Saturday, September 29, 2007

[GNU] பாட்டுக்கேட்டபடியே படிப்பதற்கு ஒரு மென்பொருள்.

கணினியில் பாடல் ஒன்றினைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாடல் பிடித்துப்போய்விட்டது. பாடலை எழுதியவர் யார் என்ற தகவலை உங்கள் ஒலிச்செயலி (media player) தருகிறது.

சு. வில்வரெத்தினம் எழுதிய பாடல் என்று வைத்துக்கொள்வோமே. உங்களுக்கு அவரைப்பற்றித் தெரியாது. உங்கள் ஒலிச்செயலியின் விசை ஒன்றினைச்சொடுக்கிய உடனே சு. வில்வெரெத்தினம் பற்றிய சகல தகவல்களையும் தமிழிலேயே படங்களுடன் உங்களுக்கு அச்செயலி தருமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இளையராஜாவின் திருவாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். திருவாசகம் பற்றியும், இளையராஜா பற்றியும் தகவல்கள அனைத்தையும் பாடல் கேட்டபடி ஒலிச்செயலியிலிருந்தே தமிழில் பெற முடிந்தால் எப்படி இருக்கும்?


முதலாவது, இப்படியான சிறப்பு வசதிமிக்க ஒலிச்செயலியை எந்த இழிச்ச வாய்ச்சியும் வாயனும் உங்களுக்கு இலவாமாகத் தர மாட்டார்கள். அத்தோடு, இப்படி நீங்கள் கேட்கும் பாடல்களின், உரைகளின் கலைஞர்கள் பற்றிய தகவல்களை எல்லாம் எவராவது உட்கார்ந்து தமிழில் தட்டெழுதி பராமரித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அப்படியே பராமரித்தாலும் நல்லாத்தந்தாங்க போங்க இலவசமா!

அப்படியானால் இந்த வசதி எப்படிக் கிடைக்கும். தோழர் மருதய்யனின் பேச்சைக் கேட்டபடியே அவரைப்பற்றியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் பற்றியும் எப்படித் தமிழில் தகவல் பெறுவது? இலவசமாகவே?

எங்கே தகவல்கள் அனைத்தும் பெருமெடுப்பில் தொகுக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது? எங்கே நீங்களும் பங்குபற்றக்கூடியதாய் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மனிதர்களால் இரவுபகலாகத் தகவல்கள் தமிழில் தொகுக்கப்படுகின்றன?

வி..

வி....

விக்கிபீடியா!
தமிழ் விக்கிபீடியா!


இப்பொழுது உங்களுக்குப் பொறிதட்டுகிறதா?

இந்த விக்கிபீடியாவின் தாவல்களை உங்கள் ஒலிச்செயலி உங்களுக்காகக் கறந்து தனது சாளரத்திலேயே தேவையானபடி காட்டினால் மேலே சொன்ன வசதி சாத்தியம் தானே?

தமிழிலேயே விக்கிபீடியா இருக்கும் போது இது தமிழுக்கும் சத்தியம் தானே?

உங்களுக்காகத் தன்னார்வலர்கள் பலர் ஒன்றுகூடி இப்படியான ஒலிச்செயலி ஒன்றினை வடிவமைத்திருக்கிறார்கள்.

அநேகமாக க்னூ/லினக்ஸ் பயன்படுத்தும் இசைப்பிரியர்கள் அனைவரும் நன்கறிந்திருக்கக்கூடிய சிறப்பான இசைக்களஞ்சிய முகாமையாளரும். ஒலிச்செயலியுமான Amarok தான் அது.

அமாரொக், அன்றாடம் கணினியில் இசை கேட்பவர்களுக்குத் தேவைப்படும் சகல வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதுடன் இந்தச் சிறப்பு வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

உங்கள் மொழியிலேயே விக்கிபீடியாவில் இருந்து தகவல் கறத்தல், பாடல் வரிகளைத் தேடல் என்று ஏராளம் வசதிகள்.

இந்தப்படத்தைப் பாருங்கள். வைரமுத்துவின் பாடலைக் கேட்டபடி அவரைப்பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.


இயல்பிருப்பாக ஆங்கில விக்கிபீடியாவிலிருந்தே தகவல்கள் கறக்கப்படுகின்றன. நீங்கள் தமிழ் விக்கிபீடியாவுக்கு மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். மாற்றும் முறையைப் படம் விளக்குகிறது.



சரி,

நீங்கள் தேடும் நபர் பற்றியோ அல்லது இசைத்தொகுப்புப் பற்றியோ தகவல்கள் தமிழ் விக்கிபீடியாவில் இல்லாவிட்டால் என்ன செய்வது?

அப்படி ஒரு சந்தர்ப்பம் நேரும்போது உங்கள் கடமை என்ன/?
திறந்த இலவசமான எவருக்கும் உரிமையுள்ள அந்த கலைக்களஞ்சியதுக்கு நீங்கள் தானே தகவல்களை வழங்க வேண்டும்?
அது உங்கள் கடமை மட்டுமல்ல. உங்கள் உரிமை.

அமாரொக் இல் இருந்தபடியே நீங்கள் விக்கிபீடியாவில் தகவல்களைத் தட்டெழுதிச் சேர்க்க முடியும்.

படத்தைப்பாருங்க.

சபேஷ் முரளி பற்றி விக்கிபீடியாவில் தகவல் இல்லை. கட்டுரைய உருவாக்கும்படி விக்கிபீடியா கேட்கிறது. நீங்கள் அந்த தொடுப்பை அழுத்தியதும் நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உலாவியில் புதிய கீற்றில் விக்கிபீடியாவைத் தொகுத்தலுக்கான பக்கம் திறக்கிறது.



இசைப்பிரியரான உங்களுக்கு அந்த இசையமைப்பாளரைப்பற்றி ஏதாவது தெரிந்திருக்கும் தானே? தெரிந்ததை தட்டெழுதிச் சேமித்துவிட்டு வாருங்கள்.
நாளைக்கு எவருக்காவது, ஏன் உங்களுக்கும்கூடப் பயனப்டும்.

குறிப்பு: இந்த வசதிகள் தமிழில் கிடைக்க வேண்டுமானால் உங்கள் பாடற் கோப்புக்கள் அனைத்தும் தமிழ்ப் பெயருடன் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு பாடல் விபரங்களும் தமிழில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆங்கிலம் தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் பெறலாம்.