள் வரும்படியாக தேடலை வடிகட்டிக்கொள்ளும் வசதி உபயோகமானதுதானே?
Monday, December 22, 2008
Subscribe to:
Posts (Atom)